குப்புறப் படுத்து தூங்கலாமா.?

குப்புறப்படுத்து தூங்கக் கூடாது என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. ஆனால் அவை அனைத்துமே அறிவிப்பாளர் தொடரில் பல குறைபாடுகளைக் கொண்டதாக உள்ளன. இந்த அறிவிப்பாளர் தொடர் குறித்த விமர்சனம் நுணுக்கமானதாக இருந்தாலும் இதை சரியான ஹதீஸ் என்று சிலர் வாதிடுவதால் விரிவாகவே இதை விளக்குகிறோம்.

முதல் ஹதீஸ்

ஒருமனிதர் தன்னுடைய வயிற்றின் மீது (குப்புறப்) படுத்திருப்பதை நபியவர்கள் பார்த்தார்கள். இவ்வாறு படுப்பதை அல்லாஹ் விரும்ப மாட்டான் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் அபூ ஹூரைரா (ரலி) நூல் திர்மிதி (2692) அஹ்மது (7524, 7698)

திர்மிதி, மற்றும் அஹ்மதில் முதல் மூன்று அறிவிப்பாளர்கள் பின்வருபவர்கள் ஆவர்.

  • நபியவர்களிடமிருந்து அபூ ஹூரைரா (ரலி)
  • அபூ ஹூரைராவிடமிருந்து அபூ ஸலமா
  • அபூ ஸலமாவிடமிருந்து முஹம்மது பின் அமர்

இந்த அறிவிப்பாளர் வரிசையில் வருவது ஸஹீஹானது – ஆதாரப்பூர்வமானது – கிடையாது என இமாம் புகாரி அவர்கள் கூறுகின்றனர்.

நபியவர்களிடமிருந்து அபூ ஹூரைரா (ரலி)., அபூ ஹூரைராவிடமிருந்து அபூ ஸலமா  , அபூ ஸலமாவிடமிருந்து முஹம்மது பின் அமர்  என்ற அறிவிப்பாளர் வரிசையில் வருவது ஸஹீஹானது கிடையாது என இமாம் புகாரி கூறியுள்ளார்கள்

நூல்  தாரீகுஸ் ஸகீர்  (பாகம்  1 பக்கம் 152)

நபி (ஸல்)

அபூ ஹூரைரா

– முஹம்மத் பின் அம்ர் பின் அதா

– முஹம்மத் பின் அம்ர் பின் ஹல்ஹலா

– அப்துல் அஸீஸ் பின் முஹம்மத்

– என்ற அறிவிப்பாளர் வரிசையில் அஹ்மத் பின் ஹஜ்ஜாஜ் என்பவர் எங்களுக்கு அறிவித்தார் என இமாம் புகாரி அவர்கள் குறிப்பிட்டு விட்டு (குப்புறப் படுப்பது தொடர்பான செய்தி ) அபூ ஹூரைரா வழியாக அறிவிக்கப்படுவது ஸஹீஹானது கிடையாது என்று குறிப்பிட்டார்கள்.

நூல்: தாரீகுல் கபீர் (பாகம் 4 பக்கம் 365)

புகாரி இமாம் அவர்கள் இதற்கான காரணத்தைக் கூறவில்லை. இமாம் இமாம் அபூ ஹாத்தம் அவர்கள் காரணத்துடன் தமது இலலுல் ஹதீஸ் என்ற நூலில் இதை விளக்கியுள்ளானர். புகாரி இமாம் அவர்கள் இதற்கான காரணத்தைக் கூறவில்லை. இமாம் அபூ ஹாத்தம் அவர்கள் காரணத்துடன் தமது இலலுல் ஹதீஸ் என்ற நூலில் இதை விளக்கியுள்ளானர்.

குப்புறப்படுப்பது தொடர்பாக அபூ ஹூரைரா வழியாக அறிவிக்கப்படும் செய்தியைப் பற்றி என்னுடைய தந்தை அபூ ஹாதிமிடம் நான் கேட்டபோது அதில் குறையுள்ளது என்று கூறினார்கள்.

