பாங்கு சொல்லும் போது கைகளால் காதுகளை மூட வேண்டுமா?
பாங்கு சொல்லும் போது கைகளால் காதுகளை மூட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்தக் கட்டளையும் பிறப்பிக்கவில்லை. ஆனால் பிலால் (ரலி) அவர்கள் பாங்கு சொல்லும் போது அவர்களின் இரு விரல்களயும், இரு காதுகளில் வைத்திருந்ததாக திர்மிதி, அஹ்மத், மற்றும் சில நூல்களிலும் ஹதீஸ்கள் உள்ளன.
பிலால் (ரலி) அவர்கள் பாங்கு சொல்லும் போது சுற்றுவார். அவரது வாயை அங்கும் இங்குமாகத் திருப்பியதை நான் பார்த்தேன். அவரது இரு விரல்கள் அவரது காதுகளில் இருந்தன. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தோலால் ஆன சிவப்புக் கூடாரத்தில் இருந்தனர் என்று அபூ ஜுஹைஃபா (ரலி) அறிவிக்கிறார்.
நூல் : அஹ்மத் 18781
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கட்டளைப்படி பிலால் (ரலி) அவர்கள் காதுகளில் விரலை வைத்தார்கள் என்று இதில் கூறப்படவில்லை. வேறு எந்த ஹதீஸிலும் அப்படி கூறப்படவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னிலையில் ஒரு காரியம் செய்யப்படும் போது அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மறுக்காமல் இருந்தால் மற்றவர்களும் அப்படிச் செய்யலாம் என்றும், அதற்கு அனுமதி உண்டும் என்றும் தான் புரிந்து கொள்ள வேண்டும். அதைச் செய்தாக வேண்டும் என்றோ, அது சிறந்தது என்றோ புரிந்து கொள்ள முடியாது.
கையைக் காதுகளில் வைக்க வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் எந்தக் கட்டளையும் பிறப்பிக்காததால் எது நமக்கு வசதியோ அப்படி நடந்து கொள்ளலாம். காதுகளை மூடிக் கொண்டால் தான் ஒருவருக்கு ஈடுபாடு வரும் என்றால் அப்படிச் செய்து கொள்ளலாம். பாங்கு சொல்லும் போது எது ஒருவருக்கு இயல்பானதோ அப்படி இருந்து கொள்ளலாம்.