TNTJ மூலம் தப்லீக் செல்லலாமே?
தவ்ஹீத் ஜமாஅத்தில் உள்ள நல்ல விஷயங்களை மட்டும் மக்களுக்கு போதிப்பதற்காக 3 நாள் 40 நாட்கள் தப்லீக் செல்லலாமே?
தப்லீக் ஜமாஅத் வழியில் நல்ல விஷயங்களை மட்டும் நாம் எடுத்துக் கொள்ளலாமே என்பது கேட்பதற்கு நன்றாக இருந்தாலும் நடைமுறைக்கு ஒத்து வராது.
தீமைகளைத் தடுக்காமல் நன்மைகளை அதுவும் மிகச் சில நன்மைகளை மட்டும் தப்லீக் ஜமாஅத் சொல்வதால் அவர்கள் எங்கு வேண்டுமானாலும் செல்ல முடிகிறது. பெரும்பாலான பள்ளிவாசல்களில் தங்க முடிகிறது.
ஆனால் தவ்ஹீத் ஜமாஅத் அனைத்து நன்மைகளையும் போதிப்பதாலும், அனைத்து தீமனைகளையும் தாட்சண்யமின்றி தடுப்பதாலும் இப்போது சந்திக்கும் அதே எதிர்ப்புகளுடன் தான் பிரச்சாரம் செய்ய வேண்டிய நிலைதான் நீடிக்கும். பள்ளிவாசல்களில் போய் தங்கி அங்கேயே சமைத்துச் சாப்பிட்டு உறங்க உங்களை அனுமதிக்க மாட்டார்கள்.
மேலும் மனைவி மக்களுக்குச் செய்யும் கடமைகளை விட்டு விட்டு நாற்பது நாட்கள் வருமாறு நாம் அழைக்க முடியாது.
வெவ்வேறு பகுதிகளில் வாழும் மக்களுக்கு மார்க்கத்தைப் போதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தப்லீக் ஜமாஅத்தினர் 3 நாள் 10 நாள் 40 நாள் என கூட்டமாக கிளம்புகின்றனர். மக்களை அழைத்துச் செல்லும் இவர்கள் சரியான முறையில் மார்க்கத்தைப் போதிக்கவில்லை என்பது தனி விஷயம்.
இவர்கள் நாட்டின் பல பகுதிகளுக்குச் சென்று மக்களைச் சந்தித்து தொழக் கூடியவர்களை உருவாக்குவதைப் போன்று நமது ஜமாத்தும் இந்தப் பணியைச் செய்யலாமே என்று நீங்கள் கேட்கின்றீர்கள். தொழுகையின் அவசியத்துடன் எப்படி நபிவழியில் தொழவேண்டும் என்பதையும் நாம் சேர்த்து போதிக்க வேண்டும். அதனால் இப்போது சந்திக்கும் அதே எதிர்ப்புகளையும், தடைகளையும் நாம் சந்திக்கும் நிலை ஏற்படும்.
மக்களுக்கு மார்க்கத்தைப் போதிக்க தப்லீக் ஜமாஅத் சொல்லும் வழியை விட பல சிறந்த வழிமுறைகளை நாம் கடைப்பிடித்து வருகின்றோம்.
ஒவ்வொரு ஊருக்கும் பேச்சாளர்களை அனுப்பி பொதுக் கூட்டங்களை நடத்தி வருகின்றோம். இதன் மூலம் அந்தப் பகுதியில் உள்ள அனைவருக்கும் மார்க்கத்தை அறிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படுகின்றது.
ஒரு நாள் தர்பியா, இரண்டு நாட்கள் தர்பியா என மக்களுக்கு அறிவிப்புச் செய்து நபிவழி அடிப்படையில் தொழுகைப் பயிற்சி மற்றும் பல மார்க்க விஷயங்களை மக்களுக்கு கற்றுக் கொடுக்கின்றோம்.
இன்றைக்கு தொலைக்காட்சி இல்லாத வீடே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைத்து வீடுகளிலும் இந்த சாதனம் உள்ளது. இந்த தொலைக்காட்சி வழியாக தினந்தோறும் மார்க்கத்தைப் போதித்து வருகின்றோம். ஏகத்துவம், தீன்குலப் பெண்மனி ஆகிய இதழ்கள் வழியாகவும் மார்க்கத்தைப் போதிக்கின்றோம்.
இன்றைக்கு உலகில் ஒரு மூலையில் இருந்துகொண்டு மற்ற பகுதிகளில் உள்ள மக்களுக்கு மார்க்க விஷயங்களை எளிதாக எடுத்துச்சொல்ல முடியும். இணையதளம் வாயிலாக மார்க்க விஷயங்கள் மக்களை எளிதாக சென்றடையும் வசதி இன்றைக்கு உள்ளது.
நவீன வசதிகளைச் செய்து கொண்டால் இன்றைக்கு வீட்டில் இருந்து கொண்டே மார்க்கத்தைத் தெளிவாக அறிந்துகொள்ள முடியும். இணையதளம் வழியாகவும் மார்க்கத்தை உலக மக்களுக்குப் போதிக்கின்றோம்.
தப்லீக் ஜமாஅத்தினர் செய்யும் மார்க்கப் பணியையும், நமது ஜமாஅத் செய்யும் மார்க்கப் பணிகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால் அல்லாஹ்வுடைய அருளால் நாம் அவர்களை விட நிறைய நபர்களுக்கு பல்வேறு வழிகளில் மார்க்கத்தை அதன் தூய வடிவில் போதித்துக் கொண்டிருக்கின்றோம். இதன் மூலம் நிறைய பயன்களும் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இணைவைப்பின் கேந்திரமாக இருந்த பள்ளிவாசல்கள் ஏகத்துவத்தின் கோட்டைகளாக மாறியுள்ளன. பல ஊர்களில் ஏராளமான ஏகத்துவப் பள்ளிகள் புதிதாக தோன்றியுள்ளன.
இவ்வாறு மார்க்கத்தை மக்களுக்கு நிறைவாக எடுத்துச் சொல்வதுடன் குடும்பப் பொறுப்புகளையும் நம்மால் சரியாக நிறைவேற்ற முடிகின்றது. ஆனால் 40 நாள் தப்லீக் சென்றால் குறைந்த நபர்களையே சந்திக்க முடியும். குடும்பத்தைக் கவனிக்காமல் கடமை தவறும் நிலை ஏற்படுகின்றது.
தொலை தொடர்பு சாதனங்கள் இல்லாத கடந்த காலங்களில் வேண்டுமானால் மக்களுக்கு மார்க்கத்தைப் போதிக்க இதைத் தவிர வேறு வழியில்லை எனலாம். ஆனால் எல்லா வசதிகளும் பெருகிவிட்ட இன்றைய காலத்தில் இதை விடவும் சிறந்த வழிகள் இருக்கின்றன. அந்த வழிகளில் நாம் மக்களுக்கு மார்க்கத்தைப் போதித்து வருகின்றோம்.
About Author
Sadhiq
அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை.
[அல்குர்ஆன் 112:1]