ஸஜ்தா
ருகூவிலிருந்து எழுந்து, ரப்பனா லக்கல் ஹம்து என்று கூறிய பின்னர், அல்லாஹு அக்பர் என்று கூறி ஸஜ்தாச் செய்ய வேண்டும். ஸஜ்தாவில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகளைப் பார்ப்போம்.
கைகளை முதலில் வைக்க வேண்டும்
ஸஜ்தாவிற்குச் செல்லும் போது முதலில் இரு உள்ளங்கைகளையும் தரையில் வைத்து, பின்னர் மூட்டுக்களை வைக்க வேண்டும்.
‘உங்களில் ஒருவர் ஸஜ்தாச் செய்யும் போது தனது மூட்டுக் கால்களை வைப்பதற்கு முன் தனது கைகளை வைக்கட்டும். ஒட்டகம் அமர்வது போல் அமர வேண்டாம்.’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: நஸயீ 1079
தரையில் பட வேண்டிய உறுப்புகள்
ஸஜ்தாச் செய்யும் போது நெற்றி, மூக்கு, இரு உள்ளங்கைகள், இரு மூட்டுக்கள், இரு பாதங்களின் நுனி விரல்கள் ஆகியவை தரையில் படுமாறு வைக்க வேண்டும்.
கால் விரல்களை வளைத்து கிப்லாத் திசையை முன்னோக்கும் விதமாக வைக்க வேண்டும்.
இரண்டு கால்களையும் சேர்த்து வைக்க வேண்டும்.
ஆடையோ, முடியோ தரையில் படாதவாறு தடுக்கக் கூடாது.
ஸஜ்தாவில் இரு கைகளையும் காதுகளுக்கு நேராகவோ, அல்லது தோள் புஜங்களுக்கு நேராகவோ வைக்க வேண்டும்.
இரு கைகளைத் தொடையில் படாமலும் முழங்கை தரையில் படாமலும் உயர்த்தி வைக்க வேண்டும்.
தொடையும் வயிறும் சேராமல் இருக்குமாறு வைக்க வேண்டும்.
‘நெற்றி, இரு கைகள், இரண்டு மூட்டுக் கால்கள், இரண்டு பாதங்களின் முனைகள் ஆகிய ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு ஸஜ்தாச் செய்யும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன் – நெற்றியைக் குறிப்பிடும் போது தமது கையால் மூக்கையும் சேர்த்து அடையாளம் காட்டினார்கள் – ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) தடுக்கக் கூடாது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்: புகாரி 812
நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்யும் போது தமது முன் கைகளைத் தமது காதுகளுக்கு நேராக வைத்தார்கள். (ஹதீஸின் சுருக்கம்)
அறிவிப்பவர்: வாயில் பின் ஹுஜ்ர் (ரலி),
நூல்கள்: நஸயீ 18115,அஹ்மத் 18115, தாரமீ 1323
நபி (ஸல்) அவர்கள் தொழும் போது (ஸஜ்தாவில்) தமது தொடைகளின் மீது வயிற்றைத் தாங்கிக் கொள்ளாமலும் தமது இரு தொடைகளையும் விரித்தவர்களாகவும் ஸஜ்தாச் செய்வார்கள்.
அறிவிப்பவர்: பரா (ரலி),
நூல்: நஸயீ 1093]
‘நீ ஸஜ்தாச் செய்யும் போது உனது உள்ளங்கைகளை (தரையில்) வைத்து முழங்கைகளை உயர்த்திக் கொள்’ என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: பரா (ரலி),
நூல்: முஸ்லிம் 763
…நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்யும் போது தமது கைளை விரிக்காமலும் மூடிக் கொள்ளாமலும் வைப்பார்கள். தமது கால் விரல்களின் முனைகளைக் கிப்லாவை நோக்கச் செய்வார்கள்…
அறிவிப்பவர்: அபூஹுமைத் (ரலி),
நூல்: புகாரி 828
நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தாவில் இரு குதிகால்களையும் இணைத்து விரல்களைக் கிப்லாவை முன்னோக்கி வைத்திருந்தார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்கள்: இப்னுஹுஸைமா 654, இப்னுஹிப்பான் 1933, ஹாகிம் 832
நாய் விரிப்பதைப் போல் கைகளை வைக்கக் கூடாது
தொடைகளும், வயிறும் ஒட்டாமல் அகற்றி வைக்க வேண்டும். நாய் அமருவது போல் முன்கைகளைத் தரையில் பரப்பி வைப்பதைப் போன்று வைக்கக் கூடாது.
‘ஸஜ்தாவில் நடுநிலையைக் கடைப்பிடியுங்கள்; உங்களில் எவரும் நாய் விரிப்பதைப் போல் கைகளை விரிக்கக் கூடாது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி),
நூல்கள்: புகாரி 822, முஸ்லிம் 850
ஸஜ்தாவில் ஓத வேண்டியவை
ஸஜ்தாவில் பின் வரும் துஆக்களில் அனைத்தையுமோ, அல்லது ஒன்றையோ ஓதிக் கொள்ளலாம். குர்ஆன் வசனங்களை ஓதக் கூடாது.
