மரணித்தவருக்காக யாசீன் ஸூரா ஓதலாமா?
குர்ஆனின் யாசீன்(36வது) ஸூராவை ஒருவர் மரணித்தவுடன் அவரது உடலுக்கு அருகில் அமர்ந்து சிலர் ஓதி வருகின்றனர். இதன் பின்னர் குறிப்பிட்ட நாட்களிலும் யாசீன் ஸூராவை ஓதுகின்றனர்.
இவ்வாறு செய்வதற்கு ஆதாரமாக சில ஹதீஸ்களை எடுத்துக் காட்டுகின்றனர்.
‘உங்களில் இறந்தவர் மீது யாஸீன் ஓதுங்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு ஹதீஸ் உள்ளது.
அறிவிப்பவர்: மஃகில் பின் யஸார் (ரலி)
நூல்கள்: அபூ தாவூத் 2714, இப்னு மாஜா 1438, அஹ்மத் 19416, 19427 ஹாகிம் 1/753
மேற்கண்ட ஹதீஸ்களில் அபூ உஸ்மான் என்பவர் தமது தந்தை கூறியதாக அறிவிக்கிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அபூ உஸ்மான் என்பவரும், அவரது தந்தையும் யார் என்று அறியப்படாதவர்கள் என்று ஹதீஸ் துறை வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்படும் எந்த ஹதீஸாக இருந்தாலும் அதை அறிவிப்பவருக்கு வரலாறு இருக்க வேண்டும். அவரது நினைவாற்றல், நாணயம் நிரூபிக்கப்பட்டிருக்க வேண்டும். மேற்கண்ட இருவரும் யார் என்றே தெரியாததால் இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.
அபூ உஸ்மான் என்பவர் தனது தனது தந்தை பெயரைப் பயன்படுத்தாமல் மஃகில் பின் யஸார் வழியாக நேரடியாக அறிவிக்கும் சில ஹதீஸ்கள் உள்ளன. பைஹகி, இப்னு ஹிப்பான் மற்றும் சில நூல்களில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது. அபூ உஸ்மான் என்பவர் யார் என்று அறியப்படாதவர்(மஜ்ஹூல்) என்பதால் இதையும் ஆதாரமாகக் கொள்ள முடியாது.
பைஹகியின் மற்றொரு அறிவிப்பில் மஃகில் பின் யஸார் வழியாக ஒரு மனிதர் கூறியதாகக் குறிப்பிடப்படுகிறது. ஒரு மனிதர் என்றால் யார்? அவரது நம்பகத் தன்மை எத்தகையது என்பதை யாரும் அறிய முடியாது. எனவே இதுவும் பலவீனமான அறிவிப்பாகும்.
இவை அனைத்துமே பலவீனமாக உள்ளதால் இறந்தவர்களுக்கு அருகில் அல்லது இறந்தவரின் நன்மைக்காக யாஸீன் ஓதுவதற்கு ஆதாரம் இல்லை.
மரணத்தை நெருங்கியவரின் அருகில் யாசீன் ஓதினால் அவரது வேதனை இலேசாக்கப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக முஸ்னத் அல்ஃபிர்தௌஸ் என்ற நூலில் ஒரு ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதை அறிவிக்கும் ஸாலிம் பின் மர்வான் என்பவர் பலவீனமானவர்.
யாசீன் என்பது 114 ஸூராக்களில் ஒரு ஸூரா. மற்ற ஸூராக்களை நமது நன்மைக்காக நாம் ஓதுவது போல யாசீனையும் நமது நன்மைக்காக ஓதலாமே தவிர மரணித்தவரின் நன்மைக்காக இதை ஓதுவதற்கு அனுமதியில்லை.