நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்?- பாகம் 11
ஸபிய்யா பின்து ஹுயய் (ரலி) அவர்கள்
இனி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மற்றொரு திருமணத்தைக் காண்போம். இந்தத் திருமணமும் காம உணர்வைக் காரணமாக்க் கூற இயலாத அளவுக்கு அமைந்துள்ளதை அறிவுடையோர் உணர இயலும்.
நபிகல் நாயகம் (ஸல்) அவர்கள் ஸபிய்யா பின்து ஹுயய் என்பவரை அடுத்தபடியாக மணந்து கொண்டார்கள்.
இவர் ஹாரூன் வம்சா வழியில் உதித்த யூதக் குடும்பத்துப் பெண்மனியாவார். இவர் முதலில் ஸலாம் இப்னு மிக்ஷம் என்பவரின் மனைவியாக இருந்தார். (இவருடைய மற்றொரு மனைவி தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு விஷமூட்டப் பட்ட ஆட்டிறைச்சியை உண்னக் கொடுத்தார்.)
இதன் பின்னர் கினானா இப்னு அபில் ஹகீக் என்பவரை இரண்டாவதாக மனந்து கொண்டார்கள். ஸபிய்யாவும், அவரது கணவர் கினானாவும், அவருடைய தந்தை ஹுயய் என்பாரும் மதீனாவில் வசித்து வந்தனர்.
மதீனாவிலிருந்த யூதர்களும், கைபர் பகுதியில் இருந்த யூதர்களும் தேச விரோதச் செயலில் ஈடுபட்டு வந்தனர். செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறி மக்காவின் காபிர்களுக்கு நாட்டு இரகசியங்களைக் கூறி குழப்பம் செய்து வந்தனர். எனவே கைபர் பகுதி யூதர்களுடன் போர் செய்வதற்க்கான முயற்சியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறங்கினார்கள்.
இதை அறிந்த ஸபிய்யாவும் அவரது தந்தையும் கணவரும் மதீனாவைக் காலி செய்து விட்டு கைபருக்குப் புறப்பட்டனர்.
கைபர் போரில் முஸ்லிம்கள் வெற்றி அடைந்தனர். யூதத் தலைவர்களில் பிரதானமானவர்கள் கொல்லப்பட்டனர். இங்கே கொல்லப்பட்டவர்களில் ஸபிய்யாவின் கணவர் கினானாவும் ஒருவராவார். பலர் சிறை பிடிக்கப்பட்ட போது ஸபிய்யாவும் சிறைபிடிக்கப் பட்டார்கள்.
அன்றைய வழக்கப் படி கைதிகள் போர் வீர்ர்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்கப்பட்டனர். திஹ்யா என்பவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து தமக்கு ஒரு கைதியைத் தருமாறு கேட்டு ஸபிய்யாவை அழைத்துக் கொண்டார். அப்போது அங்கிருந்த சிலர் அல்லாஹ்வின் தூதரே இந்தப் பெண் இந்த சமுதாயத்தின் தலைவருடைய புதல்வியாவார். எனவே தாங்கள் இவரை எடுத்துக் கொள்வதே சிறந்தது என்று அவர்கள் கூறினார்கள். இதன் பின் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸபிய்யாவை விடுதலை செய்து அவரைத் திருமணம் செய்து கொண்டார்கள். இது இத்திருமணத்தின் சுருக்கமான சரித்திரப் பின்னணியாகும்.
இதை ஊன்றிக் கவணிக்கும் அறிவுடைய எவரும் இத்திருமணத்திற்கு காம வெறியைக் காரணமாக கூற முன்வர மாட்டார்கள். இதில் கவனிக்க வேண்டிய பல அம்சங்கள் உள்ளன. அந்த அம்சங்கள் யாவும் எதிரிகளின் அடிப்படையற்ற அவதூறைத் தகர்த்து எறிகின்றன.
முதலாவது அம்சம் நபிகல் நாயகம் (ஸல்) அவர்களின் வயது. இது ஹிஜ்ரி 7ம் ஆண்டு நிகழ்ந்துள்ளது. ஹிஜ்ரி 7ம் ஆண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வயது 60 ஆகும். ஐம்பது வயது வரை ஒரேயொரு மணைவியுடன் இல்லறம் நடத்திய நபியவர்களுக்கு மரணத்திற்கு நெருங்கிக் கொண்டிருந்த நேரத்தில் தானா காம வெறி ஏற்பட்டிருக்கும்?
