விந்து, மாதவிடாய் பட்ட ஆடையுடன் தொழலாமா❓(ஸ்கலிதம்)
கீழுள்ள பதில் படுக்கை விரிப்பிற்கும் பொருந்தும்
ஸ்கலிதம் அல்லது உடலுறவின் காரணமாக ஆடையில் அசுத்தம் ஏற்பட்டால் அந்த இடத்தை மட்டும் கழுவி விட்டால் போதுமானது. ஆடை முழுவதையும் துவைக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அந்த அசுத்தம் காய்ந்து விட்டால் அந்தப் பகுதியைச் சுரண்டி விட்டு பின்னர் அந்தப் பகுதியை மட்டும் கழுவினால் போதுமானது. பின்வரும் செய்திகள் இதைத் தெளிவுபடுத்துகின்றன.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய ஆடையில் இந்திரியம் பட்ட இடத்தை நான் கழுவுவேன். அந்த ஆடையோடு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகைக்குச் செல்வார்கள். ஆடையில் ஈரம் தெளிவாகத் தெரியும்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 229
ஒரு பெண் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! ஒரு பெண்ணுடைய ஆடையில் மாதவிடாய் இரத்தம் பட்டுவிட்டால் அவள் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உங்களில் ஒரு பெண்ணுடைய ஆடையில் மாதவிடாய் இரத்தம் பட்டுவிட்டால் (அது காய்ந்து விட்டிருந்தால்) அதைச் சுரண்டி விட்டுப் பின்னர் அந்த இடத்தில் தண்ணீர் தெளித்துவிடட்டும். பின்னர் அந்த ஆடையுடன் தொழுது கொள்ளலாம் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி)
நூல் : புகாரீ 307
எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது நானும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் ஒரே போர்வைக்குள் படுத்துக் கொள்வோம். என்னிடமிருந்து (இரத்தம்) ஏதேனும் அவர்களின் மீது பட்டுவிடுமானால் அவ்விடத்தைக் கழுவிக் கொள்வார்கள். அதற்கு மேல் வேறெதுவும் செய்ய மாட்டார்கள். அதே ஆடையுடனே தொழவும் செய்வார்கள். மீண்டும் வந்து படுத்துக் கொள்வார்கள். என்னிடமிருந்து ஏதேனும் அவர்கள் மீது பட்டுவிடுமானால் அவ்வாறே செய்துவிட்டு அந்த ஆடையுடனே தொழுது கொள்வார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : தாரமீ 1773
ஏகத்துவம்