உமர் (ரலி) மற்றும் உஸ்மான் (ரலி) அவர்களின் வீர மரணம் பற்றி முன்னறிவிப்பு
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த பின் ஆட்சிப் பொறுப்பேற்ற அபூபக்ர் (ரலி) அவர்கள் இயற்கை மரணம் அடைந்தார்கள்.
அவர்களுக்குப் பின் ஆட்சிப் பொறுப்பேற்ற உமர் (ரலி) அவர்கள் யூதன் ஒருவனால் கொல்லப்பட்டார்கள்.
அவர்களுக்குப் பின் ஆட்சிப் பொறுப்பேற்ற உஸ்மான் (ரலி) அவர்கள் கலகக்காரர்களால் படுகொலை செய்யப்பட்டார்கள்.
‘உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகிய இருவரும் இயற்கை மரணத்தைத் தழுவ மாட்டார்கள். கொல்லப்பட்டு வீர மரணம் தான் அடைவார்கள்’ என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்திருந்தார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோரும் ஒரு முறை உஹத் மலை மீது ஏறினார்கள். அப்போது உஹத் மலை நடுங்கியது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘உஹத் மலையே அசையாமல் நில். உன் மீது ஓர் இறைத் தூதரும், ஒரு (சித்தீக்) உண்மையாளரும், வீர மரணம் அடையும் இருவரும் உள்ளனர்’ என்று குறிப்பிட்டார்கள்.
நூல்:புகாரி 3675
உமர் (ரலி) அவர்களும், உஸ்மான் (ரலி) அவர்களும் இயற்கையாக மரணத்தைத் தழுவ மாட்டார்கள்.
எதிரிகளால் கொல்லப்பட்டே மரணிப்பார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தவாறு இருவரும் எதிரிகளால் கொல்லப்பட்டனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் தாம் என்பதை நிரூபிக்கும் சான்றாக இந்த முன்னறிவிப்பும் அமைந்துள்ளது.