சிறு பாவங்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டுமா?

இறைவனிடம் பாவமன்னிப்பை வேண்டும் போது நாம் செய்த பாவங்கள் ஒவ்வொன்றையும் குறிப்பிட்டு மன்னிப்பைக் கேட்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவிடவில்லை.

நாம் எத்தனையோ பாவங்களைச் செய்துவிட்டு மறந்து விடுகின்றோம். சில பாவங்களை அவை பாவம் என்று உணராமலேயே செய்கின்றோம். ஒவ்வொரு பாவத்தையும் குறிப்பிட்டுக் கேட்டால் தான் பாவமன்னிப்புக் கிடைக்கும் என்றால் இத்தகைய பாவங்களுக்கு மன்னிப்பே இல்லை என்று கூறவேண்டி வரும்.

எனவே தான் இஸ்லாம் பாவமன்னிப்புக்கு இப்படியொரு நிபந்தனையை இடவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாவங்களுக்கு பொதுவாக மன்னிப்பு வேண்டியுள்ளார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு பிரார்த்திப்பது வழக்கம்:

ரப்பிஃக்ஃபிர் லீ கத்தீஅத்தீ, வ ஜஹ்லீ, வ இஸ்ராஃபீ ஃபீ அம்ரீ குல்லிஹி, வமா அன்த்த அஉலமு பிஹி மின்னீ. அல்லாஹும்மஃக்ஃபிர்லீ கத்தாயாய, வ அம்தீ, வ ஜஹ்லீ, வ ஜத்தீ . வ குல்லு தாலிக்க இந்தீ. அல்லாஹும்ம ஃக்ஃபிர் லீ மா கத்தம்த்து, வ மா அக்கர்த்து, வ மா அஸ்ரர்த்து, வ மா அஉலன்த்து. அன்த்தல் முகத்திமு. வ அன்த்தல் முஅக்கிரு. வ அன்த்த அலா குல்லி ஷையின் கதீர்.

பொருள்:

என் இறைவா!

என் குற்றங்களையும்,

என் அறியாமையையும்,

என் செயல்கள் அனைத்திலும் நான் மேற்கொண்ட விரயத்தையும் மன்னித்திடுவாயாக.

மேலும், என்னைவிட நீ எவற்றையெல்லாம் அறிந்துள்ளாயோ அவற்றையும் மன்னித்திடுவாயாக.

இறைவா! நான் தவறுதலாகச் செய்ததையும், வேண்டுமென்றே செய்ததையும், அறியாமல் செய்ததையும், அறிந்து செய்ததையும் மன்னித்திடுவாயாக.

இவை யாவும் என்னிடம் இல்லாமலில்லை.

இறைவா! நான் முன்னால் செய்ததையும்,

பின்னால் செய்ததையும்,

இரகசியமாகச் செய்ததையும்,

பகிரங்கமாகச் செய்ததையும் மன்னித்திடுவாயாக.

நீயே முன்னேற்றம் அடையச் செய்பவன்.

பின்னடைவு ஏற்படச் செய்பவனும் நீயே!

நீ அனைத்தின் மீதும் ஆற்றல் பெற்றவன்.

அறிவிப்பவர் : அபூமூசா (ரலி)

நூல் : புகாரி (6398)

அதே சமயம் ஒருவர் தனக்கு நினைவிலிருக்கும் பாவங்கள் ஒவ்வொன்றையும் தனது பிரார்த்தனையில் குறிப்பிட்டு அல்லாஹ்விடம் மன்னிப்பு வேண்டினால் அதில் தவறேதுமில்லை.

இவ்வாறு செய்வது அவரவரது விருப்பத்தைப் பொறுத்தது. எல்லோரும் இவ்வாறு தான் செய்ய வேண்டும் என சட்டமாக்குவது கூடாது.

சிறு பாவங்களைப் பொருத்த வரை அதற்காக மன்னிப்புக் கேட்பதற்கு தடை இல்லை. ஆயினும் மன்னிப்பு கேட்காவிட்டாலும் அந்தப் பாவத்துக்குப் பின் செய்யும் நன்மைகள் அந்தப் பாவத்தை நீக்கி விடும்.

நன்மையான காரியங்கள் தீமையான காரியங்களை அழித்து விடும் என்று அல்லாஹ் இதைத் தான் கூறுகிறான்.

526 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் ஒரு(அந்நியப்) பெண்ணை முத்தமிட்டு விட்டார். நபிகள் நாயக்ம் (ஸல்) அவர்களிடம் அந்த மனிதர் வந்து (பரிகாரம் கேட்டு),

இந்த விவரத்தைச் சொன்னார். அப்போது அல்லாஹ், பகலின் இரு ஓரங்களிலும் இரவின் நிலைகளிலும் தொழுகையை நிலை நாட்டுங்கள். திண்ணமாக, நன்மைகள் தீமைகளைக் களைந்துவிடுகின்றன எனும் (11:114ஆவது) வசனத்தை அருளினான்.

அந்த மனிதர், இது எனக்கு மட்டுமா (அல்லது அனைவருக்குமா)? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், (இதன்படி செயல்படும்) என் சமுதாயத்தார் அனைவருக்கும் தான் என்று பதிலளித்தார்கள்.

புஹாரி 526, 4687

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *