ஆண்கள் மோதிரம் அணிவது சுன்னத்தா?
சுன்னத் என்றால் நபிவழி என்று பொருள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மார்க்க அடிப்படையில் செய்த காரியங்களை நாம் கடைப்பிடிப்பது அல்லாஹ்விடத்தில் நற்கூலியைப் பெற்றுத் தரும் வணக்கமாகும்.
மார்க்கம் சம்பந்தப்பட்ட எந்த ஒரு விசயத்தையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சுயமாக உருவாக்கவில்லை. மாறாக அவை அல்லாஹ்வின் புறத்திலிருந்து நபியவர்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட்ட விசயங்களாகும்.
இதை வெளிப்படையாகப் பார்க்கும் போது நாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பின்பற்றுவது போல் தெரிந்தாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பின்பற்றுவதன் மூலம் உண்மையில் இறைவனுடைய கட்டளைகளுக்கே நாம் கீழ்ப்படிகின்றோம். இதனால் தான் இஸ்லாத்தில் இவை நன்மை தரும் வணக்கங்களாக கூறப்பட்டுள்ளன.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மார்க்கத்தைக் கற்றுக்கொடுக்கும் நபியாக இருப்பதுடன் இயல்பான மனிதத் தன்மைகளுக்கு உட்பட்டவராகவும் இருந்தார்கள். எனவே மார்க்கம் தொடர்பில்லாமல் மனிதன் என்ற அடிப்படையில் அவர்கள் செய்த காரியங்களும் இருக்கின்றன. இந்த விசயங்களை மற்றவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அவசியமில்லை.
தனக்கு இப்படி இரண்டு நிலைகள் இருப்பதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே பல சந்தர்ப்பங்களில் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது மதீனாவாசிகள் பேரீச்ச மரங்களை ஒட்டுச் சேர்க்கை செய்துகொண்டிருந்தனர். தாங்கள் பேரீச்ச மரங்களை சூல் கொள்ளச் செய்வதாக அவர்கள் கூறினர். அதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டார்கள்.
மக்கள் (வழக்கமாக) இவ்வாறே நாங்கள் செய்து வருகிறோம் என்று கூறினர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நீங்கள் இவ்வாறு செய்யாவிட்டால் நன்றாயிருந்திருக்கலாம் என்று சொன்னார்கள். ஆகவே, அவர்கள் அ(வ்வாறு செய்வ)தை விட்டுவிட்டனர்.
அந்த வருடத்தில் கனிகள் உதிர்ந்துவிட்டன; அல்லது குறைந்து விட்டன. அதைப் பற்றி மக்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது அவர்கள், நான் ஒரு மனிதனே; உங்கள் மார்க்க விஷயத்தில் நான் உங்களுக்கு ஏதேனும் கட்டளையிட்டால் அதை நீங்கள் கடைப்பிடியுங்கள். (உலக விவகாரத்தில்) சொந்தக் கருத்தாக உங்களுக்கு நான் ஏதேனும் கட்டளையிட்டால் நானும் ஒரு மனிதனே என்று சொன்னார்கள்.
நூல் : முஸ்லிம்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பரீரா (ரலி) அவர்களிடம் முகீஸ் (ரலி) அவர்களுக்காகப் பரிந்துரை செய்தார்கள். இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சுய அபிப்பிராயமாக இருந்ததால் இதை பரீரா (ரலி) அவர்கள் ஏற்கவில்லை.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
பரீராவின் கணவர் முஃகீஸ் அடிமையாக இருந்தார். அவர் (பரீரா பிரிந்துவிட நினைக்கிறார் என்பதை அறிந்த போது) தமது தாடியில் கண்ணீர் வழியும் அளவிற்கு அழுத வண்ணம் பரீராவிற்குப் பின்னால் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்ததை இப்போதும் நான் காண்பதைப் போன்றுள்ளது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்பாஸ் (ரலி) அவர்களிடம் அப்பாஸ் அவர்களே! முஃகீஸ் பரீராவின் மீது வைத்துள்ள நேசத்தையும், பரீரா முஃகீஸின் மீது கொண்டுள்ள கோபத்தையும் கண்டு நீங்கள் வியப்படையவில்லையா? என்று கேட்டார்கள்.
(முஃகீஸிடமிருந்து பரீரா பிரிந்துவிட்டபோது) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஃகீஸிடம் நீ சேர்ந்து கொள்ளக் கூடாதா?என்று (பரீராவிடம்) கேட்டார்கள். அதற்கு பரீரா அல்லாஹ்வின் தூதரே! எனக்குத் தாங்கள் கட்டளையிடுகின்றீர்களா? என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (இல்லை.) நான் பரிந்துரைக்கவே செய்கின்றேன் என்றார்கள். அப்போது பரீரா, (அப்படியானால்,) அவர் எனக்குத் தேவையில்லை என்று கூறிவிட்டார்.
நூல் : புகாரி 5283
சட்டப்படி கணவனைப் பிரிய பரீராவுக்கு உரிமை உள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முகீஸின் நிலையைப் பார்த்து இரக்கப்பட்டு தனிப்பட்ட முறையில் சேர்ந்து வாழ கோரிக்கை வைக்கிறார்கள். சேர்ந்து வாழ வேண்டும் என்பது வஹீயா? மார்க்கக் கட்டளையா என்று விபரம் கேட்கிறார். கட்டளை இல்லை; அதாவது மனிதன் என்ற முறையில் செய்யும் பரிந்துரை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கிய பின் பரீரா அந்த பரிந்துரை வஹீ அல்ல என்பதால் அதை ஏற்கவில்லை. இதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரைக் கோபிக்கவில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு காரியத்தைச் செய்திருந்தால் அது மார்க்கம் தொடர்பானதா? அல்லது உலகம் தொடர்பானதா? என்பதை அந்தக் காரியத்தை வைத்தும், எந்த அடிப்படையில் அதை நபி (ஸல்) அவர்கள் செய்தார்கள் என்ற காரணத்தை வைத்தும் முடிவு செய்யலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மோதிரம் அணிந்துள்ளார்கள். இது வஹீ அடிப்படையிலா? தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையிலா என்பதை நாம் அறிய வேண்டும்.
ஹுமைத் அத்தவீல் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
அனஸ் (ரலி) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மோதிரம் எதையும் அணிந்திருக்கிறார்களா? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ஆம்; நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓர் இரவில் இஷாத் தொழுகையை பாதி, இரவு வரை பிற்படுத்தினார்கள். பிறகு அவர்கள் வந்து (எங்களுடன்) தொழுதுவிட்டு பின்னர் எங்களை நோக்கி, மக்கள் தொழுதுவிட்டு உறங்கிவிட்டனர். நீங்கள் தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் வரை தொழுகையிலேயே உள்ளீர்கள் என்று சொன்னார்கள்.
இப்போதும் நபியவர்கள் அணிந்திருந்த மோதிரம் மின்னுவதைப் நான் பார்ப்பது போன்றுள்ளது.
நூல் : புகாரி 661
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தங்க மோதிரம் அல்லது வெள்ளி மோதிரம் ஒன்றைத் தயாரித்து (அணிந்து) கொண்டார்கள். அதன் குமிழைத் தமது உள்ளங்கையை ஒட்டியவாறு (உள்பக்கமாக அமையும் படி) வைத்துக்கொண்டார்கள். அதில் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் என்று பொறித்தார்கள். மக்களும் அதைப் போன்று மோதிரத்தைத் தயாரித்து (அணிந்து) கொண்டனர்.
