மது மற்றும் அது சம்பந்தப்பட்ட வசனங்கள்
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(மதுபானம் தடைசெய்யப்பட்ட அன்று மதீனாவின் வீதிகளில்) கொட்டப்பட்ட மது, (பழுக்காத) பேரீச்சங்காய் மது (ஃபளீக்) ஆகும். அபுந் நுஅமான் (ரஹ்) அவர்களிடமி ருந்து முஹம்மத் பின் சலாம் (ரஹ்) அவர்கள் அதிகப்படியாக அறிவித்ததாவது:
அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: (மதுபானம் தடைசெய்யப்பட்ட நாளன்று) நான் அபூதல்ஹா (ரலி) அவர்களின் வீட்டில் (அங்கிருந்த) மக்களுக்கு மது ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது மது விலக்கிற்கான இறைவசனம் இறங்கிற்று. உடனே நபி (ஸல்) அவர்கள் பொது அறிவிப்புச் செய்பவர் ஒருவருக்கு (மது தடைசெய்யப்பட்ட செய்தியை மக்களுக்குத் தெரிவிக்க) பொது அறிவிப்புச் செய்யும்படி உத்திரவிட்டார்கள். அவர் அவ்வாறே அறிவிப்புச் செய்தார்.
இதைக் கேட்டதும் அபூதல்ஹா (ரலி) அவர்கள், வெளியே போய் இது என்ன சப்தம் என்று பார்(த்து வா) எனச் சொன்னார்கள். உடனே நான் வெளியே சென்றேன். (பார்த்து விட்டுத் திரும்பி வந்து), இதோ பொது அறிவிப்புச் செய்பவர், (மக்களே!) எச்சரிக்கை! மதுபானம் தடைசெய்யப்பட்டு விட்டது என்று அறிவிக்கிறார் என்று சொன்னேன்.
அதற்கு அபூ தல்ஹா (ரலி) அவர்கள் என்னிடம், நீ போய், இதைக் கொட்டிவிடு! என்று சொன்னார்கள். (மக்கள் மதுவைத் தரையில் கொட்ட) அது மதீனாவின் தெருக்களில் ஓடியது. அந்த நாளில் அவர்களது மதுபானம் (பழுக்காத) பேரீச்சங்காய் மதுவாக இருந்தது.
அப்போது மக்களில் சிலர், (உஹுதுப் போரில்) ஒரு கூட்டத்தார் தம் வயிறுகளில் மது இருக்கக் கொல்லப்பட்டார்களே! என்று கூறினர். அப்போது தான் இறை நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகின்றவர்கள் (விலக்கப்பட்ட பொருட்களில்) எதையேனும் (தடைசெய்யப்படுவதற்கு முன்னர்) உட் கொண்டிருந்தால் அவர்கள் மீது (அது) குற்றமாகாது எனும் (5:93ஆவது) இறைவசனத்தை அல்லாஹ் அருளினான்.
(புகாரி 4620)