ஸலாம் கூறி முடித்தல்

இதன் பின்னர் தொழுகையின் இறுதியாக அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் என்று வலது புறமும், இடது புறமும் கூற வேண்டும்.

வலது புறமும், இடது புறமும் திரும்பி ‘அஸ்ஸலாமு அலை(க்)கும் வரஹ்ம(த்)துல்லாஹ்’ என்று நபி (ஸல்) அவர்கள் ஸலாம் கூறுவார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி), நூல்கள்: திர்மிதீ 272, அபூதாவூத் 845, இப்னுமாஜா 904, அஹ்மத் 3516

நபி (ஸல்) அவர்கள் தமது வலது பக்கமும், இடது பக்கமும் ஸலாம் கூறும் போது அவர்களது கன்னத்தின் வெண்மையை நான் பார்க்கும் அளவுக்குத் திரும்பியதைக் கண்டேன்.

அறிவிப்பவர்: ஸஅது (ரலி),

நூல்: முஸ்லிம் 916

நிதானமாகச் செய்தல்

தொழுகையில் மேற்கூறிய காரியங்கள் அனைத்தையும் நிதானமாகச் செய்ய வேண்டும். அவசரம் காட்டக் கூடாது. அவ்வாறு அவசரமாகத் தொழும் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாது.

நபி (ஸல்) அவர்கள் பள்ளிக்கு வந்தார்கள். ஒரு மனிதர் பள்ளிக்கு வந்து தொழலானார். (தொழுது முடித்ததும்) நபி (ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறினார். நபி (ஸல்) அவர்கள் பதில் ஸலாம் கூறினார்கள். பின்பு ‘திரும்பிச் சென்று நீர் தொழுவீராக! நீர் தொழவே இல்லை’ என்று கூறினார்கள். அந்த மனிதர் முன்பு தொழுதது போலேவே மீண்டும் தொழுது விட்டு வந்து நபி (ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறினார். ‘திரும்பிச் சென்று தொழுவீராக நீர் தொழவே இல்லை’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இவ்வாறு மூன்று தடவை நடந்தது. அதன் பிறகு அந்த மனிதர்’சத்திய மார்க்கத்துடன் உங்களை அனுப்பியுள்ள இறைவன் மீது ஆணையாக! இவ்வாறு தொழுவதைத் தவிர வேறு எதையும் நான் அறிந்திருக்கவில்லை; எனவே எனக்குக் கற்றுத் தாருங்கள்’ என்று கேட்டார்.

‘நீர் தொழுகைக்காக நின்றதும் தக்பீர் கூறுவீராக! பின்னர் குர்ஆனில் உமக்குத் தெரிந்தவற்றை ஓதுவீராக! பின்னர் நிதானமாக ருகூவு செய்வீராக! பின்னர் ருகூவிலிருந்து எழுந்து நேராக நிலைக்கு வருவீராக! பின்னர் நிதானமாக ஸஜ்தாச் செய்வீராக! ஸஜ்தாவிலிருந்து எழுந்து நிதானமாக உட்கார்வீராக! இவ்வாறே தொழுகை முழுவதும் செய்வீராக!’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

நூல்கள்: புகாரி 757, முஸ்லிம் 602

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]