தொழுகையில் வரிசை எவ்வாறு இருக்க வேண்டும்??
தொழுகையில் வரிசையில் நிற்பதற்கான ஒழுங்குகளில் பின்னுள்ளவைகளை பேணுதல் அவசியமாகும்.
- முன் வரிசையின் சிறப்புகள்
- வரிசையில் நேராக நிற்க வேண்டும்
- வரிசையில் நெருக்கமாக நிற்க வேண்டும்
- முதல் வரிசையை முழுமைபடுத்திய பின்புதான் அடுத்த வரிசையை ஆரம்பிக்க வேண்டும்.
- இமாமின் வலது புறத்திலிருந்து வரிசையை ஆரம்பிக்க வேண்டும்
- பெண்கள் நிற்கும் வரிசை
- தொழுகையில் முன் வரிசையின் சிறப்பு
மக்கள் பாங்கிலும், முன் ஸஃப்பிலும் உள்ள சிறப்புகளை அறிந்து, பிறகு அவ்விரண்டும் குலுக்கல் மூலம் தான் பெறமுடியுமென்றிருந்தால் (அவர்கள் அதற்கும் தயாராகி) குலுக்கல் மூலம் அவைகளைப் பெற்றுக் கொள்வர் என நபி (ஸல்) கூறினார்கள்: (புகாரி, முஸ்லிம்)
ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். மலக்குகள் தங்கள் இரட்சகனின் சமுகத்தில் அணிவகுப்பது போல், தொழுகையில் நீங்கள் அணிவகுக்கக் கூடாதா? எனக் கூறினார்கள். அப்பொழுது நாங்கள் யாரஸுலுல்லாஹ் மலக்குகள் தங்கள் இரட்சகனின் சமுகத்தில் எவ்வாறு அணிவகுக்குகிறார்கள்? எனக் கேட்டோம். அதற்கவர்கள், அவர்கள் முந்திய ஸஃப்புகளை முழுமைப் படுத்துகிறார்கள், ஸஃப்பில் நெருக்கமாக இருக்கிறார்கள் எனக் கூறினார்கள். (முஸ்லிம்)
விளக்கம்: இவ்விரண்டு ஹதீதின் மூலம் முன் வரிசையில் கிடைக்கும் நன்மைகளை தெரிந்து கொள்ள முடியும். ஆகவே முடிந்த அளவு முன்வரிசையில் தொழ அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
- வரிசையில் நேராக நிற்க வேண்டும்
நபி(ஸல்) அவர்கள் தொழுகையின் பொழுது (தொழுகைக்காக ஸஃப் நிற்கும் போது) எங்களின் தோள்பட்டைகளில் தடவி விடுவார்கள். பிறகு கூறுவார்கள், நீங்கள் ஸஃப்பில் சீராகவும் நேராகவும் நில்லுங்கள். ஒருவருக்கொருவர் (முன்பின்) முரண்பாடாக நிற்க வேண்டாம். அவ்வாறு நீங்கள் நின்றால் உங்கள் உள்ளங்களும் வேறுபட்டுப் போகும். (ஸஃப்பில்) என்னையடுத்து அறிவிற் சிறந்தோர் நிற்கட்டும். பின்னர், அவர்களுக்கு அடுத்தவர்கள் நிற்கட்டும், பின்னர் அவர்களுக்கு அடுத்தவர்கள் நிற்கட்டும். (முஸ்லிம்)
உங்கள் ஸஃப்பை சீர்படுத்திக் கொள்ளுங்கள், நிச்சயமாக ஸஃப்பை சீர்ப்படுத்திக் கொள்வது தொழுகையை முழுமைப்படுத்தக்கூடிய விஷயங்களில் ஒன்றாகும் என நபி (ஸல்) கூறினார்கள்: (புகாரி, முஸ்லிம்)
புகாரியின் அறிவிப்பில்: ஸஃப்பை சீர் செய்வது தொழுகையை நிலைநாட்டும் விஷயங்களில் ஒன்றாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உங்களின் ஸஃப்புகளைச் சீராக்குங்கள்! நன்றாக நெருங்கி நில்லுங்கள், நிச்சயமாக நான் என் முதுகுக்கு பின்னால் உங்களைப் பார்க்கிறேன். (இது புகாரியின் வாசகமும், முஸ்லிமின் கருத்துமாகும்)
