வறுமையும், வசதிகளும் சோதனை தான்
வறுமையைப் பற்றி இஸ்லாம் கூறும் அறிவுரைகளையும், வசதி வாய்ப்பு வந்த பிறகு எப்படி இருக்க வேண்டும் என்ற அறிவுரையும் இஸ்லாம் நமக்கு எடுத்துரைக்கிறது. அவற்றை இந்த உரையில் காண்போம்.
ஒருவருக்கு இறைவன் பொருள் வசதியைக் கொடுத்தால் அவரை அதன் மூலம் சோதித்துப் பார்க்கிறான். அதுபோல் ஒருவருக்கு வறுமையை அல்லாஹ் வழங்கினால் அதன் மூலம் அல்லாஹ் அவரைச் சோதித்துப் பார்க்கிறான் என்று நம்புவது மனமாற்றத்துக்கான முதல் பயிற்சியாகும்.
பொருளாதாரத்தைத் திரட்டும்போதும், அதை அனுபவிக்கும்போதும் மனிதன் எல்லை மீறுவதற்குக் காரணம் பொருளாதாரமும், வறுமையும் நம்மைச் சோதித்துப் பார்ப்பதற்காக இறைவன் வைக்கும் பரீட்சையாகும் என்பதைப் புரிந்து கொள்ளாமல் இருப்பது தான். இதைப் புரிந்து கொள்ளும் ஒருவன் வறுமையின் போதும் செல்வச் செழிப்பின் போதும் தடம் புரளமாட்டான்.
வறுமை ஏற்படும்போது இறைவன் அநீதி இழைத்து விட்டான் என்ற எண்ணத்தை ஷைத்தான் ஏற்படுத்துவான். வறுமையைப் போக்கிட திருட்டு போன்ற தவறான வழிகளில் ஷைத்தான் நம்மை இழுத்துச் சென்று அதை நியாயமாக்கிக் காட்டுவான். வறுமை இந்த வகையில் சோதனையாக அமைந்து விடுகிறது.
மனிதனை அவனது இறைவன் மரியாதையுடன் வாழச் செய்து இன்பத்தையும் வழங்கி சோதிக்கும் போது என் இறைவன் என்னைக் கண்ணியமாக நடத்தினான் என்று கூறுகிறான். அவனது செல்வத்தை அளவுடன் வழங்கி சோதிக்கும்போது என் இறைவன் என்னை அவமானப்படுத்தி விட்டான் எனக் கூறுகிறான்.
(திருக்குர்ஆன் 89 : 15,16)
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
இறைவா சோம்பலிலிருந்தும், தள்ளாமையிலிருந்தும், பாவத்திலிருந்தும், கடனிலிருந்தும், மண்ணறையின் சோதனையிலிருந்தும் அதன் வேதனையிலிருந்தும், நரகத்தின் சோதனையிலிருந்தும் அதன் வேதனையிலிருந்தும், செல்வத்தின் தீமைகளிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். மேலும், வறுமையின் சோதனையிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.
(பெருங்குழப்பவாதியான) மஸீஹுத் தஜ்ஜாலின் சோதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.
இறைவா! பனிக்கட்டியாலும் ஆலங்கட்டியாலும் என் தவறுகளை என்னிலிருந்து கழுவுவாயாக! மேலும், அழுக்கிலிருந்து வெண்மையான ஆடையை நீ தூய்மைப்படுத்துவதைப் போன்று தவறுகளிலிருந்து என் உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவாயாக!
கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையே நீ ஏற்படுத்திய இடைவெளியைப் போன்று எனக்கும் என் தவறுகளுக்குமிடையே நீ இடைவெளியை ஏற்படுத்துவாயாக என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்.
நூல் : புகாரி : 6368, 3375, 6376, 6377
செல்வத்தைக் கொடுத்து அல்லாஹ் சோதிப்பது போல் செல்வத்தை எடுத்தும் அல்லாஹ் சோதிப்பான் என்பதைப் பின்வரும் வசனத்தில் அல்லாஹ் சொல்கிறான்.
உங்களுக்கு முன் சென்றோருக்கு ஏற்பட்டது போல் உங்களுக்கும் ஏற்படாமல் சொர்க்கத்தில் நுழையலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? அவர்களுக்கு வறுமையும், துன்பமும் ஏற்பட்டன. அல்லாஹ்வின் உதவி எப்போது என்று (இறைத்) தூதரும் அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரும் கூறுமளவுக்கு அலைக்கழிக்கப்பட்டனர். கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் உதவி அருகிலேயே உள்ளது.
(திருக்குர்ஆன் 2: 214)
மனிதனைச் சோதித்துப் பார்ப்பதற்காகவே சிலருக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்குகிறான். சோதித்துப் பார்ப்பதற்காகவே சிலரை வறுமையில் வாடவிடுகிறான் என்பதை மேற்கண்ட ஆதாரங்கள் மூலம் நாம் அறிந்து கொள்கிறோம்.
கொடுத்தும் அல்லாஹ் சோதிக்கிறான்; கொடுக்காமல் எடுத்தும் அல்லாஹ் சோதிக்கிறான் என்று ஒரு முஸ்லிம் உறுதியாக நம்பும்போது பொருளாதாரத்தைத் திரட்டுவதிலும், செலவிடுவதிலும் செய்யும் பல தவறுகளில் இருந்து அவன் விலகிக் கொள்ள முடியும். நமக்கு வறுமை வரும்போது அதன் மூலம் அல்லாஹ் நம்மைச் சோதிக்கிறான் என்று நம்பினால் பொருள் திரட்டுவதற்காக நெறிமுறைகளை நாம் மீற மாட்டோம்.
நமக்குச் செல்வம் வழங்கப்பட்டால் அதுவும் நம்மைச் சோதிப்பதற்காகவே அல்லாஹ் வழங்குகிறான் என்று நாம் நம்பினால் செல்வம் வந்து விட்டது என்பதற்காக நாம் ஆட்டம் போட மாட்டோம். வறுமையும், செல்வமும் திறமையால் மட்டும் கிடைப்பதல்ல.
ஒருவருக்கு வழங்கப்படும் செல்வம் அவரது திறமையினாலோ, அறிவினாலோ, கடின உழைப்பினாலோ மட்டும் கிடைப்பதல்ல என்ற உண்மையைப் புரிந்து கொள்வது செல்வத்தின் மீது வெறிபிடித்து அலைவதைக் கட்டுப்படுத்தும். திறமை மிக்கவர்களில் பெரும் செல்வந்தர்கள் இருப்பது போல் திறமையற்ற பலரும் செல்வந்தர்களாக இருப்பதை நாம் கண்முன்னே காண்கிறோம்.
கடினமாக உழைப்பவர்களில் செல்வந்தர்கள் இருப்பது போல் சராசரியாக உழைப்பவர்களிலும் செல்வந்தர்கள் உள்ளனர். அறவே உழைப்பு இல்லாத செல்வந்தர்களையும் நாம் காண்கிறோம். அறிவும், திறமையும் உள்ளவர்களில் அதிகமானோர் பரம ஏழைகளாக இருப்பதையும், அறிவும் திறமையும் இல்லாத பலர் செல்வந்தர்களாக இருப்பதையும் காண்கிறோம்.
அதுபோல் கடின உழைப்பாளிகளில் சிலர் செல்வந்தர்களாக இருப்பது போல் சோம்பேறிகளில் சிலரும் செல்வந்தர்களாக உள்ளனர். இந்த உண்மையை இஸ்லாம் நமக்கு நினைவுபடுத்தி நம்மை நெறிப்படுத்துகிறது.
தான் நாடியோருக்கு அல்லாஹ் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். அவர்கள் இவ்வுலக வாழ்க்கையின் மூலம் மகிழ்ச்சியடைகின்றனர். மறுமையுடன் ஒப்பிடும்போது இவ்வுலக வாழ்க்கை அற்ப சுகம் தவிர வேறில்லை.
(திருக்குர்ஆன் 13:26)
தான் நாடியோருக்கு உமது இறைவன் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். அவன் தனது அடியார்களை நன்கறிந்தவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கிறான்.
(திருக்குர்ஆன் 17:30)
தான் நாடியோருக்குச் செல்வத்தை அல்லாஹ் தாராளமாகவும், குறைத்தும் வழங்குகிறான் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்துக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.
(திருக்குர்ஆன் 30:37)
செல்வத்தைத் திரட்டுவதற்காக நாம் நெறிமுறைகளைப் பேணாமல் நடந்தாலும் நமக்கு அல்லாஹ் எதை எழுதி வைத்துள்ளானோ அதுதான் கிடைக்கும். நெறிமுறைகளைப் பேணி நாம் நடந்தாலும் நமக்குக் கிடைக்க வேண்டியது கிடைத்து விடும். நமக்குக் கிடைக்க வேண்டும் என்று இறைவன் விதித்தது எப்படியும் கிடைத்து விடும் எனும்போது நாம் ஏன் நெறிமுறைகளை மீறி பாவத்தைக் கட்டிக் கொள்ள வேண்டும் என்ற உண்மையை மேற்கண்ட வசனங்கள் மூலம் அல்லாஹ் சொல்லித் தருகிறான்.
செல்வம் நல்லோர் என்பதற்கான அடையாளம் அல்ல.
நான் நல்லவனாகத்தானே வாழ்கிறேன். எனக்கு ஏன் இந்தப் பணக்கஷ்டம் என்று நாம் எண்ணும்போது நாம் தடம் புரள வேண்டிய நிலை ஏற்படும். செல்வம் கொடுக்கப்பட்ட அனைவரும் நல்லவர்கள் அல்லர். செல்வம் வழங்கப்படாதவர்கள் அனைவரும் கெட்டவர்களும் அல்லர்.
கெட்டவர்கள் அனைவரும் செல்வந்தர்களாக இருந்தால் நாமும் அப்படி நடந்தால் செல்வம் வந்து குவியுமே என்று கருதலாம். ஆனால் கெட்டவர்களிலும் ஏழைகள் இருக்கத்தான் செய்கின்றனர். நல்ல வழியில் மட்டும் பொருள் ஈட்டினால் நாம் செல்வந்தர்களாக ஆக முடியாது என்றும் நாம் கருத முடியாது. மிக நல்லவர்களாக வாழ்ந்தவர்களிலும் வாழ்ந்து கொண்டிருப்பவர்களிலும் செல்வந்தர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.
இதைப் புரிந்து கொள்வது பொருளீட்டுவதற்காக எப்படியும் நடந்து கொள்ளலாம் என்ற எண்ணத்தை மாற்றி அமைக்கும்.கெட்டவர்களில் பலர் பெரும் செல்வந்தர்களாக இருந்ததையும் நல்லவர்களில் பலர் கஷ்டப்பட்டதையும் நல்லவர்களில் பலர் செல்வந்தர்களாக இருந்ததையும் இதற்காகவே அல்லாஹ் நமக்கு எடுத்துக் காட்டுகிறான்.
கெட்டவர்களுக்கும் செழிப்பான வாழ்க்கை!
மூஸா நபி அவர்களின் சமுதாயத்தில் காரூன் என்ற கெட்டவனுக்குச் செல்வத்தைக் கொடுத்ததை அல்லாஹ் பின்வரும் வசனத்தில் சொல்லிக் காட்டுகிறான்.
காரூன், மூஸாவின் சமுதாயத்தில் ஒருவனாக இருந்தான். அவர்களுக்கு அநீதி இழைத்தான். அவனுக்குக் கருவூலங்களை வழங்கினோம். அவற்றின் சாவிகளைச் சுமப்பது வலிமை மிக்க கூட்டத்தினருக்குச் சிரமமாக இருக்கும்.
(திருக்குர்ஆன் 28:76)
தனது அலங்காரத்துடன் அவன் தனது சமுதாயத்திடம் சென்றான். காரூனுக்குக் கொடுக்கப்பட்டது போன்று நமக்கும் கொடுக்கப்பட்டிருக்கக் கூடாதா? அவன் பெரும் பாக்கியமுடையவனாக இருக்கிறான் என்று இவ்வுலக வாழ்க்கையை விரும்புவோர் கூறினர்.
(திருக்குர்ஆன் 28:79)
பொக்கிஷங்களைப் பூட்டிவைக்கும் அறைகளின் சாவிகளைச் சுமப்பதற்கு பெருங்கூட்டம் தேவை என்பதும் அதுகூட அவர்களுக்குச் சிரமமாக இருக்கும் என்பதும் காரூனின் செல்வம் எந்த அளவுக்கு இருந்திருக்கும் என்பதை நம் கண் முன்னால் நிறுத்துகிறது. மூஸா நபி சமுதாயத்தில் வாழ்ந்த கொடுங்கோலனாகிய ஃபிர்அவ்னுக்கு அளப்பரிய செல்வத்தை அல்லாஹ் வழங்கியிருந்தான் என்று கீழ்க்காணும் வசனம் கூறுகிறது.
எங்கள் இறைவா! ஃபிர்அவ்னுக்கும், அவனது சபையோருக்கும் இவ்வுலக வாழ்க்கையில் அலங்காரத்தையும், செல்வங்களையும் அளித்திருக்கிறாய்! எங்கள் இறைவா! உன் பாதையிலிருந்து அவர்களை வழிகெடுக்கவே (இது பயன்படுகிறது). எங்கள் இறைவா! அவர்களின் செல்வங்களை அழித்து, அவர்களின் உள்ளங்களையும் கடினமாக்குவாயாக! துன்புறுத்தும் வேதனையைக் காணாமல் அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள் என்று மூஸா கூறினார்.
(திருக்குர்ஆன் 10:88)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் இறைவனுக்கு இணை கற்பித்துக் கொண்டிருந்த குரைஷ் குலத்தாருக்குச் செல்வத்தை வாரி வழங்கியிருந்ததை அல்லாஹ் பின்வரும் வசனத்தில் நினைவூட்டுகிறான்.
குரைஷிகளை மகிழ்வித்ததற்காகவும், குளிர் மற்றும் கோடை காலப் பயணங்களில் அவர்களை மகிழ்வித்ததற்காகவும் இந்த ஆலயத்தின் இறைவனை அவர்கள் வணங்கட்டும். பசியின்போது அவர்களுக்கு அவன் உணவளித்தான். பயத்திலிருந்து அவர்களுக்கு அபயமளித்தான்.
(திருக்குர்ஆன் 106வது அத்தியாயம்!)
சிலருக்கு செல்வத்தை அதிக அளவில் வழங்குவது அவர்களை ஆட்டம் போட வைத்து கடும் தண்டனை அளிப்பதற்காகத்தான் என்று அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.
அவர்களின் மக்கட்செல்வமும், பொருட்செல்வமும் உம்மைக் கவர வேண்டாம். அவற்றின் மூலம் இவ்வுலக வாழ்க்கையில் அவர்களைத் தண்டிப்பதையும், அவர்கள் (ஏகஇறைவனை) மறுத்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களது உயிர்கள் பிரிவதையுமே அல்லாஹ் நாடுகிறான்.
(திருக்குர்ஆன் 9:55)
அவர்களுக்கு நாம் செல்வத்தையும், பிள்ளைகளையும் வழங்கியிருப்பது குறித்து நல்லவற்றை விரைந்து வழங்குகிறோம் என்று எண்ணுகிறார்களா? அவ்வாறில்லை! அவர்கள் உணர மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 23: 55,56)
நல்லவர்களுக்கும் செழிப்பான வாழ்க்கை!
கெட்டவர்களுக்குச் செல்வம் வழங்கப்பட்டுள்ளது என்று திருக்குர்ஆன் கூறுவது போலவே நல்லவர்களுக்குச் செல்வம் வழங்கப்பட்டுள்ளதையும் கூறுகிறது. சுலைமான் (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்ட செல்வச் செழிப்பைப் பின்வருமாறு திருக்குர்ஆன் எடுத்துக் காட்டுகிறது.
இம்மாளிகையில் நுழைவாயாக! என்று அவளிடம் கூறப்பட்டது. அதை அவள் கண்டபோது தண்ணீர்த் தடாகம் என நினைத்து, தனது கீழாடையைக் கரண்டைக்கு மேல் உயர்த்தினாள். இது பளிங்குகளால் பளபளப்பாக்கப்பட்ட மாளிகை என்று அவள் கூறினாள். நான் எனக்கே தீங்கு இழைத்து விட்டேன். ஸுலைமானுடன் சேர்ந்து அகிலத்தின் இறைவனுக்குக் கட்டுப்பட்டு விட்டேன் என்று அவள் கூறினாள்.
(திருக்குர்ஆன் – 27:44)
தண்ணீர் என்று நினைக்கும் அளவுக்கு சுலைமான் நபியவர்களின் அரண்மனையின் தரைத்தளம் இருந்தது என்றால் எத்தகைய சொகுசான வசதியை அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியுள்ளான் என்பதை அறியலாம்.
தாவூதுக்கு ஸுலைமான் வாரிசானார். மக்களே! பறவையின் மொழி எங்களுக்குக் கற்றுத் தரப்பட்டுள்ளது. அனைத்துப் பொருட்களும் எங்களுக்குத் தரப்பட்டுள்ளது. இதுவே தெளிவான அருட்கொடையாகும் என்று அவர் கூறினார். . ஜின்கள், மனிதர்கள், பறவைகள் ஆகியவற்றின் படைகள் ஸுலைமானுக்காகத் திரட்டப்பட்டு அவர்கள் அணி வகுக்கப்பட்டனர்.
(திருக்குர்ஆன் 27:16,17)
அவர் விரும்பிய மாளிகைகளையும், சிற்பங்களையும், தடாகங்களைப் போன்ற கொப்பரைகளையும், நகர்த்த முடியாத பாத்திரங்களையும், அவருக்காக அவை செய்தன. தாவூதின் குடும்பத்தாரே! நன்றியுடன் செயல்படுங்கள்! எனது அடியார்களில் நன்றியுடையோர் குறைவாகவே உள்ளனர் (என்று கூறினோம்.
(திருக்குர்ஆன் 34:13)
நல்லவர்களுக்கும் வறுமை!
சுலைமான் நபிக்கு ஏராளமான செல்வங்களை வழங்கிய இறைவன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் ஆரம்பத்தில் நல்ல செல்வத்தை வழங்கி இருந்தான். நபியாக அவர்கள் நியமிக்கப்படுவதற்கு முன் அவர்கள் பெரிய செல்வந்தராக இருந்தார்கள்.
உம்மை வறுமையில் இருக்கக் கண்டு தன்னிறைவு பெற்றவராக்கினான்.
(திருக்குர்ஆன் – 93:8)
ஆனால் இறைத்தூதராக அவர்கள் நியமிக்கப்பட்டது முதல் அவர்களின் செல்வம் குறைந்து கொண்டே வந்து கற்பனை செய்து பார்க்க முடியாத வறுமையை அவர்கள் சந்தித்தார்கள்.
உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது :
என்னிடம் ஆயிஷா (ரலி) அவர்கள், என் சகோதரி மகனே! நாங்கள் பிறை பார்ப்போம்; மீண்டும் பிறை பார்ப்போம்; பிறகும் பிறை பார்ப்போம். இப்படி இரண்டு மாதங்களில் மூன்று முறை பிறை பார்ப்போம். அப்படியிருந்தும், அல்லாஹ்வின் தூதருடைய வீட்டில் (அடுப்பில்) நெருப்பு மூட்டப்படாது என்று கூறினார்கள். நான், என் சிற்றன்னையே! நீங்கள் எதைக் கொண்டுதான் வாழ்க்கை நடத்தினீர்கள்? என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள், இரு கருப்பான பொருள்கள் : (ஒன்று) பேரீச்சம் பழம்; (மற்றொன்று) தண்ணீர். மேலும் அல்லாஹ்வின் தூதருக்கு அன்சாரிகளான சில அண்டை வீட்டார் இருந்தார்கள். அவர்களிடம் குறிப்பிட்ட காலத்திற்கு இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ள மற்றவர்கள் வழங்கிய ஒட்டகங்கள் இருந்தன. அவர்கள் (அவற்றிலிருந்து கிடைக்கின்ற) தமக்குரிய பாலை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கொடுப்பார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதை எங்களுக்கு அருந்தக் கொடுப்பார்கள் என்று கூறினார்கள்.
நூல் : புகாரி 2567
அபூஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது : நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (நன்கு சலித்து சுத்தம் செய்யப்பட்ட மாவில் தயாரிக்கப்பட்ட) வெள்ளை ரொட்டியைச் சாப்பிட்டதுண்டா? என்று சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு சஹ்ல் (ரலி) அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை (தூதராக) அல்லாஹ் தேர்ந்தெடுத்ததிலிருந்து அவர்களுக்கு மரணத்தை அளிக்கும் வரை (சலித்து சுத்தமாக்கப்பட்ட மாவினாலான) வெள்ளை ரொட்டியைப் பார்த்ததேயில்லை என்று பதிலளித்தார்கள். நான், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் உங்களிடம் சல்லடைகள் இருந்ததுண்டா? என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை (தூதராக) அல்லாஹ் தேர்ந்தெடுத்ததிலிருந்து மரணிக்கச் செய்யும் வரை சல்லடையைக் கண்டதேயில்லை என்றார்கள். நான், சலிக்காத கோதுமையை நீங்கள் எப்படிச் சாப்பிட்டு வந்தீர்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், நாங்கள் கோதுமையை அரைத்து, (உமியை நீக்கி) அதில் (வாயால்) ஊதுவோம். அதிலிருந்து (தவிடு, உமி போன்ற) பறப்பன பறந்து விடும். எஞ்சியதைத் தண்ணீர் கலந்து உண்போம் என்றார்கள்.
நூல் : புகாரி 5413
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
முஹம்மத் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்ததிலிருந்து அவர்கள் இறக்கும் வரை அவர்களின் குடும்பத்தார் கோதுமை உணவைத் தொடர்ந்து மூன்று நாட்கள் வயிறு நிரம்ப உண்டதில்லை.
நூல் : புகாரி 5416, 5374
ஆபிஸ் பின் ரபீஆ அல்கூஃபீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நான், ஆயிஷா (ரலி) அவர்களிடம் (ஹஜ் பெருநாளில் அறுக்கப்படும்) குர்பானி இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேல் வைத்துச் சாப்பிடுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்களா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், மக்கள் (பஞ்சத்தால்) பசி பட்டினியோடு இருந்த ஓர் ஆண்டில்தான் அவர்கள் அப்படி(த் தடை) செய்தார்கள். வசதி உள்ளவர், ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்போது விரும்பினார்கள்.
(பிறகு) நாங்கள் ஆட்டுக் காலை எடுத்து வைத்துப் பதினைந்து நாட்களுக்குப் பிறகும்கூட அதைச் சாப்பிட்டு வந்தோம் என்று பதிலளித்தார்கள். உங்களுக்கு இப்படிச் செய்ய வேண்டிய கட்டாயம் என்ன வந்தது? என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் சிரித்து விட்டு, முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் சென்று சேரும் வரை அவர்களுடைய குடும்பத்தார் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் குழம்புடன் வெள்ளைக் கோதுமை ரொட்டியை வயிறு நிரம்பச் சாப்பிட்டதில்லை என்று சொன்னார்கள்.
நூல் : புகாரி 5423
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, எனக்கு (கடுமையான பசி)த் துன்பம் ஏற்பட்டுள்ளது என்று கூறினார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் துணைவியரில் ஒருவரிடம் ஆளனுப்பி (அவர்களிடம் உணவு ஏதேனும் இருக்கிறதா என்று கேட்டு வரச் சொன்)னார்கள். அதற்கு அத்துணைவியார், தங்களைச் சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீது ஆணையாக! என்னிடம் தண்ணீரைத் தவிர வேறெதுவும் இல்லை என்று பதிலளித்தார்.
பிறகு (தம் துணைவியரில்) மற்றொருவரிடம் ஆளனுப்பியபோது, அவரும் அதைப் போன்றே பதிலளித்தார். முடிவில் ஒவ்வொரு துணைவியரிடமிருந்தும் அதே பதிலே வந்தது. இல்லை; தங்களைச் சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீது ஆணையாக! என்னிடம் தண்ணீரைத் தவிர வேறெதுவும் இல்லை என்றே கூறினர்.
நூல் : முஸ்லிம் 4175
ஆயிஷா (ரலி) கூறியதாவது :
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஒரே நாளில் இரண்டு வேளை ரொட்டியும், ஆலிவ் எண்ணெயும் வயிறு நிரம்ப உண்ணாமலேயே இறந்தார்கள்.
நூல் : முஸ்லிம் 5683
கத்தாதா பின் திஆமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது :
நாங்கள் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் சென்று வருவோம். அவர்களுடன் அவர்களுக்காக ரொட்டி தயாரிப்பவர் ஒருவரும் இருப்பார். (ஒரு நாள்) அனஸ் (ரலி) அவர்கள், சாப்பிடுங்கள்! (ஆனால்,) நான் அறிந்த வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் சென்று சேரும் வரை மிருதுவான ரொட்டியைப் பார்த்ததில்லை. வெந்நீரால் முடி களையப்பட்டு தோலுடன் சமைக்கப்பட்ட (இளம்) ஆட்டை அவர்கள் தமது கண்ணாலும் ஒருபோதும் கண்டதில்லை என்று கூறினார்கள்.
நூல் : புகாரி 5421, 6457
நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் தீட்டப்படாத கோதுமையில் தயாரிக்கப்பட்ட ரொட்டியையும் வாசனை நீங்கிய உருக்கப்பட்ட கொழுப்பையும் கொண்டு சென்றிருக்கிறேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கவசத்தை மதீனாவில் உள்ள ஒரு யூதரிடம் அடைமானமாக வைத்து அவரிடமிருந்து தமது குடும்பத்தினருக்காகத் தீட்டப்படாத கோதுமையை வாங்கியிருந்தார்கள். முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பத்தாரிடம் தீட்டிய கோதுமையில் ஒரு ஸாஉ, மற்ற தானியத்தில் ஒரு ஸாஉ இருந்ததில்லை. அந்த நேரத்தில் நபியவர்களுக்கு ஒன்பது மனைவியர் இருந்தனர்.