நான் அது என்ன? என்று கேட்டேன். (குப்புறப்படுப்பது தொடர்பாக) தஹ்ஃபா அவர்களிமிடமிருந்து அவருடைய மகன் இப்னு தஹ்ஃபா அறிவிப்பது தான் சரியானது எனக் குறிப்பிட்டார்கள். (எண் 2186)

என்னுடைய தந்தையிடம் (குப்புறப் படுப்பது தொடர்பாக) அபூ ஹூரைரா வழியாக அறிவிக்கப்படுவது பற்றி கேட்டேன் அதற்கவர்கள். (குப்புறப்படுப்பது தொடர்பாக) தஹ்ஃபா அவர்களிமிடமிருந்து அவருடைய மகன் இப்னு தஹ்ஃபா வழியாக முஹம்மத் பின் அம்ர் என்பார் அறிவிப்பது தான் சரியானது எனக் குறிப்பிட்டார்கள். (எண் 2187)

நூல் இலலுல் ஹதீஸ் பாகம் 2 பக்கம் 233)

நுணுக்கமான குறைபாடு

மேற்கண்ட ஹதீஸின் அறிவிப்பாளர்களில் யாரும் நம்பிக்கை குறைவானவர்கள் அல்ல.. அனைவருமே நமபகமானவர்கள் தான். ஆனாலும் அறிவிப்பாளர் குறித்து எந்தக் குறைபாடும் இல்லாமல் இருந்தும் இதை சரியானது அல்ல என்று புகாரி இமாம், அபூஹாதம் இமாம் ஆகியோர் கூறியிருப்பது ஏன் என்பதை நாம் விளங்கிக் கொள்ல வேண்டும்.

ஹதீஸ்களில் அறிவிப்பாளரின் நினைவாற்றல் நம்பகத்தனமை தொடர்பு அறுந்துள்ளமை போன்ற காரணங்களால் ஹதீஸ்கள் பலவீனமாக ஆகின்றன என்பதை நாம் பரவலாக அறிந்துள்ளோம். இது அல்லாத நுணுக்கமான காரணங்களாலும் சில ஹதீஸ்கள் பலவீனமடையும். அது போன்ற பலவீனங்களை இலல் என்று ஹதீஸ்கலையில் வகைப்படுத்தியுள்ளனர். இந்த வகையிலான் நுணுக்கமான பலவீனங்களை கூறும் நூல்கள் இலல் அல்ஹதீஸ் எனப்படும்.

இலல் அல்ஹ்தீஸ் எனும் கலை தான் ஹதீஸ் கலையில் மிக நுணுக்கமானதாகும்.

இதை கூர்மையான அறிவுள்ளவரும்,

ஏராளமான ஹதீஸ்களை மனனம் செய்தவரும் தான் புரிந்து கொள்வார்கள்.

ஒரு ஹதீஸை மட்டும் பார்க்காமல் அது பற்றி வந்துள்ள மொத்த ஹதீஸ்கள் எத்தனை?

அனைத்தும் ஒரே மாதிரி அமைந்துள்ளனவா?

சிறு சிறு வேறுபாடுகள் உள்ளனவா?

என்று நுணுக்கமாக ஆராய்ந்து கண்டுபிடிக்கும் குறைபாடுகளே இலல் எனப்படும்.

குப்புறப்படுப்பது குறித்த அனைத்து ஹதீஸ்களையும் திரட்டி வைத்துக் கொண்டு ஆராயும் போது முஹம்மத் பின் அம்ர் என்பார் இப்னு துஹ்பா வழியாகவும் இப்னு துஹ்பா என்பார் தனது தந்தை துஹ்பா வழியாகவும் அறிவிப்பதாக ஏராளமான அறிவிப்புகள் உள்ளன.

ஆனால் ஒரே ஒரு அறிவிப்பில் மட்டும் முஹம்மத் பின் அம்ர் என்பார் அபூஹுரைராவிடமிருந்து அறிவிப்பதாக உள்ளது.

