சோதனைகளைப் பொறுத்துக் கொள்வோம்
செல்வங்களை சேதப்படுத்தி, வறுமையை ஏற்படுத்தி, உயிர்கள் பறிக்கப்பட்டு சோதனைக்கு உள்ளாக்கப்படுவோம். பல்வேறு சோதனைகளைக் கொண்டு இறை நம்பிக்கையாளர்கள் சோதிக்கப்படுவார்கள் என்று கீழ்க்கண்ட வசனம் கூறுவதுடன், அந்த சோதனையின் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளையும் அல்லாஹ் கற்றுத்தருகிறான்.
ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது “நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்” என்று அவர்கள் கூறுவார்கள். அவர்களுக்கே தமது இறைவனின் அருள்களும், அன்பும் உள்ளன. அவர்களே நேர் வழி பெற்றோர்.
அல்குர்ஆன் 2:155, 157
உங்களில் தியாகம் செய்தோரையும், பொறுமையாளரையும் அடையாளம் காட்டிட உங்களைச் சோதிப்போம். உங்கள் செய்திகளையும் சோதிப்போம்.
அல்குர்ஆன் 47:31
உங்கள் செல்வங்களிலும், உயிர்களிலும் சோதிக்கப்படுவீர்கள். உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்தும், இணை கற்பித்தோரிடமிருந்தும் ஏராளமான சங்கடம் தரும் சொற்களைச் செவியுறுவீர்கள். நீங்கள் சகித்துக் கொண்டு (இறைவனை) அஞ்சினால் அது உறுதி மிக்க காரியங்களில் ஒன்றாகும்.
அல்குர்ஆன் 3:186
இழப்புகள் ஏற்படும் போது சகித்துக் கொள்வது
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் கூறுகிறான்: நான் என் அடியானை, அவனது பிரியத்திற்குரிய இரு பொருட்களை(ப் பறித்து)க்கொண்டு சோதித்து, அவன் பொறுமை காப்பானேயானால், அவற்றுக்கு பதிலாக சொர்க்கத்தை நான் அவனுக்கு வழங்குவேன். (அவனுடைய பிரியத்திற்குரிய இரு பொருட்கள்’ என்பது) அவருடைய இரு கண்களைக் குறிக்கும்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி),
நூல் : புகாரி 5653
இந்த உலகத்தில் அல்லாஹ் தந்த செல்வங்களை நாம் அனுபவிக்க வேண்டும் என்றால் அதற்கு கண்கள் மிகவும் அவசியமாகும். உதாரணமாக நாம் இந்த கண்ணிருப்பதால் தான் அதிகம் பணம் சம்பாதிக்கிறோம், அதிக செலவு செய்கிறோம். நாம் அழகான ஆடை வாங்குகிறோம். அழகான வீட்டை வாங்குகிறோம். எல்லாப் பொருளையும் அழகானதென்று தேர்ந்தெடுத்து வாங்குவதற்கு காரணம் இந்த கண் தான். எனவே இந்த ஒரு மிகப்பெரிய பாக்கியத்தை அல்லாஹ்விற்காக நாம் இழப்பதின் காரணத்தினால் அல்லாஹ் நமக்கு செர்க்கத்தை தருகிறேன் என்று கூறுகிறான். அதற்காக நாம் புலம்பக் கூடாது. அல்லாஹ்வை திட்டாமல், நாம் பொறுமையாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் நமக்குச் சுவனம் கிடைக்கும்.