நூல் : புகாரி 2069, 2508
ஸாவு என்பது சுமார் இரண்டு லிட்டர் அளவுடைய அளவையாகும்.
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது :
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு நாள் என்னிடம் வந்து, உங்களிடம் (உண்பதற்கு) ஏதேனும் இருக்கிறதா? என்று கேட்டார்கள். நாங்கள் இல்லை, என்றோம். அப்படியானால் நான் (இன்று) நோன்பாளியாக இருந்து கொள்கிறேன் என்றார்கள். பிறகு மற்றொரு நாள் அவர்கள் எம்மிடம் வந்தபோது, அல்லாஹ்வின் தூதரே! நமக்கு ஹைஸ் எனும் பலகாரம் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது என்றோம். அதற்கு அவர்கள், எனக்கு அதைக் காட்டு. நான் இன்று காலை நோன்பு நோற்றிருந்தேன் என்று கூறிவிட்டு, அதை (வாங்கி)ச் சாப்பிட்டார்கள்.
நூல் : முஸ்லிம் 2124
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது :
நபிகள் நாயகம் (ஸல்) ஒரு பகல் அல்லது ஓர் இரவு (தமது இல்லத்திலிருந்து) வெளியே புறப்பட்டு வந்தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் வெளியே இருந்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இந்த நேரத்தில் நீங்கள் இருவரும் உங்கள் வீடுகளிலிருந்து புறப்பட்டு வர என்ன காரணம்? என்று கேட்டார்கள்.
அதற்கு, பசிதான் (காரணம்), அல்லாஹ்வின் தூதரே! என்று அவ்விருவரும் பதிலளித்தனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! நானும் (புறப்பட்டு வந்தது அதனால்)தான். உங்கள் இருவரையும் எது வெளியே வரச் செய்ததோ அதுதான் என்னையும் வெளியே வரச் செய்தது என்று கூறினார்கள்.
நூல் : முஸ்லிம் 4143
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) கூறியதாவது :
(ஒரு நாள்) நான் என் வீட்டில் அமர்ந்திருந்தேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். அப்போது (தம்மருகே வருமாறு) என்னை நோக்கி சைகை செய்தார்கள். நான் அவர்களிடம் எழுந்து சென்றேன். அவர்கள் எனது கையைப் பிடித்துக் கொண்டார்கள். பிறகு நாங்கள் இருவரும் நடந்தோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் துணைவியரில் ஒருவரது அறை வந்ததும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உள்ளே நுழைந்தார்கள். பிறகு எனக்கும் (உள்ளே வர) அனுமதியளித்தார்கள். நான் வீட்டாருக்காக இடப்பட்டிருந்த திரை வரை சென்றேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏதேனும் உணவு உள்ளதா? என்று கேட்டார்கள்.
வீட்டார், ஆம் என்றனர். பிறகு மூன்று ரொட்டிகள் கொண்டு வரப்பட்டு, அவர்களுக்கு முன்னால் வைக்கப்பட்டன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு ரொட்டியை எடுத்துத் தமக்கு முன்னால் வைத்தார்கள். பிறகு மற்றொரு ரொட்டியை எடுத்து எனக்கு முன்னால் வைத்தார்கள். பிறகு மூன்றாவது ரொட்டியை எடுத்து அதை (இரண்டாக)ப் பிட்டு, ஒரு பாதியைத் தமக்கு முன்னாலும் மற்றொரு பாதியை எனக்கு முன்னாலும் வைத்தார்கள். பிறகு (தம் வீட்டாரிடம்), குழம்பேதும் இருக்கிறதா? என்று கேட்டார்கள். வீட்டார், இல்லை; சிறிதளவு காடியைத் தவிர வேறெதுவுமில்லை என்று கூறினர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அதைக் கொண்டு வாருங்கள். குழம்புகளில் அருமையானது அதுவே என்று சொன்னார்கள்.
நூல் : முஸ்லிம் 4172
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது :
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெரிய வட்டிலில் (ஸஹனில்) வைத்து (உணவு) உண்டதை ஒருபோதும் நான் அறிந்ததில்லை. அவர்களுக்காக ஒருபோதும் மிருதுவான ரொட்டி தயாரிக்கப்பட்டதில்லை. மேலும், அவர்கள் உணவு மேசையில் (அமர்ந்து) ஒருபோதும் சாப்பிட்டதில்லை. இதன் அறிவிப்பாளரான கத்தாதா (ரஹ்) அவர்களிடம், அப்படியென்றால், அவர்கள் எதில் அமர்ந்து உண்டு வந்தார்கள்? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், உணவு விரிப்பில் என்று பதிலளித்தார்கள்.
நூல் : புகாரி 5386, 5415
நபியவர்கள் ஒரு ஈச்சம் பாயின் மீது தூங்கினார்கள். அதனுடைய வரிகள் அவர்களின் விலாப்புறத்தில் (நன்றாக) பதிந்திருந்தது. அல்லாஹ்வின் தூதரே நாங்கள் உங்களுக்கு ஒரு விரிப்பை ஏற்பாடு செய்யட்டுமா? என்று கேட்டோம். அதற்கு நபியவர்கள் எனக்கும் இந்த உலகிற்கும் என்ன இருக்கிறது? ஒரு மரத்தின் கீழ் நிழலிற்காக ஒதுங்கி ஓய்வெடுத்து பிறகு அதை விட்டுச் செல்கின்றானே அந்தப் பயணியைப் போன்றுதான் இவ்வுலகத்தில் நான் என்று கூறினார்கள்.
நூல் : திர்மிதி 2299
ஆயிஷா (ரலி) கூறியதாவது :
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பாய் ஒன்று இருந்தது; பகலில் அதை விரித்துக் கொள்வார்கள். இரவில் அதையே அறை போன்று அமைத்துக் கொள்வார்கள். (அதற்குள் நின்று அவர்கள் தொழும்போது) மக்களில் சிலர் அவர்களிடம் திரண்டு (வந்து) அவர்களுக்குப் பின்னால் (நின்று அவர்களைப் பின்பற்றித்) தொழுவார்கள்.