இரண்டாவது அம்சம் ஸபிய்யாவின் நிலை. ஏற்கனவே இரண்டு கணவர்களுக்கு வாழ்க்கைப்பட்டு விதவையாகிப் போனவரைத்தானா காம வெறி கொண்டவர்கள் தேர்வு செய்வார்கள்?
மூன்றாவது அம்சம் இந்தத் திருமணம் நடந்த சந்தர்ப்பம். அதாவது கைபா; என்ற அந்நிய நாட்டுடன் போரிட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வெற்றி அடைந்துள்ள நேரம்! பெரும் தலைகள் எல்லாம் மண்ணில் உருண்டு கிடக்கும் நேரம்! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காம வெறி கொண்டவர்களாக இருந்திருந்தால் இந்தக் கட்டத்தில் எத்தனையோ கண்ணியரைக் கவர்ந்து கொண்டிருக்க முடியும். எவரும் அதைத் தடுக்க சக்தி பெற்றிருக்கவில்லை.
பொதுவாகவே அன்றைய உலகில் மன்னர்கள் வெற்றி அடையும் சமயங்களில் விரும்பிய கண்ணியரைக் கவர்ந்து கொள்வது சர்வசாதாரணமான ஒன்றாகத் தான் இருந்தது. போர் தர்மம் என்று இதற்கு நியாயமும் கூறப்பட்டு வந்தது.
இவ்வளவு சாதகமான சூழலிலும் எந்தக் கண்ணியரையும் ஏறெடுத்துப் பார்க்கவில்லை நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள். காம வெறி கொண்டவர்கள் தேர்வு செய்யும் எந்த வழியையும் அவர்கள் கைக் கொள்ளவில்லை. இந்தக் கட்டத்தில் கூட இரண்டு கணவர்களுடன் வாழ்ந்த விதவையைத் தேர்ந்தெடுத்தார்கள் என்றால் இதற்குக் காம உணர்வு எப்படி காரணமாக இருக்க முடியும்?
கடைசியாக கவனிக்கப் படவேண்டிய அம்சமும் முக்கியமானதாக உள்ளது. அதாவது ஸபிய்யாவும் மற்றவர்களும் கைதிகளாகப் பிடிக்கப்பட்டவுடன் அவர்களில் ஸபிய்யாவின் அழகில் மயங்கி மனந்து கொண்டார்கள் என்றும் கூற முடியாது. நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் ஸபிய்யா பற்றியோ மற்றவர்கள் பற்றியோ சிந்திக்கக் கூட இல்லை.
இதனால் தான் திஹ்யா என்பவர் ஸபிய்யாவை தமக்காக எடுத்துக் கொள்கிறார். அவர் எடுத்துக் கொண்ட சமயத்தில் கூட நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் ஆட்சேபனை எதுவும் தெரிவிக்கவில்லை.
பனூ குரைலாவுக்கும், பனூ நுழைர் கூட்டத்துக்கும் தலைமை வகித்த குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று சிலா; அடையாளம் காட்டிய பிறகு தான் அவரை நபி(ஸல்)அவர்கள் விடுதலை செய்து மணக்கிறார்கள்.
ஸபிய்யா அழகு படைத்தவராக இருந்தாலும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மணந்து கொண்டதற்கு அதுவே காரணம் அல்ல. அழகு காரணம் என்றிருந்தால் எடுத்த எடுப்பிலேயே அவரை மணந்திருக்கலாம்.
யூதர்களின் அரச குடும்பத்துப் பெண் என்று காரணம் கூறப்பட்ட பின்பே அவரை மணந்து கொள்ளும் முடிவுக்கே நபியவர்கள் வருகிறார்கள்.
யூதர்களின் வெறுப்புணர்வைத் தனித்துக் கொள்வதும், இரு சமூகத்தினரிடையே நல்லுறவு ஏற்பட்டதும் இத்திருமணத்தினால் விளைந்த நன்மைகளாகும்.
இது போக ஏனைய திருமணங்களுக்குரிய பொதுவான காரணம் இத்திருமணத்திற்கும் பொருந்தும்.
ஏனைய திருணங்களுக்கு எப்படி காம உணர்வு தான் காரணம் என்று கூற முடியாதோ அது போல் இத்திருமணத்திற்கும் அதைக் காரணமாக கூற முடியாது.