அற்புதமான உதவி

இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டு, மனம் தளர்ந்து விடாமல் படைத்த இறைவனை உளமாற நம்புபவர்களை அல்லாஹ் ஒருபோதும் கைவிட மாட்டான். அவர்களுக்கு அறியாப் புறத்திலிருந்து தன்னுடைய உதவியை இறக்குவான் என்பதாகும்.
அல்லாஹ்வின் அற்புதமான உதவியை, அல்லாஹ்வை உளமாற ஏற்றுக் கொண்டு, மனம் தளராமல் பயணிக்கின்ற ஏராளமான நபிமார்களுக்கும் நல்லவர்களுக்கும் வழங்கி இருக்கின்றான் என்பதே நமது கண்களுக்கு முன்னால் கொட்டிக் கிடக்கின்ற நிதர்சனமான சான்று.

நெருப்பிலிருந்து காப்பாற்றப்பட்ட இப்ராஹீம்நபி
அல்லாஹ் மனிதர்களில் ஒருவரைத் தன்னுடைய உற்ற நண்பனாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டான் என்றால் அந்த மாமனிதர் இப்ராஹீம் (அலை) அவர்கள் மட்டும் தான். இப்ராஹீம் (அலை) அவர்கள் இஸ்லாத்தைக் கடைப்பிடிக்கின்றார்கள்; ஓரிறைக் கொள்கையை வாழ்க்கை நெறியாக ஏற்று நடக்கின்றார்கள்; பல கடவுள் கொள்கையை எதிர்த்து நிற்கின்றார்கள்; பல கடவுள் கொள்கைக்கு ஆதரவாக நிற்கின்ற நபர்களையும் எதிர்த்துப் பிரச்சாரம் செய்கின்றார்கள்; இதுபோன்ற ஏராளமான காரியங்களை தனி ஒருவராக நின்று ஒரு கூட்டமைப்புக்கு நிகரான வேலைகளைச் செய்து முடிக்கின்றார்கள்.

இப்ராஹீம் (அலை) அவர்களின் மனம் தளராத பிரச்சாரத்தைக் கண்டு, கடுமையான வேதனையைத் தயார் செய்து இப்ராஹீம் (அலை) அவர்களை அந்த வேதனையில் எதிரிகள் உட்படுத்துகின்றார்கள்.

“அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவற்றுக்கும், உங்களுக்கும் கேவலமே! விளங்க மாட்டீர்களா?’’ (என்றும் கேட்டார்.)

“நீங்கள் (ஏதேனும்) செய்வதாக இருந்தால் இவரைத் தீயில் பொசுக்கி உங்கள் கடவுள்களுக்கு உதவுங்கள்!’’ என்றனர்.

“நெருப்பே! இப்ராஹீமின் மீது குளிராகவும், பாதுகாப்பாகவும் ஆகி விடு’’ என்று கூறினோம்.
அவருக்கு எதிராக அவர்கள் சூழ்ச்சி செய்தனர். அவர்களை நட்டமடைந்தோராக ஆக்கினோம்.

அல்குர்ஆன் 21:67-70

இப்ராஹீம் நபி அவர்கள் மனம் தளராமல் தன்னந்தனியாக நின்று ஓரிறைக் கொள்கையைப் பின்பற்றியதாலும், ஓரிறைக் கொள்கையை எடுத்துச் சொன்ன காரணத்தினாலும் அவருக்குக் கொடூரமான தண்டனையாக, தயவு தாட்சண்யமின்றி நெருப்பைத் தயார் செய்து அதில் வீசி எறிகின்றார்கள்.

ஆனால் அல்லாஹ்வின் மகத்தான உதவியாலும், இப்ராஹீம் நபியின் தளராத உள்ளத்தினாலும் அல்லாஹ் நெருப்பின் தன்மையை மாற்றி குளிரூட்டுகின்ற தன்மையாக மாற்றி விடுகின்றான்.
மனம் தளராத இப்ராஹீம் நபிக்கு எதிரான அவர்களின் சூழ்ச்சியை அல்லாஹ் தவிடு பொடியாக்கி, எதிரிகளை நஷ்டமடைய வைக்கின்றான். இதுபோன்று முஸ்லிம்கள் மனம் தளராமல் அல்லாஹ்வின் மீது உறுதியாக நம்பிக்கை வைத்தால் நமக்கும் அல்லாஹ்வின் மறைமுகமான உதவி நிச்சயம் கிடைக்கும்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *