அம்மார்– عَمَّار ٱبْن يَاسِر (ரலி) அவர்களின் மரணம் பற்றிய முன்னறிவிப்பு
ஆரம்ப கால முஸ்லிம்களில் யாஸிர், சுமய்யா தம்பதிகள் முக்கியமானவர்கள். சுமய்யா (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதற்காக அவர்களது எஜமானனால் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இஸ்லாத்திற்காக முதன் முதலில் உயிர் நீத்தவர் என்ற பெருமையைப் பெற்றார்கள்.
இவர்களின் புதல்வரான அம்மார் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நெருக்கமான தோழராக இருந்தார்கள். மக்காவிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்த அம்மார் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அன்புக்குப் பாத்திரமானவராகத் திகழ்ந்தார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா வந்தவுடன் மதீனாவில் பள்ளிவாசல் ஒன்றை எழுப்பினார்கள். கூலி ஆட்கள் இன்றி தன்னார்வத் தொண்டர்களான நபித்தோழர்களே அப்பள்ளி வாசலைக் கட்டினார்கள். ஒவ்வொரு நபித்தோழரும் ஒவ்வொரு கல்லாகச் சுமந்து வந்தனர். அம்மார் (ரலி) அவர்கள் இரண்டிரண்டு கற்களாகச் சுமந்து வந்தார்.
இதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரது தலையில் படிந்த புழுதியைத் துடைத்து விட்டனர். ‘பாவம் அம்மார் இவரை வரம்பு மீறிய கூட்டத்தினர் கொலை செய்வார்கள்’ என்று முன்னறிவிப்புச் செய்தார்கள்.
நூல் : புகாரி 2812, 447
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த பின் அபூபக்கர் (ரலி), அவர்களுக்குப் பின் உமர் (ரலி), அவர்களுக்குப் பின் உஸ்மான் (ரலி) ஆட்சி புரிந்தனர். உஸ்மான் (ரலி) கொல்லப்பட்ட பின் அலீ (ரலி) ஆட்சிப் பொறுப்பேற்றனர்.
இவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற போது சிரியாவின் ஆளுநராக இருந்த முஆவியா (ரலி) அவர்கள் அலீ (ரலி) அவர்களின் கட்டுப்பாட்டில் வராமல் சிரியாவைத் தனி நாடாக அறிவித்துக் கொண்டார்கள். இதன் காரணமாக அலீ (ரலி) அவர்களுக்கும், முஆவியா (ரலி) அவர்களுக்கும் இடையே பல்வேறு சண்டைகள் நிகழ்ந்தன. சிஃப்பீன் என்ற இடத்தில் இரு தரப்புப் படைகளும் மோதிக் கொண்ட யுத்தம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.
கி.பி.657ஆம் ஆண்டு நடந்த இப்போரில் அம்மார் (ரலி) அவர்கள் அலீ (ரலி) அவர்களின் படையில் அங்கம் வகித்தனர். இப்போரில் அவர்கள் கொல்லப்பட்டனர்.
அலீ(ரலி) அவர்கள் அதிபராக இருக்கும் போது அவர்களுக்குக் கட்டுப்படாமல் முஆவியா (ரலி) அவர்கள் வரம்பு மீறினார்கள்.
வரம்பு மீறிய கூட்டம் அம்மாரைக் கொல்லும் என்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்த முன்னறிவிப்பு நிறைவேறியது. அவர்கள் இறைவனின் தூதர் என்பது நிரூபணமானது.