பெண்களைத் தொட்டால் உளூ நீங்குமா?

ஆண்கள் பெண்களைத் தொட்டாலோ, அல்லது பெண்கள் ஆண்களைத் தொட்டாலோ அவர்களின் உளூ நீங்கி விடுமா என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது.

திருக்குர்ஆனின் இரண்டு வசனங்களை எவ்வாறு புரிந்து கொள்வது என்பதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு தான் இதற்கு அடிப்படையாக அமைந்துள்ளது.

நம்பிக்கை கொண்டோரே! போதையாக இருக்கும் போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்! குளிப்புக் கடமையாக இருக்கும் போது குளிக்கும் வரை (தொழுகைக்காக பள்ளிவாசலுக்குச் செல்லாதீர்கள்! பள்ளிவாசல் வழியாக) பாதையைக் கடந்து செல்வோராகவே தவிர. நீங்கள் நோயாளிகளாகவோ,பயணிகளாகவோ இருந்தால் அல்லது உங்களில் ஒருவர் கழிவறையிலிருந்து வந்தால் அல்லது பெண்களை தீண்டினால் தண்ணீரைப் பெற்றுக் கொள்ளாத போது தூய்மையான மண்ணைத் தொட்டு உங்கள் முகங்களிலும்,கைகளிலும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் பிழைகளைப் பொறுப்பவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கிறான்.

அல்குர்ஆன் 4:43

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காகத் தயாராகும் போது உங்கள் முகங்களையும், மூட்டுக்கள் வரை உங்கள் கைகளையும், கரண்டை வரை உங்கள் கால்களையும் கழுவிக் கொள்ளுங்கள்! உங்கள் தலைகளை (ஈரக்கையால்) தடவிக் கொள்ளுங்கள்! குளிப்புக் கடமையானோராக நீங்கள் இருந்தால் (குளித்து) தூய்மையாகிக் கொள்ளுங்கள்! நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால், அல்லது உங்களில் ஒருவர் கழிப்பறையிலிருந்து வந்தால், அல்லது பெண்களைத் தீண்டினால் தண்ணீர் கிடைக்காத போது தூய்மையான மண்ணைத் தொட்டு அதில் உங்கள் முகங்களையும், கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை. மாறாக நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களைத் தூய்மைப்படுத்தவும்,தனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தவுமே விரும்புகிறான்.

அல்குர்ஆன் 5:6

இவ்விரு வசனங்களிலும் பெண்களைத் தீண்டினால் உளூ நீங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

தீண்டுதல் என்ற சொல்லின் நேரடிப் பொருள் தொடுதல் என்பது தான். எனவே பெண்களைத் தொட்டால் உளூ நீங்கி விடும் என்று ஒரு சாரார் கூறுகின்றனர்.

தீண்டுதல் என்பதன் பொருள் தொடுவது தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆயினும் தீண்டுதல் என்ற சொல்லைப் பெண்களுடன் இணைத்துக் கூறும் போது சில நேரங்களில் தொடுதல் என்றும் பொருள் கொள்ள முடியும். சில நேரங்களில் உடலுறவில் ஈடுபடுதல் என்றும் பொருள் கொள்ள முடியும்.

இந்த வசனங்களில், ‘பெண்களைத் தீண்டினால்‘ என்ற சொல்லுக்கு பெண்களுடன் உடலுறவு கொண்டால் என்றே பொருள் கொள்ள வேண்டும் என்று மற்றும் சிலர் வாதிடுகின்றனர்.

இரண்டாவது சாராரின் கருத்தை வலுப்படுத்தும் வேறு சான்றுகள் இல்லாவிட்டால் முதல் சாராரின் கூற்றையே நாம் தேர்வு செய்தாக வேண்டும். ஏனெனில் அவர்கள் தான் நேரடிப் பொருளின் அடிப்படையில் தங்கள் வாதத்தை எடுத்து வைக்கின்றனர்.

இரண்டாவது சாராரின் கருத்தை வலுப்படுத்தும் புறச்சான்றுகள் பல உள்ளதால் பெண்களைத் தீண்டினால்’ என்பதற்கு பெண்களுடன் உடலுறவு கொண்டால்’ என்று இவ்விரு வசனங்களுக்கும் பொருள் கொள்வது தான் பொருத்தமானது.

‘நான் நபி (ஸல்) அவர்களுக்கும், கிப்லாவுக்கும் குறுக்கே படுத்துக் கொள்வேன். அவர்கள் ஸஜ்தாவுக்குச் செல்லும் போது என் கால்களைக் குத்துவார்கள். நான் கால்களை மடக்கிக் கொள்வேன்‘ என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள்.

நூல்கள்: புகாரி 519, முஸ்லிம் 796

நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்யும் போது நீங்களாகவே கால்களை மடக்கிக் கொள்ளலாமே? அவர்கள் காலில் விரலால் குத்தும் வரை ஏன் காத்திருக்க வேண்டும் என்று எழும் கேள்விக்கும் – இக்கேள்வியை யாரும் கேட்காதிருந்தும் – ஆயிஷா (ரலி) விடையளித்துள்ளார்கள். ‘அந்தக் காலத்தில் எங்கள் வீடுகளில் விளக்குகள் கிடையாது‘ என்பது தான் அந்த விடை!

பார்க்க புகாரி: 382, 513

வீடு முழுவதும் இருட்டாக இருந்ததால் நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்யப் போவதை விரலால் குத்தினால் தான் அறிந்து கொள்ள முடியும் என்ற கருத்து இதனுள் அடங்கியிருக்கின்றது.

இந்த ஹதீஸைக் கவனத்தில் வைத்துக் கொண்டு மேற்கண்ட வசனங்களை நாம் ஆராய்வோம்.

பெண்களைத் தொட்டால் உளூ நீங்கும் என்பது அந்த வசனங்களின் பொருளாக இருந்தால் நபி (ஸல்) அவர்கள் தமது மனைவியின் கால்களைத் தொட்டிருக்க மாட்டார்கள். தொட்டவுடன் தொடர்ந்து தொழுதிருக்கவும் மாட்டார்கள்.

திருக்குர்ஆனின் ஒரு வசனத்திற்கு என்ன பொருள் கொள்வது என்பதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் நபி (ஸல்) அவர்களின் விளக்கம் தான் இதற்குத் தீர்வாக முடியும்.

தமது மனைவியின் மேல் தற்செயலாகக் கைகள் பட்டன என்று இந்த ஹதீஸ் கூறவில்லை. ‘கால்களை மடக்கிக் கொள்’ என்ற செய்தியைத் தெரிவிப்பதற்காக வேண்டுமென்றே அவர்கள் தமது மனைவியைத் தொட்டிருக்கின்றார்கள் என்பது தெரிகின்றது. எனவே மேற்கண்ட வசனத்தில் பெண்களைத் தீண்டினால்’ என்பதற்கு, பெண்களைத் தொட்டால்’என்று பொருள் கொள்வது பொருத்தமாகாது.

இந்த ஹதீஸைப் பார்த்த பிறகும் சிலர் புதுமையான விளக்கத்தைக் கூறி தங்களின் கருத்தை நியாயப்படுத்த முனைகின்றனர்.

ஆயிஷா (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் நேரடியாகத் தொட்டார்கள் என்று இதற்கு அர்த்தம் இல்லை. அவர்கள் மீது ஆடை இருந்திருக்கும்; அந்த ஆடையின் மேல் நபி (ஸல்) அவர்கள் குத்தியிருக்கலாம் அல்லவா? என்பது இவர்கள் தரும் புதுமையான விளக்கம்.

யாரும் கணவருடன் படுத்திருக்கும் போது முழுமையாக உடலை மறைத்துக் கொள்வதில்லை. மேலும் கால்களையும் மூடிக் கொண்டு படுப்பதில்லை. அப்படியே படுத்திருந்தாலும் தூக்கத்தில் ஆடைகள் விலகியிருப்பதற்கு வாய்ப்பு இருக்கின்றது. மேலும் அங்கே வெளிச்சமாக இருந்திருந்தால் ஆடையால் மூடப்பட்ட இடத்தைப் பார்த்து விரலால் குத்தினார்கள் என்று கருத முடியும். விளக்குகள் இல்லாமல் இருட்டாக இருந்ததால் காலில் ஆடை கிடக்கின்றதா?இல்லையா? என்று தேடிப் பார்த்து தமது விரலால் குத்தவில்லை என்பது தெளிவாகின்றது எனவே பெண்களைத் தொட்டால் உளூ முறியாது என்பதை அறியலாம்.

ஏகத்துவம்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *