கடனை திரும்ப செலுத்துவோம்
கடன் வாங்கியவர் அதைத் திருப்பிக் கொடுக்கும்போது அழகிய முறையில் திருப்பிக் கொடுக்க வேண்டும். இயலுமானால் வாங்கியதை விடச் சிறந்ததை, அல்லது பெரியதைக் கொடுக்க வேண்டும். இது வட்டியில் சேராது.
மனிதர்கள் கடன் வாங்கும்போது கூனிக்குறுகி கெஞ்சிக் கூத்தாடி கடன் வாங்குகிறார்கள். ஆனால் அதன் பின்னர் கடன் கொடுத்தவன் கெஞ்சிக்கூத்தாடி வசூல் செய்யும் நிலையை ஏற்படுத்துகிறார்கள். ஒரு முஸ்லிம் இவ்வாறு நடந்து கொள்ள அனுமதி இல்லை.
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரிடம், தான் கொடுத்த (ஒட்டகத்)தைத் திருப்பித் தரும்படி கேட்டார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அந்த மனிதர் கடுமையாகப் பேசினார்.
ஆகவே, நபித்தோழர்கள் அவரைத் தண்டிக்க விரும்பினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கி, விட்டு விடுங்கள்.
ஏனெனில், ஒருவர் தனக்குக் கடன் தர வேண்டியவரிடம் கடுமையாகப் பேச உரிமையுண்டு. அவருக்காக ஓர் ஒட்டகத்தை வாங்கிக் கொடுத்து விடுங்கள் என்று கூறினார்கள்.
அவருக்குத் தர வேண்டிய ஒட்டகத்தின் வயதை விட அதிக வயதுடைய ஒட்டகம்தான் எங்களிடம் இருக்கின்றது என்று நபித்தோழர்கள் கூறினார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்,
அதையே வாங்கி அவருக்குக் கொடுத்து விடுங்கள். ஏனெனில், உங்களில் எவர் நல்ல முறையில் கடனைத் திருப்பிச் செலுத்துகின்றாரோ அவரே உங்களில் சிறந்தவர் என்று கூறினார்கள்.
நூல் : புகாரி 2305, 2306, 2390, 2392, 2393, 2606, 2609
ஜாபிர் இப்னுஅப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்
நான் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு போரில் (பங்கெடுத்துவிட்டுத் திரும்பிக் கொண்டு) இருந்தேன்; அப்போது என்னுடைய ஒட்டகம் களைத்து பலமிழந்து போனதால் என்னைப் பின்தங்க வைத்துவிட்டது. நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்து. ‘ஜாபிரா?’ என்று கேட்டார்கள். நான் ‘ஆம்!’ என்றேன். ‘என்ன விஷயம் (ஏன் பின்தங்கிவிட்டீர்)?’ என்று கேட்டார்கள். ‘என் ஒட்டகம் களைந்து பலமிழந்து போனதால் என்னைப் பின்தங்க வைத்துவிட்டது; அதனால் நான் பின்தங்கி விட்டேன்!’ என்றேன்.
நபி(ஸல்) அவர்கள் கீழே இறங்கி தலைப்பகுதி வளைந்த ஒரு கைத்தடியால் என்னுடைய ஒட்டகத்தை; தட்டி (எழுப்பி)னார்கள். பிறகு ‘ஏறுவீராக!’ என்றார்கள். நான் (வாகனத்தில்) ஏறினேன். நபி(ஸல்) அவர்களை விட என்னுடைய ஒட்டகம் முந்தாதவாறு அதைக் கட்டுப்படுத்தினேன். அப்போது நபி(ஸல்) அவர்கள். ‘நீர் மணமுடித்து விட்டீரா?’ என்று கேட்டார்கள். நான் ‘ஆம்!’ என்றேன். ‘கன்னியையா? வாழ்ந்த அனுபவமுள்ள பெண்ணைத்தான்!’ என்றேன். நபி(ஸல்) அவர்கள், ‘கன்னிப் பெண்ணை மணந்திருக்கக் கூடாதா? அவள் உம்முடனும் நீர் அவளுடனும் விளையாடலாமே!’ என்று கூறினார்கள்.