அனைத்து அறிவிப்புகளையும் ஆய்வு செய்த இலல் துறையில் விற்பண்ணர்களான் அபூஹாத்தம் புகாரி போன்றவர்கள் குப்புறப்படுப்பது குறித்த ஹதீஸை அபூஹுரைரா வழியாக முஹம்மத் பின் அம்ர் அறிவிக்க வாய்ப்பு இல்லை என்று கண்டறிந்து இது பலவீனமானது என்று முடிவு செய்கின்றனர். ஆனால் முஹம்மத் பின் அமர் என்பார் துஹ்பா என்பார் வழியாக அறிவிக்கும் ஹதீஸை அறிவிக்கவே வாய்ப்பு உள்ளது என்று முடிவுக்கு வருகின்றனர்.

(இலல் சம்மந்தமாக தனியாக விரைவில் ஒரு ஆய்வுக்கட்டுரை வெளியிட உள்ளோம். அது வரை இந்த அளவுக்கு சுருக்கமாகப் புரிந்து கொள்வதே போதுமானது.)

இரண்டாவது ஹதீஸ்

எந்த ஹதீஸை முஹம்மத் பின் அமர் என்பார் துஹ்பா என்பாரிடமிருந்து அறிவிக்க் வாய்ப்பு உள்ளதாக மேற்கண்ட இமாம்கள் கருதுகிறார்களோ அந்த ஹதீஸ் இது தான்.

தஹ்பா அல்கிபாரி (ரலி) அறவிக்கிறார். நபிகள் நாயகம் ஸல் அவர்கள் விருந்தளித்த ஏழைகளில் நானும் ஒருவனாக விருந்தில் கலந்து கொண்டேன். தமது விருந்தினரைக் கவனிக்க நபிகள் நாயகம் ஸல அவர்கள் வந்த போது நான் வயிற்றின் மீது அதாவது குப்புற படுத்து இருப்பதைப் பார்த்தார்கள். தமது காலால் என்னை உசுப்பிவிட்டார்கள். நீ இவ்வாறு படுக்காதே. இது அல்லாஹ்வுக்குப் பிடிக்காத படுக்கும் முறையாகும் என்றார்கள்.

அறிவிப்பவர் : துஹ்பாவின் மகன் எயீஷ் நூல் :அஹமத் 25510

துஹ்பாவின் மகனிடமிருந்து இதைக் கேட்டு அறிவிப்பவர் முஹம்மத் பின் அமர் ஆவார். இவரைப் போலவே இன்னும் பலர் இந்த ஹதீஸை துஹ்பா வழியாக அறிவித்திருப்பதாலும் இவரும் துஹ்பா வழியாக அறிவித்திருப்பதாலும் இது தான் சரியானது. இவர் அபூஹுரைரா வழியாக அறிவிப்பதாக வருவது சரியான அறிவிப்பு அல்ல. அப்படியானால் அபூஹுரைரா ரலி வழியாக அறிவிக்கப்படும் ஹதீஸ் தானே பலவீனமானது? இந்த ஹதீஸ் பலவீனமானது அல்லவே? இந்த ஹதீஸ் அடைப்படையில் குப்புறப்படுக்க்க் கூடாது என்று கூறலாமா என்ற கேள்வி எழலாம்.

ஆனால் இந்த ஹதீஸ் வேறு காரணங்களால் பலவீனமடைகின்றது. அதாவது இந்த ஹதீஸை அறிவுக்கும் பலர் பலவாறாக முரண்பட்டு அறிவிக்கின்றனர். அதாவது இள்திராப் எனும் குழப்பம் இதில் அதிகமாக உள்ளது.

அந்த ஹதீஸ்களில் சிலவற்றை பார்ப்போம்.

நூல் அபூதாவூத் (4383)

முஸ்னத் அஹமத் 14993

முஸ்னத் அஹ்மத் 22512

இந்த ஹதீஸ் இன்னும் பல நூல்களில் இடம்பெற்றுள்ளது. இதில் உள்ள முரண்படுகள ஏராளம் என்று தஹ்தீபுல் கமால் ஆசிரியர் ஒரு பட்டியலே போட்டுள்ளார்.

