இவ்வசனத்தில் (7:205) அல்லாஹ்வை எப்படி தியானம் செய்ய வேண்டும் என்று சொல்லப்படுகிறது.
இறைவனின் பெயரை நினைவு கூர்வது இஸ்லாத்தில் ஒரு வணக்கமாக உள்ளது. தொழுகை நோன்பு உள்ளிட்ட எந்த வணக்கத்தை நாம் செய்வதாக இருந்தாலும் நமது விருப்பப்படி அவற்றைச் செய்ய முடியாது. அவ்வணக்கத்தின் ஒவ்வொரு விதிமுறைகளும் அல்லாஹ்வும், அவனது தூதரும் கற்றுத் தந்தபடி அமைய வேண்டும்.
கிப்லாவை நோக்கித் தொழுவதற்குப் பதிலாக வேறு திசை நோக்கித் தொழுதால் அது தொழுகையாகாது. இறைவனின் மார்க்கத்தைக் கேலிக்குரியதாக ஆக்கிய குற்றம் தான் இதனால் ஏற்படும்.
அதுபோல் தான் இறைவனின் திருப்பெயர்களையும், இறைவனின் புகழ்பாட நபிகள் நாயகம் (ஸல்) கற்றுத் தந்த சொற்களையும் தியானம் செய்ய விரும்பினால் அல்லாஹ்வும், அவனது தூதரும் கற்றுத் தந்த அடிப்படையில் தான் செய்ய வேண்டும்.
இறைவனை எவ்வாறு நினைவு கூர வேண்டும் என்ற ஒழுங்கு இங்கே கூறப்படுகிறது. முதலில் பணிவுடனும், அச்சத்துடனும் இறைவனை நினைவு கூர வேண்டும். இரண்டாவதாக, நாவால் மட்டும் இறைவனின் பெயரைக் கூறாமல் உள்ளத்திலும் நினைவு கூர வேண்டும். மூன்றாவதாக, உரத்த சப்தமின்றி நினைவு கூர வேண்டும்.
இன்றைக்குத் தமிழக முஸ்லிம்களில் பலர் ‘ராத்திபு’ என்ற பெயரிலும், ‘ஹல்கா’ என்ற பெயரிலும் பெரும் கூச்சலுடனும், ஆட்டம் பாட்டத்துடனும் அல்லாஹ்வை நினைவு கூர்வதாக நினைத்துக் கொண்டு பாவத்தைச் சுமந்து வருகின்றனர்.
அவர்கள் நன்மை என்ற பெயரில் பாவங்களைச் சுமக்கிறார்கள் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.