கடனைத் திருப்பி செலுத்தும் வழிமுறை என்ன?
கடன் வாங்கிவிட்டு குறித்த நேரத்தில் அதைக் கொடுக்க முடியாவிட்டால் சிலர் பொய்களைச் சொல்லி தப்பிக்கப் பார்க்கின்றனர். அல்லது தலைமறைவாகி விடுகிறார்கள். அல்லது கடன் கொடுத்தவரையே மிரட்டுகிறார்கள். உன்னிடம் நான் கடன் வாங்கவில்லை என்றும் நான் அப்போதே கொடுத்து விட்டேன் என்றும் கூசாமல் பொய் சொல்கிறார்கள்.
கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாத நிலை ஏற்படும்போது மனிதனின் மனநிலை இப்படியெல்லாம் மாறிவிடுகிறது. ஆனால் ஒருவன் நல்ல முஸ்லிமாக இருந்தால் இது போன்ற நிலை ஏற்படாமல் தவிர்க்க முடியும்.
ஆம் அல்லாஹ்வின் அருளால் கடனைத் திருப்பிக் கொடுக்கும் நிலையை நாம் அடைவதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறந்த வழிமுறையைக் கற்றுத் தந்துள்ளனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
எவர் மக்களின் பணத்தை (அல்லது பொருட்களைத்) திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகின்றாரோ அவர் சார்பாக அல்லாஹ்வே அதனைத் திருப்பிச் செலுத்துவான். எவர் திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி அதை (ஏமாற்றி) அழித்து விடும் எண்ணத்துடன் கடன் வாங்குகின்றாரோ அல்லாஹ்வும் அவரை அழித்து விடுவான்.
நூல் : புகாரி 2387
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய (மரணத்திற்குப் பிறகு அவர்களுடைய) மனைவி மைமூனா (ரலி) அவர்கள் ஒருவரிடம் கடன் கேட்டனர். மூமின்களின் அன்னையே கடனைத் திருப்பிச் செலுத்த வழியில்லாத நீங்கள் கடன் கேட்கிறீர்களே என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு மைமூனா (ரலி) திருப்பிச் செலுத்தும் எண்ணத்தில் யார் கடன் வாங்குகிறாரோ அவருக்கு அல்லாஹ் உதவி செய்கிறான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றுள்ளேன் என்றார்கள்.
நூல் : நஸாயீ 4687