மக்கள் அதைத் தயாரித்து (அணிந்து) கொண்டிருப்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டபோது தமது மோதிரத்தை(க் கழற்றி) எறிந்துவிட்டு, நான் இதை இனி ஒருபோதும் அணியமாட்டேன் என்று சொன்னார்கள். பிறகு வெள்ளி மோதிரம் ஒன்றைத் தயாரித்து (அணிந்து) கொண்டார்கள். மக்களும் வெள்ளி மோதிரங்களை அணியலானார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் அந்த மோதிரத்தை அணிந்து கொண்டார்கள். பிறகு (அதை) உமர் (ரலி) அவர்களும், பிறகு உஸ்மான் (ரலி) அவர்களும் அணிந்து கொண்டார்கள். இறுதியில் உஸ்மான் (ரலி) அவர்களிடமிருந்து அது அரீஸ் எனும் கிணற்றில் (தவறி) விழுந்துவிட்டது.
நூல் : புகாரி 5866
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மோதிரம் அணிந்திருந்தார்கள் என்பதற்கு இன்னும் பல ஆதாரங்கள் உள்ளன. ஆனால் இதை சுன்னத் என்று நாம் கூற வேண்டுமானால் இதை மார்க்கம் என்ற அடிப்படையில் செய்தார்களா? அல்லது உலக வழக்கத்தை ஒட்டி ஆபரணங்கள் என்ற் அடிப்படையில் அணிந்து கொண்டார்களா? என்று நாம் சிந்திக்க வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவன் புறத்திலிருந்து வந்த வஹீ அடிப்படையில் மோதிரம் அணியவில்லை. உலகத் தேவை என்ற அடிப்படையில் தான் மோதிரம் அணிந்தார்கள். இதைப் பின்வரும் செய்தி தெளிவுபடுத்துகின்றது.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடிதம் ஒன்றை எழுதச் சொன்னார்கள் அல்லது எழுதிட விரும்பினார்கள். அவர்கள் (ரோமர்கள்) முத்திரையிடப்படாத எந்தக் கடிதத்தையும் படிக்க மாட்டார்கள் என்று நபியவர்களிடம் சொல்லப்பட்டது. ஆகவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வெள்ளியாலான மோதிரம் ஒன்றைத் தயாரித்துக் கொண்டார்கள். அதில் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் என்று பொறிக்கப்பட்டிருந்தது. இப்போதும் நான் அவர்களுடைய கரத்திலிருந்த மோதிரத்தின் வெண்மையைப் பார்ப்பதைப் போன்றுள்ளது.
நூல் : புகாரி 65
இன்றைக்கு பலர் மோதிரத்தை அலங்காரப் பொருளாக அணிகின்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அலங்காரத்திற்காக இதை அணியவில்லை. கடிதப் போக்குவரத்து நடைபெற வேண்டும் என்ற காரணத்துக்காகவே மோதிரம் அணிந்துள்ளார்கள். எனவே மோதிரம் அணிவது மார்க்க அம்சமல்ல.
ஒருவர் தன்னுடைய சுய விருப்பத்தின் அடிப்படையில் மோதிரம் அணிந்தால் அது குற்றமில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பார்த்து மக்கள் வெள்ளி மோதிரம் அணிந்தபோது அதை நபியவர்கள் தடைசெய்யவில்லை. எனவே இது அனுமதிக்கப்பட்ட விசயம் என்பதை அறிய முடிகின்றது.
ஆனால் இதைச் செய்வது சுன்னத் என்றோ, மறுமையில் நன்மை கிடைக்கும் என்றோ கூறி இதற்கு மார்க்கச் சாயம் பூசுவது கூடாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கோதுமை சாப்பிட்டார்கள். எனவே கோதுமை சாப்பிடுவது சுன்னத் என்றும், இபாதத் என்றும் யாரும் கூறமாட்டோம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒட்டகத்தில் பயணம் செய்தார்கள் என்பதால் இன்றைக்கு நாம் ஒட்டகத்தில் பயணம் செய்வது சுன்னத் என்றும், இபாதத் என்றும் யாரும் சொல்லமாட்டோம்.
இது போன்ற உலகத் தேவைக்காகவே நபியவர்கள் மோதிரம் அணிந்தார்கள். எனவே இது சுன்னத்தோ, மக்களுக்கு ஆர்வமூட்ட வேண்டிய காரியமோ இல்லை.
About Author
Sadhiq
அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை.
[அல்குர்ஆன் 112:1]