நூல் : புகாரி 730
ஆயிஷா (ரலி) கூறியதாவது :
நான் (இரவில்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்புறமாக(ப் படுத்து) உறங்கிக் கொண்டிருப்பேன். அப்போது எனது கால்கள் அவர்களது கிப்லாவில் (அவர்கள் ஸஜ்தா செய்யுமிடத்தில்) இருந்து கொண்டிருக்கும். அவர்கள் ஸஜ்தாவிற்கு வரும்போது என்னைத் தமது விரலால் தொட்டு உணர்த்துவார்கள். உடனே நான் எனது கால்களை மடக்கிக் கொள்வேன். அவர்கள் நிலைக்குச் சென்று விட்டால் (மறுபடியும்) நான் கால்களை நீட்டிக் கொள்வேன். அந்த நாட்களில் (எங்கள்) வீடுகளில் விளக்குகள் இருக்கவில்லை.
நூல் : புகாரி 382, 513
ஆயிஷா (ரலி) கூறியதாவது :
பேரீச்சம் நாரினால் நிரப்பப்பட்ட பதனிடப்பட்ட தோலே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் படுக்கை விரிப்பாக இருந்தது.
நூல் : புகாரி 6456
உமர் பின் அபீசலமா (ரலி) அவர்கள் கூறியதாவது :
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரே ஆடையை அணிந்து கொண்டு, அதன் ஒரு ஓரங்களையும் தமது தோள்கள் மீது மாற்றிப் போட்டுக் கொண்டு தொழுதார்கள்.
நூல் : புகாரி 354, 355, 356
அப்துல்லாஹ் பின் மாலிக் பின் புஹைனா (ரலி) அவர்கள் கூறியதாவது : நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழும்போது (சஜ்தாவில்) தமது இரு அக்குள்களின் வெண்மை தென்படும் அளவுக்கு இரு கை (புஜங்)களையும் விரி(த்து வை)ப்பார்கள்.
நூல் : புகாரி 807
இரண்டு போர்வைதான் அவர்களின் ஆடையாக இருந்துள்ளது என்பதும் அது கூட முழுக்கைகளை மறைக்கும் அளவுக்கு இல்லாமல் ஸஜ்தாவின் போது அக்குளை வெளிப்படுத்தும் வகையில் இருந்தது என்பதும் அவர்களின் எல்லையற்ற வறுமைக்கு எடுத்துக் காட்டாக உள்ளது.
அம்ர் பின் ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது :
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறந்தபோது திர்ஹமையோ, தீனாரையோ (வெள்ளி நாணயத்தையோ, பொற்காசையோ), அடிமையையோ, அடிமைப் பெண்ணையோ, (வேறு எந்தச் செல்வத்தையுமோ) விட்டுச் செல்லவில்லை; பைளா எனும் தமது கோவேறு கழுதையையும், தம்முடைய ஆயுதங்களையும், வழிப்போக்கர்களுக்குத் தர்மமாக ஆக்கிய ஒரு நிலத்தையும் தவிர.
நூல் : புகாரி 2739
நமது உயிரினும் மேலாக மதிக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்த வறுமைக்கு நிகரான ஒரு வறுமையை அனுபவிப்பவர் உலகில் ஒரே ஒருவர்கூட இருக்க மாட்டார். நாம் வறுமையில் இருக்கிறோம் என்று கருதுபவர்கள் தங்கள் வாழ்க்கைத் தரத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கைத் தரத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் அவர் தனது வாழ்க்கையே செழிப்பான வாழ்க்கை என்ற முடிவுக்குத்தான் வருவார்.
நம்மை விட நல்லவர்களே இவ்வளவு சிரமப்பட்டிருக்கும்போது நாம் எம்மாத்திரம் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொண்டால் வறுமை என்பது ஒரு பிரச்சனையே அல்ல என்ற நிலைக்கு நாம் பக்குவப்பட்டு விடுவோம்.
பொருளாதாரம் மட்டும்தான் செல்வமா?
பொருளாதாரம் திரட்டுவதில் எந்த நெறிமுறையையும் பேணவேண்டியதில்லை என்று அதிகமான மக்கள் நம்புகிறார்கள். இதற்குக் காரணம் கெட்டவர்களுக்கு அல்லாஹ் எல்லா இன்பங்களையும் வழங்கியுள்ளதாகவும் நல்லவர்களுக்கு ஒரு இன்பத்தையும் வழங்கவில்லை என்றும் நம்புவதுதான்.
இறைவன் அளித்துள்ள நற்பேறுகள் கோடாணு கோடிகள் உள்ளன. ஆனால் பொருளாதாரம் மட்டுமே பாக்கியம் என்று கருதுவதால்தான் இந்தத் தடுமாற்றம் ஏற்படுகிறது. ஒருவனுக்குப் பல்லாயிரம் கோடி பண வசதி இருந்தாலும் அவனுடைய வாழ்க்கையைக் கவனித்தால் அவனது வாழ்க்கை நூறு சதவிகிதம் நிறைவாக இருக்காது. எத்தனையோ பணக்காரர்கள் தம்மிடம் உள்ள பணத்தை அனுபவிக்க முடியாத நிலையில் இருப்பதைக் காண்கிறோம்.
உயர்தரமான உணவை அவர்கள் சாப்பிட முடியாத அளவுக்குப் பல நோய்கள் அவர்களுக்கு இருக்கும். முக்கியமான பல உறுப்புக்கள் செயல்படாத நிலைக்குச் சென்று விடும். தனது முழுச் சொத்தையும் செலவிட்டாலும் அதைச் சரி செய்ய முடியாது. ஆனால் ஒரு ஏழை எதையும் சாப்பிட முடியும். அவனது உடல் உறுப்புக்கள் அனைத்தும் சீராக இருக்கும். மருத்துவத்துக்காக பெரிய அளவில் செலவு செய்யும் நிலை இருக்காது. செல்வந்தரின் நிலையை விட நமது நிலை இந்த வகையில் மேலானது என்று அவன் சிந்தித்தால் அவனுக்கு எந்தத் தடுமாற்றமும் ஏற்படாது.
உலகில் எந்த மனிதனுக்கும் நூறு சதவிகித பாக்கியங்கள் வழங்கப்படவில்லை. குறைகளும் சேர்த்தே வழங்கப்பட்டுள்ளன. சிலருக்குப் பணத்தில் குறை இருந்தால் மற்றும் சிலருக்கு ஆரோக்கியத்தில் குறை இருக்கும். மனநிம்மதியில் குறை இருக்கும். குழந்தையின்மை என்ற குறை வேறு சிலருக்கு இருக்கும். மனைவி மக்களால் ஏற்படும் அவப்பெயர்கள் இன்னும் சிலருக்கு உள்ள குறையாக இருக்கும்.
