கவிதை எழுதுவதைப் பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது?
கவிதை எழுதுவதையோ அல்லது பாடுவதையோ இஸ்லாம் தடுக்கவில்லை. ஆனால் அவைகள் இஸ்லாத்திற்கு மாற்றமில்லாத கருத்துக்களை கொண்டிருக்க வேண்டும்.
இஸ்லாத்திற்கு மாற்றமான இணை வைக்கும் கருத்துக்களை கொண்ட கவிதைகளை எடுதுவதற்கோ பாடுவதற்கோ இஸ்லாத்தில் அனுமதியில்லை.
இவருக்கு (முஹம்மதுக்கு) கவிதையை நாம் கற்றுத் தரவில்லை. (அது) அவருக்குத் தேவையுமில்லை.
.(அல் குர்ஆன் 36-69)
நபிகள் நாயகத்திற்கு இறைவன் இறக்கி வைத்த திருமறைக் குர்ஆனை காஃபிர்கள் கவிதை என்று கூறி நபியவர்களை கவிஞர் என்று கூறியதினால் நபியவர்களுக்கு கவிதை கற்றுக் கொடுக்கவில்லை. அது அவருக்குத் தேவையுமில்லை என்று இறைவன் குறிப்பிடுகிறான்.
தீய, இணைவைப்புக் கருத்துக்களை கொண்ட கவிதைகளை இஸ்லாம் தடை செய்கிறது.
ருபய்யிஉ பின்த் முஅவ்வித் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
எனக்குத் திருமணம் நடந்த அன்று காலை நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். – (இந்த ஹதீஸைக் கேட்டுக் கொண்டிருந்த காலித் பின் தக்வான் (ரஹ்)அவர்களிடம்) “எனக்கருகில் நீங்கள் அமர்ந்திருப்பது போல நபி (ஸல்) அவர்கள் எனது விரிப்பின் மீது அமர்ந்தார்கள்” (என்று ருபய்யிஉ கூறினார்கள்)
அங்கு சில (முஸ்லிம்) சிறுமிகள் (சலங்கையில்லா) கஞ்சிராக்களை அடித்துக் கொண்டு பத்ருப் போரில் கொல்லப்பட்ட தங்கள் முன்னோர்களைப் புகழ்ந்து பாடிக் கொண்டிருந்தனர்.
அவர்களில் ஒரு சிறுமி, “எங்களிடையே ஓர் இறைத்தூதர் இருக்கிறார். அவர் நாளை நடக்க விருப்பதையும் அறிவார்” என்று கூறினாள். உடனே நபி (ஸல்) அவர்கள்,
“இப்படிச் சொல்லாதே. (இதை விடுத்து) முன்பு நீ சொல்லிக் கொண்டிருந்ததை (வேண்டுமானால்) சொல்” என்று கூறினார்கள்.
நூல்: புகாரி – 4001
மறைவான ஞானம் நபி (ஸல்) அவர்களுக்கு இல்லை. இறைவனுக்கு மட்டுமே இந்த ஞானம் இருக்கின்றது. முஹம்மது (ஸல்) அவர்களால் நாளை நடப்பதை அறிய முடியும் என்ற தவறான கருத்தை சிறுமி பாடிய போது அதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்கிறார்கள். இதைத் தவிர்த்து விட்டு மற்றவற்றைப் பாடுமாறு அனுமதி கொடுக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்களே சில சந்தர்ப்பங்களில் நபித் தோழர்களை கவிதை பாடும் படி சொல்லியிருக்கிறார்கள்.
நல்ல கவிதைகளை பாடிய சிறுவர்களை தடுத்த நபித்தோழர்களை அவர்களைத் தடுக்க வேண்டாம் என்றும் கூறியிருக்கிறார்கள்.
நபித் தோழர் ஹஸ்ஸான் பின் ஸாபித் அவர்கள் மிகப் பெரிய கவிஞராக இருந்தார்கள். இவர் நபியவர்களின் கவிஞர் என்றே அறியப்பட்டுள்ளார். கவிதை எழுதுவது முற்றிலும் தவறானது என்றிருக்குமானால் நபியின் கவிஞர் என்று இவர் அழைக்கப்பட வேண்டிய தேவை என்ன இருக்கிறது?
பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், (பனூ குறைழா நாளில் கவிஞர்) ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்களிடம், இணைவைப்பவர்களைத் தாக்கி வசைக்கவி பாடுங்கள். ஜிப்ரீல் உங்களுடன் (உறுதுணையாக) இருப்பார் என்று கூறினார்கள்.
நூல்: புகாரி – 4123, 4124
இணை வைப்பாளர்களை தாக்கி வசைக்கவி பாடும் படியும் அப்படி பாடும் போது ஜிப்ரீல் (அலை) என்ற வானவர் ஹஸ்ஸான் அவர்களுக்கு உதவியாக இருப்பார் என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
நல்ல கவிதைகள், இணை வைப்பை எதிர்க்கும் வகையில் உள்ள கவிதைகள் அனுமதிக்கப் பட்டதுதான் என்பது இதிலிருந்து தெளிவாக விளங்குகிறது.
ஷரீத் பின் சுவைத் அஸ்ஸகஃபீ (ரலி) அவர்கள் கூறினார்கள் :
ஒரு நாள் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களது வாகனத்தில்) அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள், “உமய்யா பின் அபிஸ் ஸல்த்தின் கவிதைகளில் ஏதேனும் உமக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள்.
நான் “ஆம் (தெரியும்)” என்றேன். “பாடு” என்றார்கள். உடனே நான் ஒரு பாடலைப் பாடினேன். “இன்னும் பாடு” என்றார்கள். பிறகு இன்னொரு பாடலைப் பாடினேன். “இன்னும் பாடு” என்றார்கள். இவ்வாறே அல்லாஹ்வின் தூதருக்காக நூறு பாடல்களைப் பாடிக் காட்டினேன்.
நூல்: முஸ்லிம் – 4540
உமய்யா பின் அபிஸ் ஸல்த்தின் கவிதைகள் இஸ்லாமியக் கருத்துக்கு உட்பட்டவையாக இருந்த காரணத்தினால் தான் நபியவர்கள் அவற்றைப் பாடச் சொன்னார்கள். அவருடைய கவிதைகளில் 100 கவிதைகளை ஒரே நேரத்தில் ஷரீத் பின் சுவைத் அஸ்ஸகஃபீ (ரலி) அவர்கள் பாடிக்காட்டியிருக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
(கவிஞர்) லபீத் அவர்கள் சொன்ன “அறிக! அல்லாஹ்வைத் தவிர உள்ள பொருள்கள் அனைத்துமே அழியக் கூடியவையே” என்னும் சொல் தான், கவிஞர் சொன்ன சொற்களிலேயே மிக உண்மையான சொல்லாகும். (கவிஞர்) உமய்யா பின் அபிஸ் ஸல்த் (தன் கவிதையின் கருத்துகளால்) இஸ்லாத்தை ஏற்கும் அளவிற்கு வந்து விட்டார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி – 3841)
சிறந்த கருத்துக்களை உடைய கவிதைகளை இஸ்லாம் தடுக்கவில்லை. இணை வைப்பிற்கு எதிரான ஏகத்துவக் கருத்துக்களைத் தாங்கிய கவிதைகளை இஸ்லாம் வரவேற்கிறது என்பதற்கு மேற்கண்ட ஹதீஸ்கள் சான்றாக உள்ளன.
ஏகத்துவம்