இவ்வசனத்தில் (12:55) என்னை இப்பூமியின் கருவூலங்களுக்கு அதிகாரியாக நியமியுங்கள் என்று யூஸுஃப் நபி கேட்டதாகக் கூறப்படுகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “அதிகாரத்தைக் கேட்காதே! நீ கேட்டு அது உனக்கு வழங்கப்பட்டால் அது உன் பொறுப்பிலேயே விடப்படும். கேட்காமல் உனக்குக் கொடுக்கப்பட்டால் நீ (இறைவனால்) உதவி செய்யப்படுவாய்” என்று கூறியுள்ளார்கள். (நூல்: புகாரி 6622)
மேற்கண்ட வசனத்திற்கு முரண்படும் வகையில் இந்த நபிமொழியைப் புரிந்து கொள்ளக் கூடாது.
யூஸுஃப் நபியின் வரலாற்றைப் பற்றிக் கூறும்போது, அதில் கேள்வி கேட்போருக்குத் தக்க சான்றுகள் உள்ளன என்று 12:7 வசனம் கூறுகிறது.
கருவூல அதிகாரியாக நியமியுங்கள் என்று யூஸுஃப் நபி கேட்ட இந்தச் சம்பவத்திலும் நமக்கு முன்மாதிரி இருக்கின்றது.
பதவி ஆசைக்காகவோ, தகுதியற்ற நிலையிலோ பதவியைக் கேட்கக் கூடாது என்பது தான் மேலே நாம் காட்டியுள்ள நபிமொழியின் கருத்தாக இருக்க முடியும்.
ஒரு பணியை மற்றவர்களை விட நம்மால் சிறப்பாகச் செய்ய முடியும்; அதற்கான தகுதி நமக்கு உள்ளது என்று ஒருவர் கருதினாலோ, அல்லது தகுதியற்றவர்களிடம் ஒரு பணி ஒப்படைக்கப்பட்டு அது பாழ்படுத்தப்படுவதைக் கண்டாலோ அப்பதவியை அவர் கேட்டுப் பெறுவதில் தவறில்லை என்பதற்கு இவ்வசனம் சான்றாகும்.
மேலும் அந்த ஆட்சி, யூஸுஃப் நபியின் மீது பழி சுமத்திச் சிறையில் தள்ளிய ஆட்சியாக இருந்தும், அத்தகைய ஆட்சியில் தமது உரிமையை யூஸுஃப் நபி கேட்டிருக்கிறார்கள்; பதவியும் கேட்டிருக்கிறார்கள்.
இஸ்லாமிய ஆட்சி நடக்காத பகுதிகளில் இது போன்ற பதவிகளையும், உரிமைகளையும் முஸ்லிமல்லாத ஆட்சியாளர்களிடம் கேட்டுப் பெறலாம் என்பதற்கு இது சான்றாக அமைந்துள்ளது.