புகாரியின் மற்றொரு அறிவிப்பில்: (ஸஃப்பில் நிற்கும்பொழுது) எங்களில் ஒருவர் தம் தோள்பட்டையை அருகிலுள்ளவரின் தோள்பட்டையுடனும், தம் பாதத்தை அவரின் பாதத்துடனும் சேர்த்துக் கொள்வோம் என அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
நீங்கள் உங்கள் ஸப்புகளைச் சீராக்கி கொள்ளூங்கள் இல்லையெனில் அல்லாஹுதஆலா உங்கள் முகங்களுக்கிடையில் (உங்களுக்கிடையில்) வேற்றுமையை ஏற்படுத்திவிடுவான் என நபி (ஸல்) கூறினார்கள்:. (புகாரி, முஸ்லிம்)
முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது: நாங்கள் புரிந்து கொண்டு சரியாக நிற்கிறோம் என்பதை பார்க்கும் வரை நபி (ஸல்) அவர்கள் அம்புகளை சீர்படுத்துவது போல் எங்கள் ஸஃப்புகளைச் சீர்படுத்துவார்கள். பின்பு ஒரு நாள் அவர்கள் தொழுகைக்காக வீட்டிலிருந்து வந்தார்கள். (தொழுகையை ஆரம்பிக்க) தக்பீர் சொல்ல நெருங்கிவிட்டார்கள். அப்பொழுது ஒருவர் ஸஃப்பை விட்டு தம் நெஞ்சை வெளிப்படுத்தி (ஸஃப்பை விட்டு சற்று முன்னால்) நிற்பதை அவர்கள் பார்த்துவிட்டார்கள். உடனே, அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் ஸஃப்புகளை சீராக்கிக் கொள்ளுங்கள் அவ்வாறு இல்லையெனில் அல்லாஹ் உங்களுக்கு மத்தியில் பிளவையும், வேறுபாட்டையும் ஏற்படுத்தி விடுவான் என எச்சரித்தார்கள்.
நபி(ஸல்) அவர்கள் ஸஃப்பின் ஒரு பகுதியிலிருந்து மறு பகுதிக்குப் புகுந்து செல்வார்கள். எங்கள் நெஞ்சுகளையும் தோள்பட்டைகளையும் தடவி விடுவார்கள். அப்பொழுது கூறுவார்கள்: (ஸஃப்பில்) நீங்கள் வேறு படாதீர்கள் அவ்வாறு நீங்கள் வேறுபட்டால் உங்கள் உள்ளங்களும் வேறுபட்டு விடும். மேலும் அவர்கள் கூறுவார்கள், நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய மலக்குகளும் முந்திய ஸப்புகளில் உள்ளவர்கள் மீது ஸலவாத் கூறுகின்றனர். (அல்லாஹ் ஸலவாத் கூறுகிறான் என்பதின் பொருள்: அல்லாஹ், அவர்கள் மீது தன் அருள்களைப் பொழிகிறான் என்பதாகும். மலக்குகள் ஸலவாத் கூறுகின்றார்கள் என்பதின் பொருள், மலக்குகள் அவர்களுக்காக துஆச் செய்கின்றனர் என்பதாகும்) (அபூதாவூது)
விளக்கம்: தொழுகையில் வரிசையில் நிற்கும் போது நெருக்கமாகவும் நேராகவும் நிற்க வேண்டும். நெருக்கமாக நிற்பதென்பது, நமது வலது இடது பக்கத்தில் உள்ளவர்களின் தோள்புயத்துடன் நமது தோள்புயமும் கால் பாதத்துடன் கால் பாதமும் சேர்ந்திருக்க வேண்டும். நேராக நிற்பதென்பது, நமது வலது இடது பக்கத்திலுள்ளவர்களின் கணுக்காலுடன் நமது கணுக்கால் சேர்ந்திருக்க வேண்டும். விரல் நுனிகளை வைத்து நேர் பார்க்கக்கூடாது. நமது காலை பக்கத்திலுள்ளவர்களின் காலுடன் சேர்க்கும்போது மிருதுவைக் கடைபிடிக்க வேண்டும். மற்றவர்களுக்கு நோவினை ஏற்படும் அளவிற்கு கடினத்தை கைவிட வேண்டும். பின்வரும் ஹதீது அதை தெளிவுபடுத்துகின்றது.
