முஸ்லிமல்லாத பெற்றோரின் சொத்தில் முஸ்லிம்களுக்கு உரிமை உண்டா?
முஸ்லிமல்லாத பெண் இஸ்லாத்தை ஏற்று முஸ்லிமைத் திருமணம் செய்து கொண்டார். அந்தப் பெண்ணுடைய பெற்றோரின் சொத்துக்கள் வாரிசு அடிப்படையிலோ, அல்லது மற்ற அடிப்படையிலோ அந்தப் பெண்ணுக்கு ஆகுமானதா?
முஸ்லிமுடைய சொத்துக்கு முஸ்லிமல்லாதவரும் முஸ்லிமல்லாதவரின் சொத்துக்கு முஸ்லிமும் வாரிசாக ஆக முடியாது. தானாக விரும்பிக் கொடுத்தால் பெற்றுக் கொள்ளலாமே தவிர சட்டப்படி உரிமை கோர முடியாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.
உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதரே! நாம் நாளை (மக்காவில்) எங்கு தங்குவோம்? என்று மக்கா வெற்றியின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், (அபூதாலிபின் மகன்) அகீல் நமக்கு வீடு எதையேனும் விட்டுச் சென்றுள்ளாரா? என்று கேட்டார்கள். பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இறை நம்பிக்கையாளர், இறைமறுப்பாளருக்கு வாரிசாக மாட்டார்; அவ்வாறே இறை மறுப்பாளரும் இறை நம்பிக்கையாளருக்கு வாரிசாக மாட்டார் என்று சொன்னார்கள்……
அறிவிப்பவர் : உஸாமா பின் ஸைத் (ரலி)
நூல் : புகாரி 4282
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறை மறுப்பாளருக்கு முஸ்லிம் வாரிசாக மாட்டார். முஸ்லிமுக்கு இறை மறுப்பாளர் வாரிசாக மாட்டார்.
அறிவிப்பவர் : உஸாமா பின் ஸைத் (ரலி)
நூல் : புகாரி 6764