தாயீக்கள் அறிந்திருக்க வேண்டிய பலவீனமான செய்திகள்
சரியான செய்திகளை அறிவதை விட, தவறான, பலவீனமான செய்திகளை கண்டிப்பாக ஒரு பேச்சாளர் அறிந்திருக்க வேண்டும்.
மிக அதிகமாக மக்களிடத்தில் புழக்கத்தில் உள்ள சில பலவீனமான செய்திகளை மட்டும் பட்டியலிட்டுள்ளோம் . இன்னும் ஏராளமான செய்திகள் உள்ளன. அவற்றையும் தெரிந்து கொண்டு, அதற்கேற்ப உரை நிழத்த வேண்டும்.
முரண்பட்ட மற்றும் பலவீனமான செய்திகள், அதன் விளக்கங்களுடன்.
ஆதமுடைய மக்கள் அனைவரும் தவறு செய்பவர்கள். தவறு செய்பவர்களில் சிறந்தவர்கள் மன்னிப்புக் கேட்டு திருந்துபவர்களே! இந்த ஹதீஸ் ளயீஃபானது என்றாலும், இதே கருத்துள்ள சரியான வேறு ஹதீஸ்கள் உள்ளன.
மூன்று துஆக்கள் சந்தேகமின்றி பதிலளிக்கப்படும். தந்தை பிள்ளைகளுக்கு செய்யும் துஆ 2. பயணியின் துஆ. 3.அநீதி இழைக்கப்பட்டவனின் துஆ என்று நபியவர்கள் கூறினார்கள். அபூதாவூத் (1313) இந்த ஹதீஸ் பலஹீனமானது. எனினும், பயணியின் துஆ, அநீதி இழைக்கப்பட்டவனின் துஆ அங்கீகரிக்கப்படும் என்பதற்கு வேறு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன. புகாரி (2448)
பள்ளிவாசலில் தன்னுடைய முகம் குப்புற தூங்கிக் கொண்டிருந்த ஒரு மனிதரை நபியவர்கள் கடந்து சென்றார்கள். அவரை தன்னுடைய காலினால் தட்டி எழுந்து அமர்வீராக. இது நரகவாசிகளுடைய தூக்கமாகும் என்றார்கள். இப்னுமாஜா (3715)
சீனா சென்றேனும் கல்வியை தேடு. ஏனெனில் கல்வியை தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பைஹகீ. இது ளயீஃபானது. எனினும், கல்வியை கற்க வேண்டும் என்பதற்கு திருக்குர்ஆனிலும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளிலும் ஏராளமான செய்திகள் உள்ளன.
இந்தப் பள்ளிவாசலில் 200 நபித்தோழர்களைக் கண்டுள்ளேன். இமாம் “கைரில் மக்லூபி அலைஹிம் வலழ்ழாள்ளீன்’ எனக் கூறும் போது அந்த நபித் தோழர்களிடமிருந்து “ஆமீன்’ என்ற பெரும் சப்தத்தை நான் கேட்டுள்ளேன். பைஹகீ (2556), இது நபியின் காலத்தில் நடந்தது இல்லை. எனவே சப்தமிட்டோ, சப்தமிடாமலோ ஆமீன் கூறலாம்.
நோன்பு துறக்கும் போது, தஹபல் ளமவு வப்தல்லித்தில் உரூக்கு வஸபத்துல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ் (தாகம் தணிந்தது, நரம்புகள் நனைந்தன, அல்லாஹ் நாடினால் கூலியும் கிடைத்துவிடும்) என்று நபி கூறினார்கள். அபூதாவூத் (2010). இது ளயீஃபானது. நோன்பு திறப்பதற்கென்று எந்த துஆவும் இல்லை.
குறிப்பிட்ட விரலில் மோதிரம் அணியக் கூடாது என்பதை உறுதியாக அறிவிக்கும் ஹதீஸ் இல்லாததால் அனைத்து விரல்களிலும் மோதிரம் அணியலாம் என்பதே சரியானதாகும்.
தொழுகையில் ருகூவிலிருந்து எழுந்த பிறகு ரப்பனா வலகல் ஹம்து ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரகன் ஃபீஹி என்று கூறுவது நபிவழியல்ல. ஒரு சஹாபி ருகூ கிடைத்த மகிழ்ச்சியில் கூறியது.
கப்ருகளை ஸியாரத் செய்யும் பெண்களையும் அதை வணங்குமிடமாகவும் விளக்கு ஏற்றுமிடமாகவும் ஆக்கும் பெண்களையும் நபி சபித்தார்கள். திர்மிதி (294). இது ளயீஃபானது. எனவே பெண்கள் ஜியாரத் செய்வது தவறல்ல.