உங்கள் ஸஃப்புகளை நேராக நிலை நாட்டுங்கள். உங்கள் தோள் பட்டைகளுக்கு நேர் படுங்கள், இடைவெளிகளை நிரப்புங்கள். உங்கள் சகோதரர்களின் கரங்களுடன் மென்மையைக் கடைபிடியுங்கள். ஷைத்தானிற்காக இடைவெளியை விட்டு விடாதீர்கள். யார் ஸஃப்பை (நல்லமுறையில்) சேர்த்துக் கொள்கிறாரோ அவரை அல்லாஹ் சேர்த்துக் கொள்வான். யார் ஸஃப்பை துண்டிக்கிறாரோ அவரை அல்லாஹ் துண்டித்து விடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூது)
இந்த ஹதீதில், தொழுகையில் வரிசையில் இடைவெளி விடுவதுபற்றி கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டும் இன்னும் இது விஷயத்தில் மக்கள் அறியாமையில்தான் இருந்து கொண்டிருக்கின்றார்கள். இதுபற்றி அறியாமையில் உள்ள மக்களுக்கு பக்கத்தில் தொழும் போது பல சிரமங்களையும் நாம் எதிர் நோக்கின்றோம், அவர்களின் கால் பாதத்துடன் நமது கால் பாதத்தை சேர்க்க முனையும் போது அவர்கள் ஏதோ அது ஒரு பாவகரமான செயல் போன்று நினைத்து, அவர்கள் நம்மை விட்டும் வெகு தூரம் நகர்ந்து விடுகின்றார்கள். அப்படிப்பட்டவர்கள், இச்சுன்னாவை நினைவில் வைத்து இனிமேலாவது இதை செயல் படுத்த முன்வர வேண்டும். யார் ஸஃப்பை (நல்லமுறையில்) சேர்த்துக் கொள்கிறாரோ அவரை அல்லாஹ் சேர்த்துக் கொள்வான். யார் ஸஃப்பை துண்டிக்கிறாரோ அவரை அல்லாஹ் துண்டித்து விடுவான் என்ற நபி(ஸல்) அவர்களின் பொன்மொழிகளையும் இப்படிப்பட்டவர்கள் ஞாபகம் வைத்து கொள்ளட்டும்.
- வரிசையில் நெருக்கமாக நிற்க வேண்டும்
நீங்கள் உங்களின் வரிசைகளை நெருக்கமாகவும் சமீபமாகவும் ஆக்கிக் கொள்ளுங்கள், கழுத்துகளுக்கு நேராக நில்லுங்கள், என் உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அவன்மீது ஆணையாக, வரிசையின் இடைவெளிகளில் சிறிய கறுப்பு ஆட்டுக்குட்டியின் தோற்றத்தில் ஷைத்தான் நுழைகின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்)
விளக்கம்: வரிசையில் இடைவெளி விட்டு நின்றால் அங்கே ஷைத்தான் கருப்பு ஆட்டுகுட்டி உருவத்தில் நுழைந்து நமது உள்ளங்களில் பல எண்ணங்களை உண்டுபண்ணி நமது தொழுகைகளை பாழாக்கிவிடுவான், ஆகவே வரிசைகளில் இடைவெளி விடுவதை முற்றாக தவிர்ந்து கொள்ள வேண்டும்.
