குர்பான் பிராணிகள் எத்தனை கொடுக்க வேண்டும்?

சிலர் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு ஆடு கொடுக்க வேண்டும் என்றும் சிலர் மூன்று நபருக்கு ஒரு ஆடு கொடுக்க வேண்டும் எனவும் மற்றும் பலர் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு ஆடு கொடுத்தால் போதும் என்றும் கூறுகின்றனர்.

இவற்றில் ஒரு ஆடு ஒரு குடும்பத்திற்கு போதுமானது என்று கூறுவோரின் கருத்தே சரியான கருத்து. ஏனெனில் நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் சஹாபாக்கள் தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் சேர்த்து ஒரு ஆட்டை மட்டும் குர்பானியாக கொடுத்துள்ளார்கள் என பின்வரும் செய்தி கூறுகிறது.

நபி(ஸல்) அவர்கள் காலத்தில் குர்பானி கொடுப்பது எவ்வாறு அமைந்திருந்தது என்று அபூ அய்யூப்(ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள், ஒருவர் தமக்காகவும், தம் குடும்பத்தினருக்காகவும் ஒரு ஆட்டையே குர்பானி கொடுப்பார். அவர்களும் உண்பார்கள். பிறருக்கும் உண்ணக் கொடுப்பார்கள்.

அறிவிப்பவர் : அதா இப்னு யஸார்.

நூற்கள்: திர்மிதீ(1425), இப்னுமாஜா(3147)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கறுப்பில் நடக்கின்ற கறுப்பில் படுக்கின்ற கறுப்பில் பார்க்கின்ற (கால்கள் வயிறு கண் ஆகியப் பகுதிகள் கறுப்பு நிறத்தில் அமைந்த) கொம்புள்ள செம்மறி ஆட்டுக்கெடா ஒன்றைக் கொண்டுவருமாறு உத்தரவிட்டார்கள்.

அவ்வாறு அது குர்பானிக்காக கொண்டுவரப்பட்டபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்) ஆயிஷாவே அந்தக் கத்தியை எடு என்றார்கள். பிறகு அதை ஒரு கல்லில் நன்றாகத் தீட்டு என்றார்கள்.அவ்வாறே நான் செய்தேன்.

பிறகு அந்தக் கத்தியை வாங்கி அந்தச் செம்மறியாட்டைப் பிடித்து சரித்துப் படுக்கவைத்து அறுத்தார்கள். (அறுப்பதற்கு முன்) பிஸ்மில்லாஹ் அல்லாஹும்ம தகப்பல்மின் முஹம்மதின் வஆலி முஹம்மதின் வமின் உம்மதி முஹம்மதின் (அல்லாஹ்வின் பெயரால் இறைவா முஹம்மதிடமிருந்தும் முஹம்மதின் குடும்பத்தாரிடமிருந்தும் முஹம்மதின் சமுதாயத்தாரிடமிருந்தும் இதை ஏற்றுக்கொள்வாயாக என்று கூறி அதை அறுத்தார்கள்

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி).

நூல் : முஸ்லிம் (3637)

 

இதுமட்டுமல்லாமல் குர்பானிக் கொடுப்பதை நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தும் போது ஒவ்வொருவருக்கும் ஒரு ஆடு கொடுக்க வேண்டும் என்று கூறவில்லை. மாறாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு ஆடு போதுமானது என்று தெளிவுபடுத்திவிட்டார்கள்.

நான் அரஃபா நாளில் நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் (மக்களிடம்) ஒவ்வொரு பெருநாளிலும் ஒவ்வொரு ரஜப் மாதத்திலும் ஒரு ஆட்டை அறுப்பது ஒவ்வொரு வீட்டின் மீதும் கடமை என்று கூறிக்கொண்டிருந்தார்கள்.

 அறிவிப்பாளர் : ஹபீப் பின் மிஹ்னஃப்

நூல் : அஹ்மத் (19804).

 

பெருமையை நாடாமல் ஏழைகளின் தேவையைக் கருதி எத்தனை பிராணி வேண்டுமானாலும் கொடுக்கலாம். ஆனால் மாமிசத்தை வீண்விரையம் செய்யக்கூடாது.

நபி(ஸல்) அவர்கள் கருப்பும், வெள்ளையும் கலந்த கொம்புள்ள இரண்டு ஆடுகளை குர்பானி கொடுத்தார்கள்.

அறிவிப்பவர் : அனஸ்(ரலி).

நூற்கள் : புகாரி(5565), முஸ்லிம் (3635)

 

நபி(ஸல்) அவர்கள் (ஹஜ்ஜில் அவர்களுடைய 100 ஒட்டகத்தில்) 63 ஒட்டகைகளை தன் கரத்தால் குர்பானி கொடுத்தார்கள். மீதத்தை அலீ (ரலி) அவர்களிடம் கொடுத்து (அறுக்கும் படி கூறினார்கள்). அலீ (ரலி) அவர்கள் மீதத்தை அறுத்தார்கள். அவற்றில் ஒவ்வொரு ஒட்டகத்திலும் சில துண்டுகளை (எடுத்து சமைக்கும் படி) கட்டளையிட்டார்கள். அவை ஒரு சட்டியில் வைத்து சமைக்கப்பட்டது. பின்பு அவர்கள் இருவரும் அதன் இறைச்சியை உண்டு அதன் குழம்பைப் பருகினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி).

நூல் : முஸ்லிம் (2137)

 

நன்மையைக் கருதி அதிகமாக குர்பானி கொடுப்பது சிறந்தது என்றும் தனக்கு முடியாத பட்சத்தில் மற்றவரிடம் கொடுத்து குர்பானிப் பிராணியை அறுக்கச் சொல்லலாம் என்றும் இந்த ஹதீஸிலிருந்து விளங்கிக்கொள்ள முடியும்.

நீண்ட இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் அறுக்கப்பட்ட பிராணியின் மாமிசத்துண்டுகளைச் சமைத்து சாப்பிட்டதாக உள்ளது. குர்பானி கொடுப்பவர் தன்னுடைய குர்பானியின் மாமிசத்தை உண்பது நபிவழி என்பதற்கு இது சிறந்த சான்றாக உள்ளது.

ஹஜ்ஜுக்குச் சென்று துல்ஹஜ்ஜு பிறை பத்தாம் நாள் மினாவில் ஹாஜிகள் குர்பானி கொடுப்பார்கள். இவர்கள் உள்ளூரில் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. காரணம் நபி(ஸல்) அவர்களோ, மற்ற தோழர்களோ அவ்வாறு செய்யவில்லை. எனவே ஹாஜிகள் மினாவில் கொடுத்த குர்பானியே போதுமானதாகும்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

You missed