கணவன் மனைவி ஜமாஅத்தாக தொழலாமா❓
ஃபர்ளான தொழுகையை கணவன் மனைவி இருவரும் சேர்ந்து தொழலாமா?
தொழலாம் என்றால் அவர்கள் எவ்வாறு நிற்க வேண்டும்?
கடமையான தொழுகையை ஆண்கள் பள்ளியில் நிறைவேற்றுவது அவசியம். பள்ளியில் தொழாமல் வீட்டில் தொழுவதை அனுமதிக்கும் காரணங்கள் இருக்கும் போது மட்டும் ஆண்கள் வீடுகளில் தொழுது கொள்ளலாம்.
கணவன் மனைவி இருவரும் சேர்ந்து கடமையான தொழுகையைக் கூட்டாகத் தொழலாம். ஆனால் மனைவி கணவனுடன் சேர்ந்து நிற்காமல் கணவனுக்குப் பின்னால் நின்று தொழ வேண்டும்.
மனைவியானாலும், தாயானாலும் அவர்கள் தொழுகையில் ஆண்களுக்கு அருகில் நிற்கக்கூடாது. ஆண்களுக்குப் பின்னால் தனி அணியில் நிற்க வேண்டும். பின்வரும் செய்திகளிலிருந்து இதை அறியலாம்.
தனது மகன் உமைர் (ரலி) இறந்த போது அவரைக் காண வருமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அபூதல்ஹா (ரலி) அழைத்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), அவரைக் காண வந்த போது அவர்களுடைய வீட்டிலேயே அவருக்குத் தொழுவித்தார்கள். அப்போது அல்லாஹ்வின் துதர் (ஸல்) அவர்கள் முன்னாலும், அபூதல்ஹா (ரலி) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின்னாலும் நின்றார்கள். அபூதல்ஹா (ரலி)க்குப் பின்னால் அவர்களது மனைவி உம்மு சுலைம் (ரலி) (வரிசையாக ) நின்று இருந்தார்கள். இவர்களுடன் வேறு யாரும் இல்லை.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அபிதல்ஹா
நூல்: ஹாகிம் 1350
அபூதல்ஹா (ரலி) அவர்கள் உம்மு சுலைம் (ரலி) அவர்களின் கணவராக இருந்தாலும் தொழுகையில் இருவரும் அருகருகே நிற்கவில்லை. மாறாக தொழுகையில் ஆண்களுக்குப் பின்னால் பெண்கள் நிற்க வேண்டும் என்ற பொதுவான ஒழுங்கு முறையைத் தான் கடைபிடித்துள்ளார்கள்.
தாயும், மகனும் சேர்ந்து தொழும் போதும் இந்த முறைப்படித் தான் தொழுகையில் நிற்க வேண்டும்.
அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
என் (தாய்வழிப்) பாட்டி முலைக்கா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காக உணவு சமைத்து (விருந்துண்ண) அவர்களை அழைத்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வந்து) அதில் சிறிதளவு சாப்பிட்டுவிட்டுப்
பின்னர், “எழுங்கள்! உங்களுக்காக நான் தொழுவிக்கிறேன்” என்று கூறினார்கள். நான் (தொழுவதற்காக) எங்களுக்குரிய ஒரு பாயை நோக்கி எழுந்தேன்; அது நீண்ட நாட்கள் விரித்ததனால் கருப்படித்து இருந்தது. ஆகவே, அதில் நான் தண்ணீரைத் தெளித்தேன்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்தப் பாயின் மீது தொழுகைக்காக) நின்றார்கள். உடனே நானும் அநாதைச் சிறுவரும் அவர்களுக்குப் பின்னால் அணிவகுத்து நின்றோம். அந்த மூதாட்டி எங்களுக்குப் பின்னால் (தனியாக) நின்று கொண்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இமாமாக நின்று உபரியான) இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டு (தமது இல்லம் நோக்கித்) திரும்பிச் சென்றார்கள்.
நூல் : புகாரி 380
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
எங்களது வீட்டில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களைப் பின்பற்றி) நானும் ஓர் அநாதைச் சிறுவரும் தொழுதோம். என் தாயார் உம்மு சுலைம் (ரலி)- (எங்கள் வரிசையில் சேராமல்) எங்களுக்குப் பின்னால் (நின்று தொழுது கொண்டு) இருந்தார்கள்.
நூல் : புகாரி 727
ஏகத்துவம்