யமன் வெற்றி கொள்ளப்படும் என்ற முன்னறிவிப்பு
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் பிரச்சாரம் செய்த ஆரம்ப காலத்தில் மகிப் பெரும் துன்பங்களை எதிர் கொண்டனர். நபிகள் நாயகத்தை நம்பி ஏற்றுக் கொண்ட மக்கள் கடுமையான சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.
சித்திரவதை தாங்காமல் நபிகள் நாயகத்தின் தோழர்கள் முறையீடு செய்தனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கீழ்க்கண்ட முன்னறிவிப்பை வெளியிட்டார்கள்.
‘அல்லாஹ்வின் மேல் ஆணையாக இந்த மார்க்கத்தை அல்லாஹ் முழுமைப்படுத்துவான். யமனில் உள்ள ஒருவர் ‘ஹள்ரமவ்த்’என்றும் ஊரிலிருந்து ஸன்ஆ’ எனும் ஊர் வரை அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாமல் பயணம் செய்வார். தனது ஆடுகள் விஷயத்தில் ஓநாய்கள் பற்றி அஞ்சுவதைத் தவிர (கொலை கொள்ளை போன்ற) அச்சம் எதுவும் அவருக்கு இருக்காது’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : புகாரி 3612
உயிர் வாழ்வதே கேள்விக் குறியாக இருந்த நெருக்கடியான காலகட்டத்தில் வெற்றிக்கான எந்த அறிகுறியும் தென்படாத காலத்தில் யமன் நாடு முஸ்லிம்களால் வெற்றி கொள்ளப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரகடனம் செய்தார்கள். அவர்கள் பிரகடனம் செய்தது போலவே உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் யமன் நாடு முஸ்லிம்களின் கீழ் வந்தது. இஸ்லாத்தின் கடுமையான குற்றவியல் சட்டம் காரணமாக ஹள்ரமவ்த்திலிருந்து ஸன்ஆ வரை அச்சமின்றி பயணம் மேற்கொள்ளும் பொற்காலமும் வந்தது.