சுப்ஹான ரப்பியல் அஃலா (உயர்வான என் இறைவன் பரிசுத்தமானவன்) என்று மூன்று தடவை கூற வேண்டும்.
நூல்: புகாரி 817
ஸுப்ஹான(க்)கல்லாஹும்ம ரப்பனா வபிஹம்தி(க்)க அல்லாஹும்மக்ஃபிர்லி (இறைவா! நீ தூயவன்; எங்கள் இறைவா! உன்னைப் புகழ்கிறேன்; என்னை மன்னித்து விடு)
நூல்கள்: புகாரி 794, முஸ்லிம் 746
ஸுப்பூஹுன் குத்தூஸுன் வரப்புல் மலாயிக(த்)தி வர்ரூஹ் (ஜிப்ரீல் மற்றும் வானவர்களின் இறைவன் பரிசுத்தமானவன்; தூய்மையானவன்)
நூல்: முஸ்லிம் 752
ருகூவு செய்யும் போதும், ஸஜ்தாச் செய்யும் போதும் குர்ஆன் வசனங்களை ஓதுவதை விட்டும் என்னை நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.
அறிவிப்பவர்: அலீ (ரலி),
நூல்: முஸ்லிம் 740
ஸஜ்தாவில் ஓதும் துஆக்களை மூன்று முறை தான் ஓத வேண்டும் என்பதில்லை. நாம் விரும்பி அளவு கூடுதலாக எவ்வளவு முறையும் ஓதிக் கொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்கள் தமது ருகூவிலும், ஸஜ்தாவிலும் ‘ஸுப்ஹான(க்) கல்லாஹும்ம ரப்பனா வபிஹம்தி(க்)க அல்லாஹும்மக்ஃபிர்லி’ என்று அதிகமதிகம் கூறுவார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்கள்: புகாரி 817, முஸ்லிம் 746
ஸஜ்தாவில் விரும்பிய துஆக்களைக் கேட்கலாம்
ஒருவர் ஸஜ்தாவில் இருக்கும் போது, தான் விரும்பிய துஆவை தாய்மொழியிலேயே கேட்கலாம்.
‘…ஸஜ்தாவில் அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள்! உங்கள் பிரார்த்தனை ஏற்கப்பட அது மிகவும் தகுதியானதாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்: முஸ்லிம் 824
இரண்டு ஸஜ்தாக்களுக்கு இடையில்
முதல் ஸஜ்தாச் செய்த பின்னர் அல்லாஹு அக்பர் என்று கூறி எழுந்து அமர வேண்டும். அதில் பின்வரும் துஆவை ஓத வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் இரண்டு ஸஜ்தாக்களுக்கிடையே, ‘ரப்பிக்ஃபிர்லீ ரப்பிக்ஃபிர்லீ (இறைவா! என்னை மன்னித்து விடு; இறைவா! என்னை மன்னித்து விடு)‘ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி),
நூல்: நஸயீ 1059
இந்த துஆவை ஓதி முடித்த பின்னர் அல்லாஹு அக்பர் என்று கூறி மீண்டும் ஸஜ்தாச் செய்ய வேண்டும். முதல் ஸஜ்தாவில் செய்த அனைத்தையும் இரண்டாம் ஸஜ்தாவிலும் கடைப்பிடிக்க வேண்டும்.
ஸஜ்தாவிலிருந்து எழும் முறை
ஸஜ்தாவிலிருந்து எழும் போது இரு கைகளையும் மாவு குழைப்பதைப் போல் மடக்கி தரையில் ஊன்றி எழ வேண்டும் என சிலர் கூறுகின்றனர். இது தொடர்பாக ஒரு ஹதீஸ் உள்ளது. ஆனால் அது பலவீனமாதாகும்.
‘நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் எழும் போது மாவு குழைப்பவர் வைப்பதைப் போன்று கைகளைத் தரையில் வைத்து எழுவார்கள்’ என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித்ததாக ஒரு செய்தியை ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் தமது தல்கீஸுல் ஹபீர் என்ற நூலில் குறிப்பிட்டு விட்டுப் பின்வருமாறு விளக்கம் அளிக்கிறார்கள்.
‘இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானது அல்ல! அறியப்பட்டதும் அல்ல! இதை ஆதாரமாகக் கொள்வது கூடாது’ என்று இப்னுஸ் ஸலாஹ் கூறுகிறார். மேலும் இமாம் நவவீ அவர்கள், ‘இந்தச் செய்தி பலவீனமானதாகும்; அல்லது அடிப்படையே இல்லாத பொய்யான செய்தியாகும்’ என்று குறிப்பிடுகிறார்கள்.
நூல்: தல்கீஸுல் ஹபீர் பாகம்: 1, பக்கம்: 260
தரையில் கைகளை எப்படி வைப்பது என்று கூறப்படாததால் நாம் சாதாரணமாக எப்படி எழுவோமோ அதைப் போன்று இரு முன் கைகளின் உட்பகுதியைத் தரையில் ஊன்றி எழ வேண்டும்.