அறியாமைக் காலத்தில் விபசாரம் புரிந்த பெண்குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை நான் கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன். புகாரி (3849). குரங்குகளுக்கு சட்டம் இல்லை. எனவே இது ஏற்கத்தகுந்த செய்தி இல்லை.
பெண் தனியாக பயணம் செய்த ஒரு நாள், இரண்டு நாள், மூன்று நாள் என பல்வேறு முரண்பட்ட அறிவிப்புகள் உள்ளன. காலக்கெடு தெளிவின்றி இருப்பதால், குறிப்பிட்ட காலக்கெடு என்று இல்லை. பாதுகாப்பற்ற நிலையில் சிறு தூரமானாலும் தடை.
மக்களிடம் புழக்கத்தில் உள்ள பலவீனமான ஹதீஸ்கள்.
ஹஜருல் அஸ்வத் என்னும் கல் சொர்க்கத்தின் கற்களில் ஒன்றாகும்.
சொர்க்கத்தின் திறவுகோல் தொழுகை, தொழுகையின் திறவுகோல் உளு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அனுமதிக்கப்பட்டவைகளில் அல்லாஹ்வுக்கு மிகவும் வெறுப்பானது விவாகரத்தாகும், அபூதாவூத் (1863)
அபூபக்கரின் ஈமானையும் பூமியிலுள்ளோரின் ஈமானையும் நிறுக்கப்பட்டால் அபூபக்ரின் ஈமானே மேலேங்கும். அல்காமில் இப்னு அதீ, 4-201
ஜும்ஆ நாளில் கஹ்ஃப் (18வது) அத்தியாயத்தை யாரேனும் ஓதினால் அடுத்த ஜும்ஆ வரை அவருக்கு பிரகாசம் நீடிக்கிறது என்று நபியவர்கள் கூறினார்கள். ஹாகிம் (3392)
உங்களில் யாரும் நின்றுகொண்டு அருந்த வேண்டாம். யாரேனும் மறந்து நின்றுகொண்டு அருந்தி விட்டால் அவர் வாந்தி எடுத்துவிடட்டும். முஸ்லிம் (4119)
திருமணத்தைப் பகிரங்கப் படுத்துங்கள். அதற்காக தஃப் -முரசு கொட்டுங்கள். திர்மிதி.
உங்களில் மரண வேளை நெருங்கியவர்களுக்கு யாஸீன் ஓதுங்கள். இப்னுமாஜா 1438
மூன்று விஷயங்களை தாமதப்படுத்தாதே! தொழுகை அதன் நேரம் வரும் போதும், ஜனாஸா தாயாராகிவிட்டதும், துணையில்லாத பெண்ணுக்கு பொருத்தமான மணமகனை நீர் கண்டபோதும், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். திர்மிதி (156)
ஒருவர் உட்கார்ந்திருக்கும் போது கோபம் வந்தால் அவர் அமர்ந்து கொள்ளட்டும். கோபம் போனால் சரி, இல்லையானால் அவர் படுத்துக் கொள்ளட்டும். அபூதாவூத் (4151)
கோபம் ஷைத்தானிடமிருந்து வந்ததாகும். ஷைத்தான் நெருப்பால் படைக்கப்பட்டுள்ளான். நெருப்பு தண்ணீரைக் கொண்டு அணைக்கப்படுகிறது. எனவே உங்களில் ஒருவர் கோபப்பட்டால் உளுச் செய்து கொள்ளட்டும். அபூதாவூத் (4152)
விறகை நெருப்பு திண்பதை போல் பொறாமை நன்மைகளை திண்டுவிடும். நெருப்பை தண்ணீர் அணைப்பது போல் தர்மம் பாவங்களை அழித்துவிடும். தொழுகை முஃமின்களின் ஒளியாகும். நோன்பு நரகத்தை காக்கும் கேடயமாகும். இப்னுமாஜா (4200)
இஸ்லாத்தில் முதல் ஷஹீத் அம்மாரின் தாயார் சுமைய்யா (ரலி) ஆவார். அவரின் மர்ம உறுப்பில் அபூஜஹ்ல், ஈட்டியை குத்தி கொன்றான். யாஸிர் (ரலி) அவர்களை மக்கா காஃபிர்கள் பிடித்து அவர்களின் ஒரு காலை ஒரு ஒட்டகத்திலும் மறுகாலை இன்னொரு ஒட்டகத்திலும் கட்டி இரு ஒட்டகங்களையும் இருவேறு திசையில் ஓடச் செய்து, இருகூறாக பிளந்து கொலை செய்தார்கள் – இப்படி ஒரு செய்தியே ஹதீஸில் இல்லை.
ஸவ்ர் குகையில் தூங்கிய நபியை பாம்பு தாக்கிவிடாமல் இருக்க, குகையின் ஓட்டைகளை அபூபக்கர் காலால் அடைத்தார். நபி தனது எச்சிலை மருந்தாக்கினார்கள்.
