வின்வெளிப் பயணத்தில் கிப்லாவை எப்படி நோக்குவது?
கிப்லாவை முன்னோக்குவது தொழுகையின் முக்கியமான நிபந்தனைகளில் ஒன்று என்றாலும் அதில் விதிவிலக்குகளும் உள்ளன.
நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் முகங்களை மஸ்ஜிதுல் ஹரம் (கஃபா) நோக்கித் திருப்புங்கள்.
திருக்குர்ஆன் 2:144
என்று குறிப்பிடும் இறைவன்
நீங்கள் எங்கே திரும்பினாலும் அங்கேயும் அல்லாஹ்வின் திருமுகம் உண்டு
திருக்குர்ஆன் 2:115
எனவும் கூறுகிறான்.
யாவற்றையும் அறிந்த இறைவனுக்கு, கிப்லாவை நோக்க இயலாத சந்தர்ப்பங்களும் ஏற்படும் என்பது தெரியும். இது போன்ற சந்தர்ப்பங்களைக் கருத்தில் கொண்டே எங்கே திரும்பினாலும் அங்கே அவனது திருமுகம் உண்டு என்ற வசனம் அருளப்பட்டுள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவை நோக்கி வரும் போது வாகனத்தின் மீதமர்ந்து அது எந்தப் பக்கம் செல்கிறதோ அந்தத் திசையில் (அதாவது கஃபாவுக்கு எதிர்த் திசையில்) தொழுதார்கள். அப்போது மேற்கண்ட 2:116 வசனம் இறங்கியது என்று இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்.
நூல் : முஸ்லிம் 3453
இந்த ஹதீஸ் அஹ்மத், திர்மிதீ ஆகிய நூற்களிலும் இடம் பெற்றுள்ளது.
எதிரிகளின் அச்சம் மிகவும் கடுமையாக இருந்தால் நின்று கொண்டோ, நடந்து கொண்டோ வாகனத்தின் மீதோ, கிப்லாவை நோக்கியோ, அதை முன்னோக்காமலோ தொழலாம் என்று இப்னு உமர் (ரலி) கூறியதாக ராபிவு அவர்கள் அறிவித்து விட்டு இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழியாகவே இப்னு உமர் (ரலி) அறிவித்ததாக நான் கருதுகிறேன் எனவும் குறிப்பிட்டார்கள்.
இந்தச் செய்தி புகாரியில் (4535) இடம் பெற்றுள்ளது.
எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி இறைவன் நிர்பந்தப்படுத்துவதில்லை.
அல்குர்ஆன் 2:286
என்று 2:286 வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.
6:152, 6:42, 23:62, 65:7, 2:233, 4:84 வசனங்களையும் பார்க்க.
எனவே விண்வெளிப் பயணத்திலோ, அல்லது வேறு சந்தர்ப்பங்களிலோ கிப்லாவை முன்னோக்க இயலாவிட்டால் எந்தத் திசையை நோக்கியும் தொழலாம்.
ஏகத்துவம்