முரண் ஒன்று

துஹ்பா என்ற நபித்தோழர் பற்றி குறிப்பிடும் போது

ஒருவர் طخفة என்கிறார்

இன்னொருவர் طهفة என்கிறார்

மற்றொருவர் طغفة என்கிறார்

முரண் இரண்டு

துஹ்பா என்பவர் கைஸின் மகன் என்று சிலரும்

கைஸின் தந்தை என்று வேறு சிலரும் அறிவித்துள்ளனர்.

முரண் மூன்று

எயீஷ் என்பார் துஹ்பாவின் மகன் என்று ஒருவர் கூறுகிறார்.

இன்னொருவர் எயீஷ் என்பார் கைசின் மகனும் துஹ்பாவின் பேரனுமாவார் என்கிறார்.

இது குறித்து ஒவ்வொருவரும் அறிவிப்பாளர் வரிசையும் ஒவ்வொரு விதமாக உள்ளதைக் கீழே காண்க

முதல் தொடர்

1-கைஸ்

2-துஹ்பா

3- எயீஷ்

4- அபூசலமா பின் அப்துர்ரஹ்மான்

5-யஹ்யா பின் அபீ கஸீர்

இரண்டாம் தொடர்

1-துஹ்பா

2-கைஸ்

3- எயீஷ்

4- அபூசலமா பின் அப்துர்ரஹ்மான்

5-யஹ்யா பின் அபீ கஸீர்

மூன்றாவது தொடர்

1-துஹ்பா

2-துஹ்பாவின் மகன்

3- அபூசலமா பின் அப்துர்ரஹ்மான்

4-யஹ்யா பின் அபீ கஸீர்

நான்காவது தொடர்

1-கைஸ்

2-அவரது மகன் அதிய்யா

3- முஹம்மத் பின் இப்ராஹீம்

4-யஹ்யா பின் அபீ கஸீர்

ஐந்தாவது தொடர்

1-துஹ்பா

2-எயீஷின் மகன்

3- முஹம்மத் பின் இப்ராஹீம்

4-யஹ்யா பின் அபீ கஸீர்

ஆறாவது தொடர்

1-துஹ்பா

2-துஹ்பாவின் மகன்

3-யஹ்யா பின் அபீ கஸீர்

ஏழாவது தொடர்

1-துஹ்பா

2-அவரது மகன் கைஸ்

3- யஹ்யா பின் அபீ கஸீர்

இப்படி பலவாறாக முரண்பட்டு அறிவிக்கப்படும் இந்த ஹதீஸில் யஹ்யா பின் அபீ கஸீர் என்பவர் மட்டும் சரியாகக் குறிப்பிடப்படுகிறார். மற்ற பெயர்கள் அனைத்திலும் குழப்பம் உள்ளது. எனவே யஹ்யா பின் அபீகஸீர் தான் இப்படி மாற்றி மாறிக் கூறுகிறார். இதன் காரணமாக இந்த ஹதீஸ் பலவீனமாகிறது.

(நூல்  தஹ்தீபுல் கமால் பாகம்  13 பக்கம் 375)

இந்த அறிவிப்புகள் குழப்பமானவை என்று பல அறிவிப்பாளர்கள் பற்றிய விமர்சன நூற்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆய்வு செய்பவர்களுக்காக அதன் அரபி மூலத்தை கீழே தந்துள்ளோம்.

إكمال الكمال – (ج 7 / ص 430)றொரு ஹதீஸ்

மேலும் அபூதர் (ரலி) அவர்களிடமிருந்து இப்னு தஹ்ஃபா அல்கிஃபாரி அறிவிப்பதாக இப்னு மாஜா (3714) ல் இடம் பெற்றுள்ளது.

இதுவும் ஆதாரத்திற்கு ஏற்றதல்ல. இந்த அறிவிப்பாளர் தொடரும் மறுக்கத் தக்கதாகும்.

அபூதர் வழியாக அறிவிக்கப்படும் (இப்னுமாஜா) அறிவிப்பாளர் தொடர் நிராகரிக்கத்தக்கதாகும்.எந்த ஒருவரும் இந்த அறிவிப்பாளர் வரிசையை துணைச் சான்றாகக் கொண்டதாக நான் அறியவில்லை.

