ரமலான் உன் வாழ்வை மாற்றிவிட்டதா….??

https://eagathuvam.com/%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf/

அல்லாஹ்வின் அருளால் இறைவன் நமக்கு வழங்கிய இரு பெருநாட்களில் ஒரு பெருநாளான நோன்பு பெருநாளை நிறைவேற்றுவதற்காக நாமெல்லாம் ஒன்று கூடி இருக்கின்றோம்..

இந்த பெருநாள் என்பது அல்லாஹ்வை பெருமைப்படுத்தவும், ஏழைகளுக்கு உதவுவதுமே.அதை தான் ரமலான் நமக்கு கற்று தந்தது.

ரமலானில் பெற்ற பயிற்சி என்பது இன்றோடு முடிந்துவிடக்கூடாது.மற்ற காலங்களில் நம்மிடத்தில் பிரதிபலிக்க வேண்டும்.அதில் ஒன்று தான் பிறர் நலம் நாடுவது..

இன்று கொரோனாவைரஸினால் ஊடரங்கு உத்தரவு பிறப்பித்து இயல்பு வாழ்க்கையை தொடர முடியாமல் அன்றாட நாள்களை கழிக்க முடியாமல் பசி பட்டினி மற்றும் பொருளாதர கஷ்டத்தில் பலர் சிரமப்படுகின்றார்கள்,

இந்த நேரத்தில் அந்த மக்களுக்காக ஒவ்வொருவரும் உதவ வேண்டும்…

நபிகள் நாயகம் ஸல் அவர்களின் தர்ம சிந்தனை :

நபி (ஸல்) அவர்கள் மனிதர்களில் மிகப் பெரும் #கொடையாளியாகத் திகழ்ந்தார்கள். (சாதாரண நாட்களை விட) ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களை ரமளான் மாதத்தில் சந்திக்கும் போது நபி (ஸல்) மிக அதிகமாக வாரி வழங்கும் கொடையாளியாகத் திகழ்ந்தார்கள்.

ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமளான் மாதத்தின் ஒவ்வொரு இரவிலும் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து (அதுவரை) அருளப்பட்டிருந்த) குர்ஆனை நினைவுபடுத்துவார்கள். இருவருமாகத் திருக்குர்ஆனை ஓதும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள்.

தொடர்ந்துவீசும்காற்றை விட (வேகமாக) நபி (ஸல்) அவர்கள் நல்ல காரியங்களில் மிக அதிகமாக வாரி வழங்கும் கொடையாளியாகவே திகழ்ந்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னுஅப்பாஸ் (ரலி),

நூல்: புகாரி (6)

இஸ்லாத்தின் பெயரால் எங்களுக்கு உதவுங்கள்’ என்று இஸ்லாத்தின் பெயரைச் சொல் யார் கேட்டாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவருக்குக் கொடுக்காமல் இருக்க மாட்டார்கள்.

ஒரு மனிதர், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து இஸ்லாத்தின் பெயரால் உதவி கேட்டார். இரு மலைகளுக்கிடையே அடங்கும் அளவுக்கு அவருக்கு ஆடுகளை வழங்கினார்கள். அவர் தனது சமுதாயத்திடம் சென்று

என் சமுதாயமே! நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்! ஏனெனில் நிதி நெருக்கடியைப் பற்றி அஞ்சாமல் முஹம்மத் வாரி வழங்குகிறார்’ எனக் கூறினார்.

நூல் : முஸ்லிம் 462

நபித்தோழர்களின் தர்ம சிந்தனை:

( ஒரு நாள்) நாங்கள் முற்பகல் நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்தோம்.

அப்போது செருப்பணியாத, (அரை) நிர்வாணிகளான, வட்டமாய் கிழிந்த “கம்பளி ஆடை” அல்லது “நீளங்கி” அணிந்த ஒரு கூட்டத்தார் தம் (கழுத்துகளில்) வாட்களைத் தொங்கவிட்டவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள்.

அவர்களில் பெரும்பாலானோர் “முளர்”குலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். இல்லை; அவர்களில் அனைவருமே
“முளர்” குலத்தைச் சேர்ந்தவர்கள்தாம்.

அவர்களது ஏழ்மை நிலையைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் நிறமாறிவிட்டது.

உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒருவிதத் தவிப்பு நிலையுடன்) வீட்டுக்குள் சென்றுவிட்டு வெளியே வந்து, பிலால் (ரலி) அவர்களிடம் உத்தரவிட, பிலால் (ரலி) அவர்கள் #தொழுகை அறிவிப்புச் செய்து இகாமத்தும் கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதுவிட்டு, மக்களுக்கு #உரை நிகழ்த்தினார்கள்.

அப்போது ” மக்களே! உங்களை ஒரே ஆன்மாவிலிருந்து படைத்த உங்கள் இறைவனை பயந்துகொள்ளுங்கள்” எனும் (4:1ஆவது) இறைவசனத்தை முழுமையாக ஓதிக்காட்டினார்கள். மேலும், “அல்ஹஷ்ர்” அத்தியாயத்திலுள்ள

” நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். ஒவ்வொரு ஆன்மாவும் நாளைக்கென்று எதனை அனுப்பியுள்ளது என்பதை கவனத்திற்கொள்ளட்டும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்” எனும் (59:18ஆவது) வசனத்தையும் ஓதிக்காட்டி (முளர் கூட்டத்தாருக்கு தர்மம் செய்யுமாறு கூறி)னார்கள்.

