பள்ளிவாசல்களில் சொல்லப்படும் தக்பீர் குறித்த
அனைத்தும் செய்திகளும் பலவீனமானவையே
அரஃபா தினம் ஃபஜ்ர் தொழுகையில் இருந்து அய்யாமுத் தஷ்ரீக் இறுதி நாள் ( துல்ஹஜ்.13.) அஸர் தொழுகை வரை அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் – லா இலாஹ இல்லலாஹு அல்லாஹு அக்பர் – அல்லாஹு அக்பர் வ லில்லாஹில் ஹம்து – என்று ஓத வேண்டும் என்று சிலரால் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
இதை மத்ஹபு ஜமாஅத்தினரும் நடைமுறைப் படுத்தியும் வருகின்றனர்.
இப்படி ஒரு தக்பீரை நபி (ஸல்) அவர்கள் கூறியதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. நபித்தோழர்கள் இதை நடைமுறைப்படுத்தியதாக சில செய்திகள் உண்டு.
நபித் தோழர்கள் செயல்படுத்தியதாக வரும் செய்திகளும் பலவீனமானது.
செய்தி 01 நபித்தோழர் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் இதை நடைமுறைப்படுத்தியதாக :- முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-5491’ல் இடம்பெற்றுள்ளது. இந்த செய்தியில் இடம்பெற்றுள்ள அபீ இஸ்ஹாக் என்பவர் தனக்கு அறிவித்த அறிவிப்பாளரை இருட்டடிப்புச் செய்பவர் ( தத்லீஸ்) ஆவார். இவர் தனக்கு அறிவித்ததாக கூறும் அல்அஸ்வத் பின் யஸீத் அவர்களிடம் தான் கேட்டதை உறுதிப்படுத்தும் விதமாக இந்த செய்தியை இவர் அறிவிக்கவில்லை :- எனவே இந்த செய்தி பலவீனமானது ஆகும்.
மேலும் இதே போன்ற ஒரு செய்தி :- அல்ஆஸார் லி அபூ யூசுஃப்- 292’ல் இடம்பெற்றுள்ளது . இந்த செய்தியில் இடம்பெற்றுள்ள ஹம்மாது பின் முஸ்லிம் என்பவர் பலவீனமானவர் ஆவார்
செய்தி 02 நபித்தோழர் அப்துல்லாஹ் பின் அப்பாஸ்( ரலி) அவர்களும் நடைமுறைப்படுத்தியதாக :- முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-5504-ல் இடம் பெற்றுள்ளது. இந்த செய்தியை அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து அவரது அடிமை இக்ரிமா அறிவிக்கிறார் . இக்ரிமா – பொய்யர் – ஹதீஸில் குளருபடி செய்பவர் – இவரது ஹதீஸ்கள் ஆதாரமாக ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் விமர்சனங்கள் செய்துள்ளார்கள். எனவே இதுவும் பலவீனமானதாகும்.
செய்தி 03 அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி)அவர்கள் அரஃபா தினத்தின் ஃபஜ்ர் தொழுகையில் இருந்து யவ்முன் நஹ்ர் ஹஜ் பெருநாள் அன்று அஸர் தொழுகை வரை இதை நடைமுறைப்படுத்தியதாக :- முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-5509’ல் இடம்பெற்றுள்ளது. இந்த செய்தியில் மேலே கண்ட அபீ இஸ்ஹாக் என்பவரே இடம் பெற்றுள்ளார். இதை நடைமுறைப்படுத்துவது பெருநாள் தினம்வரை என்றும் தஷ்ரீக் உடைய இறுதி நாள் வரைக்கும் என்றும் முரண்பாடு வருகிறது.
செய்தி 04
அலீ (ரலி) அவர்களும் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் அவர்களும் அரஃபா தினத்தன்று இதை செயல்படுத்தியதாக :- முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-5510’ல் இடம்பெற்றுள்ளது. இந்த செய்தியிலும் அபூ இஸ்ஹாக் என்பவரை இடம்பெற்றுள்ளார்.
