பஜர் ஜமாஅத் நடக்கும் பொழுது சுன்னத் தொழுதுவிட்டுதான் ஜமாஅத்தில் கலந்து கொள்ள வேண்டுமா❓
மத்ஹபைச் பின்பற்றக் கூடிய சகோதரர்கள் ஃபஜ்ரு ஜமாஅத் தொழுகை நடந்து கொண்டிருக்கும்போது பள்ளிக்கு வந்தால் முதலில் சுன்னத் தொழுதுவிட்டு பிறகு ஜமாஅத் தொழுகையில் சேர்கின்றார்கள்.
இது பற்றிக் கேட்டதற்கு இந்த ஹதீஸைக் கூறுகின்றார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஃபஜ்ரு தொழுகை நடத்திக் கொண்டிருக்கும் போது இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் பள்ளிக்கு வருகின்றார்கள். ஒரு ஓரமாக நின்று சுன்னத்தைத் தொழுது விட்டு பிறகு ஜமாஅத் தொழுகையில் கலந்து கொள்கின்றார்கள் என்ற செய்தி தஹாவீயின் ஷரஹ் மஆனில் ஆஸார் என்ற நூலில் இடம்பெற்றுள்ளதாகக் கூறினார்கள்.
இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானதா?
சுப்ஹ் தொழுகைக்காக மக்கள் வரிசையில் நிற்கும் போது அபூதர்தா (ரலி) அவர்கள் பள்ளிக்குள் வந்தார்கள். பள்ளியின் ஓரத்தில் இரண்டு ரக்அத் தொழுதார்கள். அதன் பின் மக்களோடு சேர்ந்து அந்தத் தொழுகையில் கலந்து கொண்டார்கள் என்று ஷரஹ் மஆனில் ஆஸார் என்ற நூலில் கூறப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, “இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களும் இவ்வாறு செய்தார்கள்’ என்று கூறப்பட்டுள்ளது. இது தான் நீங்கள் குறிப்பிடும் செய்தியாகும். இந்தச் செய்தியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தியதாகவோ, அல்லது நபித்தோழரின் செயலை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கீகரித்ததாகவோ கூறப்படவில்லை.
மேலும் இந்த அறிவிப்பில் இடம் பெற்றுள்ள அபூபிஷ்ர் அர்ரிக்கா என்பவரைப் பற்றிய குறிப்பு எதுவும் இல்லை. எனவே இந்தச் செய்தியை ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது. ஒருவேளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இந்தச் சம்பவம் நடந்ததாக வைத்துக் கொண்டாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது அங்கீகாரத்துடன் நடந்தது என்று கூற முடியாது.
ஏனெனில் இகாமத் சொல்லப்பட்ட பின் சுன்னத் தொழுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடைசெய்துள்ளார்கள். தடை செய்யப்படுவதற்கு முன்னர் இது நடைபெற்றிருந்தால் அதை நாம் ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை. தடை செய்யப்பட்ட பின்னர் இந்தச் சம்பவம் நடைபெற்றிருக்க வாய்ப்பில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்ததை நபித்தோழர்கள் செய்திருக்க மாட்டார்கள்.*
தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டால் அந்தக் கடமையான தொழுகை தவிர வேறு எதனையும் தொழலாகாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல்கள் : முஸ்லிம் 1161, திர்மிதீ 386
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்ததாக ஆதாரப்பூர்வமான ஹதீஸ் இருக்கும் போது, அதைவிட்டு விட்டு நபி (ஸல்) அவர்களின் அங்கீகாரம் இல்லாத ஆதாரமற்ற செய்திகளைக் காட்டி மத்ஹபுகளை நியாயப்படுத்த முனையக் கூடாது.
الله اعلم
Onlinetntj