நபி ஸவ்ர் குகையில் அபூபக்கருடன் இருந்தபோது சிலந்தி வலை பின்னியது. புறா முட்டையிட்டது. முஸ்னத் அஹ்மத்.
யார் தொழுகையை பேணிக்கொள்கிறாரோ அது அவருக்கு மறுமையில் ஒளியாக இருக்கும். தொழாதவன் மறுமை நாளில் காரூன், பிர்அவ்ன், ஹாமான் ஆகியாருடன் இருப்பான்.
பார்வை, பார்வையை பின்தொடர வேண்டாம். முதல் (பார்வை) உனக்குரியது (அனுமதிக்கப்பட்டது) அடுத்தது உனக்கு அனுமதிக்கப்பட்டதல்ல என்று நபி கூறினார்கள். திர்மிதி (2701). இது பலஹீனமான ஹதீஸ். எனினும், தவறாக பார்த்துவிட்டால் உடனே பார்வை திருப்பிக் கொள்ளவேண்டும் என்பதற்கு வேறு ஆதாரப்பூர்வமான செய்தி உள்ளது.
அல்லாஹ்வின் தூதரே நான் போர் செய்ய நாடுகிறேன், என்று ஜாஹிமா (ரலி) கூறினார்கள். உமக்கு தாய் இருக்கிறார்களா? என்று நபி கேட்டதும், ஆம் என்றார்கள். அவர்களை அவசியமாக்கிக் கொள். ஏனெனில் தாயின் பாதங்களுக்கு கீழ் சொர்க்கம் உள்ளது. என்று நபி(ஸல்) கூறினார்கள். நஸாயீ (3053), முஸ்னத் ஷிஹாப் (113).
என்னுடைய சமுதாயத்தினர் வழிகேட்டில் ஒன்றுபட மாட்டார்கள். நீங்கள் கருத்து வேறுபாடுகளைக் கண்டால் பெரும் கூட்டத்தைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். – இப்னுமாஜா 3940
என்னுடைய தோழர்கள் வின்மீன்களைப் போன்றவர்கள். அவர்களில் யாரை நீங்கள் பின்பற்றினாலும் நீங்கள் நேர்வழி அடைவீர்கள்.
நபிமார்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து இருபத்து நான்காயிரம்.
பெண்கள் தலையை மழிக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடைவிதித்தார்கள்.
ஃபாத்திமாவே ஹசன் தலையை மழித்து அந்த முடியின் எடைக்கு நிகராக வெள்ளியை தர்மம் செய்வீராக. என்று கூறினார்கள் திர்மிதி (1439)
தான் இறந்த இடத்திலேயே, அடக்கம் செய்ய வேண்டும் என்று தன்னிடத்தில் நபி கூறியதாக, அபூபக்கர் அறிவிப்பது போல் உள்ள செய்தி – திர்மிதி.
பெருநான் தினத்தன்று கூறும் தக்பீர் அல்லாஹுஅக்பர் கபீரா வல்ஹம்துலில்லாஹி கஸீரா…புக்ரதன்… (இது நபியின் கூற்றல்ல)
தர்மம் செய்ய, நபி கட்டளையிட்டபோது உமர் தனது சொத்தில் பாதியை கொண்டு வந்தார். அபூபக்கர் அனைத்தையும் கொண்டு வந்து வீட்டில் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் விட்டு வந்தேன். என்று அபூபக்கர் கூறியதாக வரும் செய்தி – திர்;மிதி (3608)
ரமலானின் முதல் பகுதி அருளாகவும், நடுப்பகுதி மன்னிப்பு வழங்கப்படக் கூடியதாகவும், இறுதிப் பகுதி நரகத்திலிருந்து விடுதலை கிடைக்கப் பெறக் கூடியதாகவும் இருக்கிறது – இப்னு குஸைமா.
நோயோ தக்க காரணமோ இன்றி ரமலானில் ஒரு நாள் நோன்பை விட்டு விட்டால் காலமெல்லாம் நோன்பு நோற்றாலும் அதற்கு ஈடாகாது. திர்மிதி (655)
நோன்பும் குர்ஆனும் கியாம நாளில் அடியானுக்குப் பரிந்துரை செய்யும். ”இறைவா, இந்த அடியானை நான் பகலில் உணவை விட்டும் ஆசைகளை விட்டும் தடுத்து விட்டேன். இவர் விஷயத்தில் என் பரிந்துரையை ஏற்றுக்கொள்” என்று நோன்பு கோரும். “இரவில் அவனுடைய தூக்கத்தைத் தடுத்து விட்டேன். ஆகவே இவர் விஷயத்தில் என் பரிந்துரையை ஏற்றுக்கொள்” என்று குர்ஆன் கோரும். அவை இரண்டின் பரிந்துரையும் ஏற்றுக்கொள்ளப்படும். அஹ்மத் (6337)