செய்தி 05 அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் அரஃபா தினத்தன்று இதை செயல்படுத்தியதாக :- முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-5512’ல் இடம்பெற்றுள்ளது . இந்த செய்தியில் மேலே கண்ட இக்ரிமா என்பவரே இடம் பெற்றுள்ளார். மேலும் இதில் மட்டும் ஒரு முரண்பாடாக அரஃபா தினத்தன்று என்று வருகிறது. ஆகவே இந்த தக்பீர் நடைமுறையை நபி (ஸல்) அவர்களும் கூறவில்லை – நபித்தோழர்கள் செய்தார்கள் என்பதும் பலவீனமான செய்திகளாகவும் உள்ளன. நபித்தோழர்களுக்கு வஹீ இறைச் செய்தி வரவில்லை.
நபி (ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நபித்தோழர்கள் செய்தாலும் அது மார்க்கமாக ஆகாது – எனவே இந்த பித்அத் நூதன தக்பீரை கூறுவது கூடாது. இதை செயல்படுத்தக் கூடாது.
செய்தி 06
மேற் கண்ட தக்பீரை தஷ்ரீக் உடைய நாட்களில் கூற வேண்டும் என்று அலீ (ரலி) அவர்கள் கூறியதாகவும் :- இரு பெருநாள் தொழுகை மற்றும் நஃபில் தொழுகைகளைத் தவிர – வருடத்தில் அனைத்து நாட்களிலும் அனைத்து தொழுகைகளிலும் ஆண்கள் பெண்கள் ஜமாஅத்துடன் தொழுபவர் தனித்து தொழுபவர் ஊரில் இருப்பவர் பயணத்தில் இருப்பவர் அனைவரும் இதை ஓத வேண்டும் என்று ஸைத் பின் அலீ அவர்கள் கூறியதாகவும் :- முஸ்னது ஸைத்-132’ல் இடம் பெற்றுள்ளது. இந்த செய்தியில் நபி ஸல் அவர்கள் கூறியதாக இடம் பெறவில்லை எனவே இதுவும் ஆதாரமாக ஏற்றுக் கொள்ளத்தக்க செய்தி அல்ல.
செய்தி 07
இந்த தக்பீரை அரஃபா தினத்தன்று கூறுபவர்களாக இருந்தார்கள் என்று இப்ராஹீம் என்பவர் கூறியதாக :-முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-5508’ல் இடம்பெற்றுள்ளது. இதை கூறியது யார் என்ற விபரத்தை இப்ராஹீம் என்பவர் கூறவில்லை – எனவே முழு விபரங்கள் இல்லாத செய்தியும் ஆதாரங்களாக ஏற்றுக் கொள்ளத்தக்க செய்தி அல்ல.
செய்தி 08 அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் வ லில்லாஹில் ஹம்து என்று அனைத்து (நாட்களிலும் உள்ள அனைத்து) தொழுகைக்கு பிறகு மூன்று முறை :- உமர் பின் அப்துல் அஸீஸ் என்ற மன்னர் ஓதியதாக :- அத்தப்காத்துல் குப்ரா லி இப்னு ஸஃது- 6472’ல் இடம்பெற்றுள்ளது. நபி ஸல் அவர்கள் கூறியதாக செய்ததாக அல்லது அங்கீகாரம் செய்ததாக ஆதாரப்பூர்வமாக வரும் ஹதீஸ்கள் மட்டுமே மார்க்கமாகும். நபித்தோழர்கள் செய்தது கூட மார்க்கமாக ஆகாது என்னும் போது – உமர் பின் அப்துல் அஸீஸ் என்கிற மன்னர் செய்தது எப்படி மார்க்கமாக ஆகும்.? ஆகவே இதுவும் ஏற்றுக் கொள்ளத்தக்க செய்தி அல்ல.
அல்லாஹு அக்பர் என்ற தக்பீரை பெருநாள் தினத்தில் அதிக சப்தமில்லாமல் சொல்வதே சரியான வழிமுறை ஆகும்.