சிந்தித்துப் பார்த்தால் செல்வத்தை விட பெரும் பாக்கியங்கள் உலகில் இருப்பதையும், எத்தனையோ செல்வந்தர்களுக்குக் கொடுக்காத அந்த பாக்கியங்களை அல்லாஹ் தனக்கு வழங்கியுள்ளான் என்பதையும் ஒருவன் அறிந்து கொள்ள முடியும்.
கோடிகளுக்கு அதிபதிகள் பலரை நாம் பார்க்கிறோம். விரும்பிய அனைத்தையும் அனுபவிக்கும் அளவுக்கு அவர்களிடம் செல்வம் குவிந்து கிடக்கும். ஆனால் அவர்கள் இனிப்பு, இறைச்சி, மற்றும் கொழுப்புச் சத்துள்ள பல உணவுகளைச் சாப்பிடக் கூடாது என்று மருத்துவர்களால் எச்சரிக்கப்பட்டுள்ளதை நாம் காண்கிறோம். ஆனால் அவர்கள் வீட்டில் அற்ப ஊதியத்திற்காகப் பணி செய்யும் ஊழியர்கள் விரும்பிய உணவை எல்லாம் சாப்பிடும் அளவுக்கு ஆரோக்கியத்துடன் இருப்பதைக் காண்கிறோம். இது பணத்தை விட மாபெரும் பாக்கியம் அல்லவா?
எந்த மனிதனுக்கும் அனைத்து பாக்கியங்களும் வழங்கப்படவே இல்லை. அல்லாஹ் சிலருக்குப் பணத்தை வழங்கி ஆரோக்கியத்தைக் குறைத்து விடுகிறான். ஆரோக்கியத்தைக் குறைவில்லாமல் கொடுத்து குழந்தைப் பேறு இல்லாமல் ஆக்கி விடுகிறான். குழந்தைப் பேறைக் கொடுத்து வேறு ஏதேனும் சில குறைகளை அமைத்து விடுகிறான்.
இறைவன் எத்தனையோ குறைகளை நமக்குத் தராமல் வறுமை என்ற குறையைத் தந்துள்ளான் என்று புரிந்து கொண்டால் வறுமை ஒரு பிரச்சனையே அல்ல என்ற மன நிம்மதி நமக்குக் கிடைக்கும். மனிதனின் இந்த மனநிலையை அல்லாஹ் பின்வருமாறு எடுத்துக் காட்டுகிறான்.
மனிதனை அவனது இறைவன் மரியாதையுடன் வாழச் செய்து இன்பத்தையும் வழங்கி சோதிக்கும்போது என் இறைவன் என்னைக் கண்ணியமாக நடத்தினான் என்று கூறுகிறான். அவனது செல்வத்தை அளவுடன் வழங்கி சோதிக்கும்போது என் இறைவன் என்னை அவமானப்படுத்தி விட்டான் எனக் கூறுகிறான்.
(திருக்குர்ஆன் 89 : 15, 16)
இந்த வாழ்க்கைப் பாடத்தைப் படித்துக் கொண்டால் நல்லவர்களாக வாழ்ந்து நாம் மட்டும் ஏன் கஷ்டப்படுகிறோம் என்று ஒருவன் எண்ண மாட்டான். நமக்குப் பணக் கஷ்டம் இருப்பது போல் மற்றவர்களுக்கு வேறு விதமான கஷ்டங்கள் உள்ளன என்று வாழ்க்கையை சரியாகப் புரிந்து கொள்ளும்போது நல்லவனாக வாழ்வதால் நமக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை என்பதைப் புரிந்து கொள்வான்.
பட்ட கஷ்டங்கள் வீணாவதில்லை!
சோதிக்கும் வகையில் உண்மையாகவே நமக்கு அதிகமான கஷ்டத்தை அல்லாஹ் கொடுக்கும் போது அதைச் சகித்துக் கொண்டால் நாம் பட்ட கஷ்டங்களுக்கான பலனை மறுமையில் குறைவின்றி அல்லாஹ் வழங்குவான். நல்லவனாக வாழ்வதால் நமக்கு இழப்பு ஏதும் இல்லை; மறுமையில் நமக்கு மாபெரும் பரிசுகள் காத்துக் கிடக்கின்றன என்று நம்பும்போது நல்லவனாக வாழ்வதற்கான உறுதி அதிகரிக்கும்.
இந்த உலகில் நல்லவனாக வாழும்போது சிரமங்கள் ஏற்பட்டால் நல்லவனாக வாழ்ந்ததற்கான பரிசை இன்னொரு உலகத்தில் நாம் பெறப் போகிறோம். இவ்வுலகத்தில் சொகுசாக வாழ்வதற்காக நெறிமுறைகளை மீறினால் அதற்கான தண்டனையை நாம் இன்னொரு உலகத்தில் அனுபவிக்க வேண்டும் என்ற உறுதியான நம்பிக்கை நம்மைத் தடம் புரளாமல் காப்பாற்றும்.
இது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவான அறிவுரைகளைக் கூறியுள்ளனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
யாருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகின்றானோ அவரைச் சோதனைக்கு உள்ளாக்குகின்றான்.
நூல் : புகாரி 5645
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம், கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்குப் பதிலாக அவருடைய பாவங்களிலிருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை.
நூல் : புகாரி 5642
அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் என்னிடம், சொர்க்கவாசியான ஒரு பெண்மணியை உங்களுக்குக் காட்டட்டுமா என்று கேட்டார்கள். நான், ஆம்; (காட்டுங்கள்) என்று சொன்னேன். அவர்கள், இந்தக் கறுப்பு நிறப் பெண்மணி தாம் அவர். இவர் (ஒரு நாள்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, நான் வலிப்பு நோயால் (அடிக்கடி) பாதிக்கப்படுகிறேன். அப்போது என் (உடலிலிருந்து ஆடை விலகி) உடல் திறந்து கொள்கின்றது. ஆகவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்றார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நீ நினைத்தால் பொறுமையாக இருக்கலாம்.
(இதற்குப் பதிலாக) உனக்குச் சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்குக் குணமளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் பிரார்த்திக்கிறேன் என்று சொன்னார்கள். இந்தப் பெண்மணி, நான் பொறுமையாகவே இருந்து விடுகிறேன். ஆனால், (வலிப்பு வரும்போது ஆடை விலகி) என் உடல் திறந்து கொள்கிறது. அப்படித் திறந்து கொள்ளாமல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்று சொன்னார். அவ்வாறே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்.
