பைத்துல் முகத்தஸ் வெற்றி கொள்ளப்படுதல் என்ற முன்னறிவிப்பு
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் ரோமப் பேரரசின் கீழ் தான் பைத்துல் முகத்தஸ் என்ற புனிதத் தலம் இருந்தது. முஸ்லிம்களின் மூன்று புனிதப் பள்ளிவாசல்களில் ஒன்றான இப்பள்ளியிலிருந்து தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விண்ணுலகப் பயணத்துக்கு இறைவனால் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதைப் பற்றியும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தார்கள்.
‘உலகம் அழிவதற்கு முன் ஆறு நிகழ்வுகள் நிகழும். அவற்றை எண்ணிக் கொள்’ என்று கூறிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முதலாவதாக தமது மரணத்தைக் குறிப்பிட்டார்கள். இரண்டாவது பைத்துல் முகத்தஸ் வெற்றி கொள்ளப்படும் என்பதைக் குறிப்பிட்டார்கள்.
நூல் : புகாரி 3176
ஜெருசலம் நகரமும், அதில் உள்ள பைத்துல் முகத்தஸ் பள்ளிவாசலும் முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி கிறித்தவர்களுக்கும் யூதர்களுக்கும் புனிதத் தலங்களாக இருந்தன. ரோமப் பேரரசின் கீழ் இருந்த நாடுகளில் ஜெருசலம் முக்கியத்துவம் வாய்ந்ததாகத் திகழ்ந்தது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தது போலவே பைத்துல் முகத்தஸ் முஸ்லிம்கள் கைவசம் வந்தது.
முஸ்லிம்களில் எழுச்சியைக் கண்டு திகைத்த கிறித்தவ பாதிரிமார்கள் எவ்வித எதிர்ப்புமின்றி உமர் (ரலி) அவர்களிடம் ஜெரூசலத்தை ஒப்படைத்தார்கள்.