கணவனின் பணத்தைக் கணவனுக்குத் தெரியாமல் மனைவி எடுக்கலாமா?
போதுமானதை நியாயமான முறையில் மனைவி மக்கள் எடுக்கலாம்.
ஒரு பொருளை அதன் உரிமையாளருக்குத் தெரியாமல் அல்லது அவரது அனுமதி இல்லாமல் எடுத்துக் கொள்வது தான் திருட்டாகும். இதை யார் செய்தாலும் திருட்டு தான்.
எனினும் ஒரு குடும்பத் தலைவர் தனது குடும்பத்திற்குத் தேவையான பொருளைத் தர மறுக்கும் போது, அவருக்குத் தெரியாமல் அவரது மனைவியோ அல்லது குடும்பத்தைக் கவனிக்கும் பொறுப்பாளரோ பணத்தை எடுத்துக் கொள்வதில் தவறில்லை. ஆனால் குடும்பத் தேவைக்காக மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். ஆடம்பரச் செலவுக்காகவோ அல்லது வேறு வகைகளுக்காகவோ எடுக்கக் கூடாது.
முஆவியா (ரலி) அவர்களின் தாயார் ஹிந்த் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம், ‘(என் கணவர்) அபூசுஃப்யான் கஞ்சராக இருக்கிறார். அவரது பொருளை அவருக்குத் தெரியாமல் நான் எடுத்தால் என் மீது அது குற்றமா?’ என்று கேட்டார்.
அதற்கு, ‘உனக்குப் போதுமானதை நியாயமான முறையில் நீயும் உன் மக்களும் எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 2211, 2460, 5359, 5364, 5370, 6641, 7161, 7170
இந்த ஹதீஸில், ‘நியாயமான முறையில் நீயும் உன் மக்களும் எடுத்துக் கொள்ளுங்கள்’ என்ற வாசகத்தைக் கவனிக்கும் போது, குடும்பச் செலவு அல்லாத இதர தேவைகளுக்காக எடுப்பது கூடாது என்பதை அறியலாம்.