நூல் : புகாரி 5652
ஒரு முஸ்லிம் சொர்க்கத்துக்குச் செல்ல நல்லறங்கள் காரணமாக அமைவது போல் துன்பங்களைச் சகித்துக் கொள்வதும் சொர்க்கம் செல்வதற்கான காரணமாக அமைந்துள்ளது என்பதற்கு இந்த நபிமொழி சான்றாக அமைந்துள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ் கூறுகிறான் : நான் என் அடியானை, அவனுக்கு விருப்பமான இரு பொருட்களை (கண்களைப் பறித்து)க் கொண்டு சோதித்து, அவன் அதைப் பொறுத்துக் கொண்டால், அவற்றுக்குப் பதிலாக சொர்க்கத்தை நான் அவனுக்கு வழங்குவேன்.
நூல் : புகாரி 5653
இந்த உலகத்தில் அல்லாஹ் தந்த செல்வங்களை நாம் அனுபவிக்க வேண்டும் என்றால் அதற்குக் கண் மிகவும் அவசியமாகும். கண்ணிருப்பதால்தான் அதிகம் செலவு செய்கிறோம். நாம் அழகான ஆடை வாங்குகிறோம்; அழகான வீட்டை வாங்குகிறோம். எல்லாப் பொருளையும் அழகானவையாகத் தேர்ந்தெடுத்து வாங்குவதற்குக் காரணம் கண்கள்தான்.
இவ்வளவு பெரிய பாக்கியம் மற்றவர்களுக்கு இருப்பது போல் நமக்கு இல்லாமல் போய் விட்டால் நாம் அடையும் துன்பம் கொஞ்சமல்ல. கண்களை இழந்து விட்டாலும் அதனைச் சகித்துக் கொண்டு ஒழுங்காக வாழ்ந்தால் அதற்காக இறைவன் சொர்க்கத்தைத் தருகிறான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
இறை நம்பிக்கையாளரின் நிலையைக் கண்டு நான் வியப்படைகிறேன். அவரது (வாழ்வின்) அனைத்து அம்சங்களும் (அவருக்கு) நன்மையாகவே அமைகின்றன. இறை நம்பிக்கையாளருக்கு அல்லாமல் வேறெவருக்கும் இது கிட்டுவதில்லை. அவருக்கு ஏதேனும் மகிழ்ச்சி ஏற்பட்டால், அவர் நன்றி செலுத்துகிறார். அது அவருக்கு நன்மையாக அமைகிறது. அவருக்கு ஏதேனும் துயரம் நேர்ந்தால், அவர் பொறுமை காக்கிறார். அதுவும் அவருக்கு நன்மையாக அமைந்து விடுகிறது.
நூல் : முஸ்லிம் 5726
ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக!
(திருக்குர்ஆன் 2:155 )
இவ்வுலகில் நமக்கு ஏற்படும் துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் இறைவனிடம் பரிசு உண்டு என்று நம்பும்போது பொருளீட்டுவதற்காக நாம் மார்க்க நெறிமுறைகளை மீற மாட்டோம்.
மேலும் நம்மைவிடப் பன்மடங்கு சிறந்தவர்களான இறைத்தூதர்கள்கூட பலவித இன்னல்களை அனுபவித்தனர். மறுமையின் மாபெரும் பரிசை எதிர்பார்த்ததால் அந்தத் துன்பங்கள் அவர்களை நிலைகுலையச் செய்யவில்லை.
சஅது (ரலி) அறிவிக்கிறார்கள் :
நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! மக்களில் அதிகமாகச் சோதிக்கப்பட்டவர்கள் யார் என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) நபிமார்கள்; பிறகு அவர்களைப் போன்றவர்கள்; பிறகு அவர்களைப் போன்றவர்கள். ஒவ்வொரு மனிதனும் அவனுடைய மார்க்கப் பிடிப்பின் அளவிற்குச் சோதிக்கப்படுவான். அவனுடைய மார்க்கப் பிடிப்பு உறுதியாக இருந்தால் அவனுடைய சோதனைகள் அதிகரிக்கப்படும்.
அவனுடைய மார்க்கப் பிடிப்பு உறுதியற்றதாக இருந்தால் அவனுடைய மார்க்கப் பிடிப்பின் அளவிற்கு அவன் சோதிக்கப்படுவான். ஒரு அடியான் பூமியில் நடமாடிக் கொண்டிருக்கும் காலமெல்லாம் அவன் மீது எந்தப் பாவங்களும் இல்லாமல் ஆகின்ற வரை அவனை விட்டும் சோதனைகள் நீங்காமலேயே இருக்கும் என்று கூறினார்கள்.
நூல் : திர்மிதி 2322
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மற்றவர்களை விட அதிகம் சோதிக்கப்பட்டார்கள் என்பதையும் நாம் நினைத்துப் பார்த்தால் துன்பங்களைத் தாங்கிக் கொள்ளும் மனவலிமை நமக்கு அதிகரிக்கும்.
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது :
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடும் காய்ச்சலால் சிரமப்பட்டுக் கொண்டிருந்தபோது நான் அவர்களிடம் சென்று அவர்களை என் கையால் தொட்டு, அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் கடும் காய்ச்சலால் சிரமப்படுகிறீர்களே! என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஆம்; உங்களில் இருவர் காய்ச்சலால் அடையும் துன்பத்தைப் போன்று நான் (ஒருவனே) அடைகிறேன் என்று சொன்னார்கள்.
நான், (இந்தத் துன்பத்தின் மூலம்) தங்களுக்கு இரு (மடங்கு) நன்மைகள் கிடைக்கும் என்பதா இதற்குக் காரணம் என்று கேட்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆம் என்று கூறிவிட்டுப் பிறகு, ஒரு முஸ்லிமுக்கு ஏற்படும் நோயாயினும், அது அல்லாத வேறு துன்பமாயினும் (அதற்கு ஈடாக), மரம் தன் இலைகளை உதிர்த்து விடுவதைப் போன்று அவருடைய பாவங்களை அல்லாஹ் உதிர்க்காமல் விடுவதில்லை என்று சொன்னார்கள்.
நூல் : புகாரி 5647
எனவே நாம் நல்லவர்களாக வாழ்வதால் இவ்வுலகில் எதையும் இழப்பதில்லை. மறுமையில் நாம் இதற்கான கூலியைப் பெறவிருக்கிறோம் என்பதை நினைவு கூர்வதன் மூலம் தவறான முறையில் பொருளீட்டுவதை விட்டு விலகிக் கொள்ள முடியும். அப்படி விலகி வாழும் நன்மக்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி அருள் புரிவானாக.!
வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.