நான், ‘எனக்குச் (சிறிய வயதுடைய) சகோதரிகள் உள்ளனர்! அவர்களை அரவணைத்து, அவர்களுக்குத் தலைவாரி, அவர்களைப் பராமரிக்கக் கூடிய ஒரு பெண்ணை மணக்க வேண்டும் என்று விரும்பினேன்!’ என்றேன்.
நபி(ஸல்) அவர்கள் ‘இப்போது ஊருக்கு செல்லப் போகிறீர்! ஊர் சென்றதும் நிதானத்துடன் நடந்து கொள்வீராக!’ நிதானத்துடன் நடந்து கொள்வீராக!’ என்று கூறிவிட்டு பின்னர். ‘உம்முடைய ஒட்டகத்தை எனக்கு விற்று விடுகிறீரா?’ என்றார்கள். நான் ‘சரி (விற்று விடுகிறேன்!)’ என்றேன். அவர்கள் என்னிடமிருந்து, ஓர் ஊக்கியா எடை (தங்கத்து)க்குப் பகரமாக அதை வாங்கினார்கள். பிறகு, எனக்கு முன்பே நபி(ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு) சென்றார்கள். நான் மறுநாள் சென்றடைந்தேன்.
நாங்கள் பள்ளிவாசலுக்கு வந்தபோது அதன் நுழைவாயிலில் நபி(ஸல்) அவர்கள் நின்றிருந்தார்கள். ‘இப்போதுதான் வருகிறீரா? என்று அவர்கள் (என்னைப் பார்த்துக்) கேட்டார்கள். நான் ‘ஆம்!’ என்றேன். ‘உம்முடைய ஒட்டகத்தைவிட்டுவிட்டு உள்ளே சென்று இரண்டு ரக்அத்துகள் தொழுவீராக!’ என்றார்கள். அவ்வாறே, நான் உள்ளே சென்று தொழுதேன். நபி(ஸல்) அவர்கள் எனக்காக ஓர் ஊக்கியா (தங்கத்தை) எடை போடுமாறு பிலால்(ரலி) அவர்களுக்கு உத்தரவிட்டார்கள்.
எனக்காக பிலால்(ரலி) எடை போட்டுச் சற்று தாரளமாகவே நிறுத்தார்கள். பிறகு நான் திரும்பிச் சென்று விட்டேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘ஜாபிரை என்னிடம் அழைத்து வாரும்!’ என்றார்கள். நான் (மனத்திற்குள்) ‘இப்போது என் ஒட்டகம் திருப்பித் தரப்பட்டு விடும் அதைவிட எனக்கு வெறுப்பானது வேறொன்றுமில்லை என்று கூறிக் கொண்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், உமது ஒட்டகத்தை .எடுத்துக் கொள்வீராக! அதனுடைய விலையையும் நீரே வைத்துக் கொள்வீராக! என்று சொன்னார்கள்
நூல் : புகாரி 2097, 2309
பள்ளிவாசலில் இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் சென்றேன். எனக்கு (என்னிடம் வாங்கிய ஒட்டகத்தின் விலையைச்) செலுத்தி எனக்கு அதிகமாகவும் தந்தார்கள்.
நூல் : புகாரி 2603
கடன் வாங்கியவர் அதைத் திருப்பிச் செலுத்தும்போது சிறந்ததாகவும், அதிகமாகவும் செலுத்துவது விரும்பத்தக்கது என்பதை இதில் இருந்து அறிகிறோம்.
நம்முடைய பணம் ஒருவரிடம் இருக்கும் காலத்துக்கு ஏற்ப நிர்ணயித்த தொகையை வாங்குவதுதான் வட்டியாகும். நாம் பத்தாயிரம் ரூபாய் கடன் வாங்கிவிட்டு திருப்பிக் கொடுக்கும்போது நாமாக விரும்பி பதினோராயிரமோ பதினைந்தாயிரமோ கொடுத்தால் அது வட்டியாகாது என்பதையும் இதில் இருந்து நாம் அறிந்து கொள்கிறோம்.
திருப்பித் தரும்போது கொஞ்சம் கூடுதலாகத் தரவேண்டும் என்று என்று கடன் கொடுத்தவர் நிபந்தனை போட்டால் அது வட்டியாகி விடும்.