அப்போது “(உங்களில்) ஒருவர் தமது பொற்காசு, வெள்ளிக்காசு, துணி, ஒரு “ஸாஉ” கோதுமை, ஒரு “ஸாஉ” பேரீச்சம் பழம் ஆகியவற்றைத் தர்மம் செய்யட்டும்” என்று கூறி, ” #பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டையேனும் தர்மம் செய்யட்டும்” என்று வலியுறுத்தினார்கள்.

உடனே (நபித்தோழர்களில்) ஒவ்வொருவரும் தம்மிடமிருந்த பொற்காசுகளிலிருந்தும் வெள்ளிக்காசுகளிலிருந்தும் ஆடைகளிலிருந்தும் ஒரு “ஸாஉ” கோதுமையிலிருந்தும் ஒரு “ஸாஉ” பேரீச்சம் பழத்திலிருந்தும் தர்மம் செய்தார்கள்.

அப்போது அன்சாரிகளில் ஒருவர் ஒரு பை (நிறைய பொருட்களைக்) கொண்டுவந்தார். அதைத் தூக்க முடியாமல் அவரது கை திணறியது;ஏன் தூக்கவே முடியவில்லை. பின்னர் தொடர்ந்து மக்கள் (தங்களின் தர்மப் பொருட்களுடன்) வந்துகொண்டிருந்தனர். இறுதியில் உணவுப் பொருட்களாலும் ஆடைகளாலும் இரு குவியல்கள் சேர்ந்துவிட்டதை நான் கண்டேன்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது #முகம் பொன்னைப் போன்று மின்னிக் கொண்டிருப்பதையும் நான் கண்டேன்.

(முஸ்லிம்)

பேரீச்சம்பழத்தின்சிறு துண்டையேனும் தர்மம் செய்து நரகத்திலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்

முஹம்மது நபி ஸல் அவர்கள்

நூல் : புகாரி 6539

அபூஹீரைரா (ரலி) அறிவித்தார்கள்

ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து இறைத்தூதர் அவர்களே அதிக நன்மையுள்ள #தர்மம் எது ?எனக் கேட்டார்.
நீர் ஆரேகக்கியமுள்ளராகவும், பொருள் தேவை
உடையராகவும் செல்வத்தில் ஆசை உள்ளவராகவும்
இருக்கும் நிலையில் தர்மம் செய்வதே அதிக
நன்மையுள்ளதாகும்.

எனவே தர்மம் செய்வதை
உயிர் தொண்டைக் குழியை நெருங்கும் வரை
தாமதப்படுத்த வேண்டாம்.

அந்நிலையில்
இன்னாருக்கு இவ்வளவு இன்னாருக்கு இவ்வளவு
என்று கூறுவதிலும் அர்த்தமில்லை,

ஏனெனில்அப்போது உம்முடைய பொருள்கள் மற்றவர்களுக்கென்று
ஆகிவிட்டிருக்குமே
என்று இறைத்தூதர(ஸல்)
அவர்கள் கூளினார்கள்.

 (ஸஹீஹ் புகாரி 1419)

அல்லாஹ்_பரிசுத்தமானதைத் தவிர வேறெதையும் ஏற்றுக் கொள்வதில்லை.

யார் முறையான சம்பாத்தியத்தில் ஒருபேரீச்சம்பழத்தின் மதிப்புக்குத் தர்மம் செய்தாரோ அதை நிச்சயமாக அல்லாஹ் தனது வலக்கரத்தால்ஏற்றுக் கொண்டு பிறகு நீங்கள் உங்களின் குதிரைக் குட்டியை வளர்ப்பது போன்று அதன் நன்மையைமலை போல் உயரும் அளவுக்கு வளர்த்து விடுவான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி : அபூஹுரைரா (ரலி),

நூல் : புகாரி 1410

தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு #தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது.

ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன்மடங்காகக் கொடுக்கிறான்.

அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.

திருக்குர்ஆன் 2:261

எனவே நாம் இந்த ஈகைத் திருநாளில் ஏழைகளின் துயர் துடைக்க பாடுபடுவோம்..

ஏழைகளுக்கு நம்மால் இயன்ற உதவிகளைச் செய்வோம் மறுமையின் கொடிய நரக வேதனையே விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவோம்.

இந்தக் கொரோனா எனும் கொடிய நோய் நீங்குவதற்காகவும் மக்கள் நிம்மதியான வாழ்வைப் பெறுவதற்காகவும் இந்த நன்னாளில் அல்லாஹ்விடம் இறைஞ்சுவோம்.

நாம் செய்த பாவங்களுக்கு பாவமன்னிப்புக் கோருவோம் நாம் இந்த இரமலானில் எந்த இறையச்சத்தை அடைவதற்காக நோன்பு நோற்றோமோ அந்த இறையச்சத்தைப் பெற்று உண்மையாக இறைவனே அஞ்சி வாழக்கூடிய மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள்புரிவானாக என்று கூறி எனது உரையே நிறைவு செய்கிறேன்.

வஆஹிருத் தஃவானா அனில் ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்..