குழந்தைகள் ஏன் ஃபித்ரா கொடுக்க வேண்டும்

குழந்தைகள் ஏன் ஃபித்ரா கொடுக்க வேண்டும்❓ 

ரமலானில் ஃபித்ரா வழங்குவதால் நோன்பாளியின் பாவங்கள் மன்னிக்கப் படுகின்றது. மேலும் அதன் பயனாக வசதியற்ற நமது சகோதரர்கள் பெருநாளை மகிழ்ச்சியாகக் கொண்டாடவும் இறைவன் வழியமைத்துள்ளான். அதே சமயம், நோன்பு கடமையாகாத, எவ்வித பாவமும் செய்திராத குழந்தைகளுக்கும் இந்த ஃபித்ரு ஸதகா கடமையாக்கப் பட்டிருப்பதன் நோக்கம் என்ன?

நோன்பு நோற்றவர் வீணான காரியங்களில் ஈடுபட்டதற்குப் பரிகாரமாகவும் ஏழைகளுக்கு உணவாகவும் இருக்கும் பொருட்டு நோன்புப் பெருநாள் தர்மத்தை நபி (ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். யார் (பெருநாள்) தொழுகைக்கு முன்பு அதை நிறைவேற்றுகிறாரோ அது ஏற்கப்பட்ட கடமையான ஸகாத்தாக அமையும். யார் பெருநாள் தொழுகைக்குப் பின் வழங்குகிறாரோ அது சாதாரண தர்மங்களில் ஒரு தர்மம் போல் அமையும் என்றும் நபி(ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்: அபூதாவூத் 1371

இந்த ஹதீஸில் ஸதகத்துல் ஃபித்ர் கடமையாக்கப் பட்டதன் நோக்கத்தைக் குறிப்பிடும் போது, நோன்பின் தவறுகளுக்குப் பரிகாரம், ஏழைகளுக்கு உணவு என்று இரண்டு காரணங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே தெளிவான காரணத்தைக் கூறி விட்ட பிறகு நாம் வேறு காரணங்களை ஆராய வேண்டிய அவசியம் இல்லை.

சிறுவர்களுக்கு நோன்பு கடமையில்லை என்றாலும் ஏழைகளின் உணவுத் தேவையை நிறைவேற்றும் பொருட்டு, அவர்கள் மீதும் ஸதகத்துல் ஃபித்ரை கடமையாக்கி, அதை அந்தச் சிறுவர்களின் பொறுப்பாளர்களை நிறைவேற்றுமாறு மார்க்கம் கட்டளையிடுகின்றது.

பெரியவர்கள் ஸதகத்துல் ஃபித்ர் வழங்கும் போது நோன்பின் தவறுகளுக்குப் பரிகாரம், ஏழைகளுக்கு உணவு என்று இரண்டு நன்மைகளைப் பெற்றுக் கொள்வார்கள். சிறுவர்களுக்காக ஸதகத்துல் ஃபித்ர் வழங்கும் போது ஏழைகளுக்கு உணவு வழங்கும் நன்மையை மட்டும் பெற்றுக் கொள்வார்கள்.


ஏகத்துவம்