நூல் தஹ்தீபுல் கமால் (பாகம் 13 பக்கம் 375)

மற்றொரு ஹதீஸ்

அம்ர் பின் அஸ்ஸரீத் கூறுகின்றார் நபியவர்கள் தன்னுடைய முகம்குப்புற படுத்துக் கிடந்த ஒரு மனிதரைக் கடந்து சென்றார்கள். அப்போது இவர்தான் தூங்குபவர்களில் அல்லாஹ்விடத்தில் மிகவும் வெறுப்பிற்குரியவர் ஆவார் என்று கூறினார்கள்.

நூல் அஹ்மத் (18654, 18639)

இந்த செய்தியை அறிவிக்கின்ற அம்ர் பின் அஸ்ஸரீத் என்பவர் நபித் தோழர் கிடையாது. இவர் ஸஹாபாக்களுக்கு அடுத்தகாலத்தைச் சார்ந்த தாபிஈ ஆவார். எனவே இது அறிவிப்பாளர் தொடர் முறிவடைந்த முர்ஸல் என்ற வகையைச் சார்ந்த செய்தியாகும். இதுவும் ஆதாரத்திற்கு ஏற்றது கிடையாது.

அஸ்ஸரீத் (ரலி) அவர்களிடமிருந்து தனக்கு கூறியவர் யார்? என்பதை அம்ர் பின் அஸ்ஸரீத் குறிப்பிடவில்லை. எனவே இதுவும் அறிவிப்பாளர் தொடர் முறிவடைந்த பலவீனமான செய்தியாகும்.

மற்றொரு ஹதீஸ்

அபூ உமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

பள்ளிவாசலில் தன்னுடைய முகம் குப்புற தூங்கிக் கொண்டிருந்த ஒரு மனிதரை நபியவர்கள் கடந்து சென்றார்கள். அவரை தன்னுடைய காலினால் உசுப்பினார்கள். எழுந்து அமர்வீராக. இது நரகவாசிகளுடைய தூக்கமாகும் என்று கூறினார்கள். நூல் இப்னுமாஜா (3715)

இந்த செய்தி பின்வரும் அறிவிப்பாளர்களில் வரிசையில் பதிவு செய்யப்பட்டுள்ளது

அபூ உமாமா (ரலி)

அல்காஸிம் இப்னு அப்திர் ரஹ்மான்

அல்வலீத் பின் ஜமீல்

ஸலமா பின் ரஜா

யஃகூப் பின் ஹூமைத்

மேற்கண்ட அறிவிப்பாளர்களில் அல்வலீத் பின் ஜமீல் என்பாரும் ஸலமா பின் ரஜா என்பாரும் பலவீனமானவர்கள் ஆவர்.

குறிப்பாக அல்வலீத் பின் ஜமீல் என்பார் அல்காஸிம் இப்னு அப்திர்ரஹ்மான் வழியாக அறிவிக்கும் செய்திகள் நிராகரிக்கத்தக்கவை என இமாம் அபூ ஹாதிம் விமர்சனம் செய்துள்ளார்.

இதற்குரிய சான்றுகள் வருமாறு

تهذيب الكمال – (ج 31 / ص 7)

அல்வலீத் பின் ஜமீல் வயோதிகர், ஹதீஸ்களில் பலவீனமானவர் என இமாம் அபூ சுர்ஆ கூறியுள்ளார்.

இவர் வயோதிகர், அல்காஸிம் என்பாரிடமிருந்து நிராகரிக்கத்தக்க செய்திகளை அறிவித்துள்ளார் என இமாம் அபூ ஹாத்திம் கூறியுள்ளார். (நூல் தஹ்தீபுல் கமால் பாகம் 31 பக்கம் 7)

ஸலமா பின் ரஜா என்ற அறிவிப்பாளரையும் பல்வேறு இமாம்கள் குறைகூறியுள்ளனார்.

இவர் ஒருபொருட்டாகக் கொள்ளத் தக்கவரில்லை என இமாம் யஹ்யா பின் முயீன் விமர்சித்துள்ளார்.

இவர் பலவீனமானவர் என இமாம் நஸாயீ கூறியுள்ளார். துணைச் சான்றாக கொள்ள முடியாத ஹதீஸ்களை இவர் அறிவித்துள்ளார் என இமாம் இப்னு அதீ விமர்சித்துள்ளார்.

எனவே மேற்கண்ட அறிவிப்பும் பலவீனம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை

குப்புறப் படுப்பது வெறுப்பிற்குரியது என்ற கருத்தில் வரக்கூடிய அனைத்து ஹதீஸ்களும் பலவீனமாக இருக்கின்ற காரணத்தினால் இவ்வாறு படுப்பது மார்க்க அடிப்படையில் தவறு என்று கூறமுடியாது.

மேலும் இந்த் ஹதீஸ் கருத்து அடிப்படையிலும் இஸ்லாத்தின் அடிப்படையைத் தகர்க்கக் கூடியதாக உள்ளது.

கருத்தும் சரியானது அல்ல

எந்த மனிதராக இருந்தாலும் அவர் ஒரே விதமாகப் படுத்து உறங்கி எழ முடியாது. பலவிதமாகப் புரண்டு படுப்பது தான் மனிதனின் இயல்பாக உள்ளது. அவ்வாறு புரண்டு படுப்பவனுக்கு தான் குப்புறப்படுத்து இருக்கிறோம் என்பதே தெரியாது. மனிதனின் சக்திக்கு உட்பட்ட விஷயங்களில் தான் மார்க்கம் தலையிடும். அல்லாஹ் கேள்வி கேட்பான். மனிதனை மீறி நடக்கும் எந்தக் காரியத்துக்கும் அவன் பொறுப்பாளியாக மாட்டான். இந்த அடிப்படை பல குர்ஆன் வசனங்கள் மூலமும் நபிமொழிகள் மூலமும் அனைவரும் அறிந்து வைத்துள்ளது தான்.

மேற்க்ண்ட ஹதீஸ்களில் ஒருவர் படுக்கைக்குச் செல்லும் போது குப்புறப்படுப்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்ததாக கூறப்படவில்லை. நன்றாக ஆழ்ந்து உறங்கும் போது சஹர் நேரத்தில் வந்து பார்த்து தூங்குபவரை எழுப்பி விட்டு கண்டிப்பதாக வந்துள்ளது. ஆழ்ந்து தூங்கும் போது ஒருவர் குப்புறப்படுத்தால் அது அவருக்கே தெரியாமல் நடப்பதாகும். அதை எப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்க்ள் கண்டிப்பார்கள்?

மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் படுத்து உறங்கும் மனிதரைக் கையால் எழுப்பாமல் காலால் உதைத்து எழுப்பினார்கள் என்பது அவர்களின் நற்குணத்துக்கு மாற்றமாகத் தெரிகிறது என்பதையும் கவனிக்கும் போது இது கூடுதல் பலவீனத்தை அடைகிறது. படுக்க ஆரம்பிக்கும் போது வலது புறமாக ஒருக்களித்து படுப்பது நபிவழியாகும். அதைப் பேணுவதன் மூலம் நன்மைகளை அடையலாம். ஒருக்களித்து படுத்தபின் புரண்டு படுத்து விட்டால் அதனால் நன்மைகளுக்கு பாதிப்பு ஏற்படாது. படுக்கும் போதே குப்புறப்படுத்தால் அதனால் சுன்னத்தை விட்டதால் நன்மை கிடைக்காமல் போகும். அது நரகத்துக்குக் கொண்டு செல்லும் குற்றமாக ஆகாது.

இந்த ஹதீஸின் நுனுக்கமான குறைப்பாடுகளைக் கவனிக்காமல் குப்புறப்படுத்து தூங்குவது கூடாது. என்று முன்னர் கூறி இருந்தோம். என்பதையும் பின்னர் அதை மாற்றிக்கொண்டோம் என்பதையும் தகவலுக்காக பதிவு செய்கிறோம்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *