கடல்களுக்கு இடையே திரை
இவ்வசனங்களில் (27:61, 35:12, 55:19,20) இரண்டு கடல்களுக்கு இடையே கண்களுக்குத் தெரியாத தடுப்பு உள்ளது என்றும், இதனால் அவை ஒன்றுடன் ஒன்று இரண்டறக் கலந்து விடாது என்றும் கூறப்படுகின்றது.
இரண்டு கடல்களுக்கு இடையே தடுப்பு உள்ளதை இன்றைய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பல விதமான ஆய்வுகளுக்குப் பின் அவர்கள் கண்டுபிடித்த இந்த உண்மையை திருக்குர்ஆன் அன்றே சொல்லி இருக்கிறது.
மத்தியத் தரைக்கடலும், கருங்கடலும் நிலப்பரப்பால் பிரிக்கப்பட்டிருந்தன. 12,000 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட ஒரு பிரளயத்தின்போது இரண்டும் இணைந்தன. இரண்டு கடல்களும் சந்திக்கும் இடத்தில் இரண்டும் சமமான அடர்த்தியில் இல்லாததால் அடர்த்தி மிகுந்த கடலின் நீர் கீழேயும், அடர்த்தி குறைந்த கடலின் நீர் மேலேயும் சென்று 200 அடி அளவுக்கு ஒன்றின் மேல் ஒன்றாக நிற்கிறது. 12,000 ஆண்டுகள் ஆன பின்பும் அவை ஒன்றாகக் கலந்து விடவில்லை.
அட்லாண்டிக் கடலும், இந்தியப் பெருங்கடலும் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொண்டிருந்தாலும் திடத்திலும், நிறத்திலும் வேறுபட்டு நிற்கின்றன. ஒன்றுடன் ஒன்று கலந்துவிடவில்லை.
அதுபோல் மத்திய தரைக்கடலும், அட்லாண்டிக் கடலும் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொண்டு உள்ளன. மத்திய தரைக்கடல் அடர்த்தியுடன் வெதுவெதுப்பாக உள்ளதால் அட்லாண்டிக் கடலுடன் சேருமிடத்தில் அதன் மீது ஆயிரம் அடிகளுக்கு மேல் அழுத்திக் கொண்டு சுமார் 100 மைல்கள் வரை ஒன்றுக்கு மேல் ஒன்றாகப் பரவி நிற்கின்றது. ஒன்றுடன் ஒன்று கலந்துவிடவில்லை.
திருக்குர்ஆன் 25:53 வசனத்தில், நல்ல தண்ணீர் கடலுடன் கலப்பதைப் பற்றிக் குறிப்பிடும்போது, “இரண்டுக்குமிடையே ஒரு திரையையும் வலுவான தடுப்பையும்” ஏற்படுத்தியுள்ளதாகக் கூறுகின்றது.
இரண்டு கடல்கள் சந்திக்கும்போது ஒரு திரை இருப்பதாகக் கூறிய குர்ஆன், கடலுடன் நல்ல தண்ணீர் கலக்கும்போது இரண்டு தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறுகிறது.
இதிலும் மிகப் பெரிய அறிவியல் உண்மை அடங்கியுள்ளது.
கடலுடன் நல்ல தண்ணீரைக் கொண்ட ஆறு சேரும்போது அடர்த்தி வித்தியாசத்தின் காரணமாக மேலே நாம் காட்டியுள்ள ஒரு தடையுடன், உப்புத் தண்ணீரும் நல்ல தண்ணீரும் சிறிதளவு சேர்ந்த கலவை ஒன்று உருவாகி அது மற்றொரு தடையாக நிற்கின்றது.
இது எழுதப் படிக்கத் தெரியாத நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு 14 நூற்றாண்டுகளுக்கு முன் எப்படித் தெரியும்?
எனவே திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தை தான் என்பதற்கு இதுவும் சான்றாக இருக்கிறது.