- முதல் வரிசையை முழுமைபடுத்திய பின்புதான் அடுத்த வரிசையை ஆரம்பிக்க வேண்டும்
முதல் ஸஃப்பை பூர்த்தி செய்யுங்கள். பிறகு அடுத்த ஸஃப்பை பூர்த்தி செய்யுங்கள். ஸஃப்பில் குறை இருக்குமாயின் அது கடைசி ஸப்பாக இருக்கட்டும். (அபூதாவூது)
விளக்கம்: முன் உள்ள வரிசையில் இடம் இருக்கும் போது அடுத்த வரிசையை ஆரம்பிக்கக் கூடாது, முன்வரிசையை முழுமை படுத்திய பின்பே அடுத்த வரிசையை ஆரம்பிக்க வேண்டும். இன்று சில பள்ளிகளில், தொழுகை முடிந்துதும் பள்ளியை விட்டும் புறப்பட்டு விட வேண்டும் என்பதற்காக அல்லது மின்விசிறிக்குக் கீழ் நிற்க வேண்டும் அல்லது எயர் கண்டிஸனுக்கு நேராக நிற்க வேண்டும் என்பதற்காக அல்லது இதுபோன்ற பல காரணங்களுக்காக முன் வரிசையில் இடமிருந்தும் தன் சுயநலத்திற்கு ஏற்றவாறு ஏதாவது ஓர் இடத்திலிருந்து வரிசையை ஆரம்பிக்கின்றார்கள். இது முற்றிலும் சுன்னாவிற்கு மாற்றமான முறையும் முற்றிலும் தடுக்கப்பட வேண்டியவையுமாகும். இப்படி நடந்து கொள்பவர்கள் அல்லாஹ்வை பயந்து கொள்ளட்டும்.
- இமாமின் வலது புறத்திலிருந்து வரிசையை ஆரம்பிக்க வேண்டும்
தொழுகையில் இமாமை நடுவில் நிற்கச் செய்யுங்கள். ஸஃப்புகளுக்கு இடையில் இடைவெளியை அடையுங்கள் என நபி(ஸல்) கூறினார்கள். (அபூதாவூது)
இமாமின் வலது புறத்திலிருந்து வரிசையை ஆரம்பிக்க வேண்டும்
ஒரு இரவு நபி(ஸல்) அவர்களுடன் சேர்ந்து இரவு தொழுகை தொழுவதற்காக அவர்களின் இடது பக்கம் எழுந்து நின்றேன். பின்பக்கமாக என் தலையை நபி (ஸல்) அவர்கள் பிடித்து அவர்களின் வலது பக்கத்திலே என்னை நிறுத்தினார்கள் என அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (திர்மிதி)
- பெண்கள் நிற்கும் வரிசை
நானும் ஒரு அனாதையும் எங்களின் வீட்டிலே நபி(ஸல்) அவர்களுக்கு பின்னால் (இரவுத் தொழுகை) தொழுதோம், என் தாய் உம்மு சுலைம்(ரலி) அவர்கள் எங்களுக்கு பின் நின்றுதொழுதார்கள். (புகாரி)
விளக்கம்: மேல்கூறப்பட்ட ஹதீதுகளிலிருந்து பல சட்டங்களை நாம் விளங்கலாம், இருவர் ஜமாஅத்தாக தொழுதால் மஃமூமாக நிற்பவர் இமாமின் வலது பக்கத்தில் நிற்க வேண்டும். இரண்டாவது நபர் வந்து விட்டால் இவர் இமாமுக்கு பின்பக்கமாக சென்று அவ்விருவரும் இமாமுடைனய வலது இலது பக்கத்தில் நிற்க வேண்டும். அதன் பின் வருபவர்கள் வலது இடது பக்கமாக நிற்க வேண்டும். மஃமூம்கள் இருவராக இருந்து ஒருவர் ஆணாகவும் மற்றொருவர் பெண்ணாக இருந்தால், ஆண் இமாமின் வலது பக்கத்திலும் பெண் பின் வரிசையிலும் தனியாக நிற்க வேண்டும். அந்தப் பெண் தனது தாயாக, மகளாக, மனைவியாக இருந்தாலும் சரியே. பெண்களுக்கு சிறந்த வரிசை பின் வரிசையாகும். பின்வரும் ஹதீது அதை தெளிவு படுத்துகின்றது.
தொழுகையில் ஆண்களின் ஸஃப்புகளில் மிகச் சிறந்தது முதல் ஸஃப்பாகும். அந்த ஸஃப்புகளில் கெட்டது கடைசி ஸஃப்பாகும். பெண்களின் ஸஃப்புகளில் மிகச் சிறந்தது அவற்றில் கடைசி ஸஃப்பாகும். அவைகளில் கெட்டது ஆரம்ப ஸஃப்பாகும் என நபி(ஸல்) கூறினார்கள். (ம