கணவனை இழந்த பெண்களின் மறுமணம்
இவ்வசனத்தில் (2:240) “கணவனை இழந்த பெண்கள், ஒரு வருட காலம் கணவன் வீட்டில் இருக்கலாம்; கணவன் வீட்டார் அவளை வெளியேற்றக் கூடாது. கணவனும் இதை வலியுறுத்தி உயிருடன் இருக்கும் போதே மரண சாசனம் செய்ய வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.
கணவனை இழந்த பெண், கணவன் வீட்டினரால் உடனே வெளியேற்றப்படும் கொடுமைக்கு எதிராக இந்தச் சலுகையை இஸ்லாம் முதலில் வழங்கியது.
பின்னர் அது மாற்றப்பட்டு, 4:12 வசனத்தின் மூலம் ‘இறந்து விட்ட கணவனுக்குக் குழந்தை இல்லாவிட்டால் அவனது சொத்தில் 25 சதவிகிதமும், அவனுக்குக் குழந்தை இருந்தால் பன்னிரண்டரை சதவிகிதமும் மனைவிக்குச் சேர வேண்டும்’ என்ற சட்டம் அருளப்பட்டு, கணவன் வீட்டாரின் தயவில் இல்லாமல் அவளுக்குக் கிடைக்க வேண்டிய சொத்தைப் பெற்று வாழ்கின்ற உரிமையை இஸ்லாம் வழங்கியது.
பெண்களுக்கு ஆன்மா இருக்கிறதா என்று சர்ச்சை செய்யப்பட்ட காலத்தில், கணவனின் சொத்தில் மனைவிக்குப் பங்குண்டு என்று கூறிப் பெண் உரிமையை இஸ்லாம் நிலைநாட்டியது.