ஹஜ் செய்தால் முன்னர் செய்த பெரும்பாவங்கள் மன்னிக்கப்படுமா?

மனிதனுக்கு செய்தவையன்றி, மற்றவை மன்னிக்கப்படும்.

இறைவனுக்காக மனத்தூய்மையான முறையில் ஒருவர் ஹஜ்ஜை நிறைவேற்றினால் நிச்சயமாக அவர் முன்னர் செய்த பெரும்பாவங்கள் மன்னிக்கப்படும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தாம்பத்திய உறவு மற்றும் பாவச் செயல்களில் ஈடுபடாமல் ஒருவர் அல்லாஹ்வுக்காகவே ஹஜ் செய்தால் அவர் அவருடைய தாய் அவரைப் பெற்றெடுத்த நாளில் இருந்ததைப் போன்று (பாவமறியாப் பாலகராகத்) திரும்புவார்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி (1521)

அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : அல்லாஹ் என் உள்ளத்தில் இஸ்லாத்தை ஊட்டினான். அப்போது நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று ”உங்கள் வலக் கரத்தை நீட்டுங்கள். நான் உங்களிடம் உறுதிப் பிரமாணம் (பைஅத்) அளிக்கிறேன்” என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் தமது வலக் கரத்தை நீட்டினார்கள். உடனே நான் எனது கையை இழுத்துக்கொண்டேன்.

நபி (ஸல்) அவர்கள், ”அம்ரே! உமக்கு என்ன ஆயிற்று?” என்று கேட்டார்கள். நான், ”சில நிபந்தனைகளை விதிக்க விரும்புகிறேன்” என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், ”என்ன நிபந்தனை விதிக்கப்போகிறீர்?” என்று கேட்டார்கள். ”என் (முந்தைய) பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும்” என்று கூறினேன்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், ”முந்தைய பாவங்களை இஸ்லாம் அழித்துவிடும்; ஹிஜ்ரத்தும் முந்தைய பாவங்களை அழித்துவிடும்; ஹஜ்ஜும் முந்தைய பாவங்களை அழித்துவிடும் என்று உமக்குத் தெரியாதா?” என்று கேட்டார்கள். (பிறகு நான் இஸ்லாத்தைத் தழுவினேன்.)
நூல் : முஸ்லிம் (192)

மேற்கண்ட நபிமொழிகள் ஹஜ் முந்தைய பாவங்களை அழித்து விடும் என்பதற்கு சான்றாகத் திகழ்கின்றன. ஆனால் இவற்றில் மனிதன் மனிதனுக்குச் செய்கின்ற பாவங்கள் அடங்காது. ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு அநீதி இழைத்தால் பாதிக்கப்பட்ட மனிதன் மன்னித்தாலே தவிர இறைவன் மன்னிக்க மாட்டான். பாதிக்கப்பட்வன் மன்னிக்கா விட்டால் மறுமையில் இவனுடைய நன்மைகளை பாதிக்கப்பட்டவனுக்கு வழங்கி அல்லது பாதிக்கப்பட்டவனின் தீமைகளை அநீதி இழைத்தவன் மீது சுமத்தி அல்லாஹ் நீதி வழங்குவான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர், தன் சகோதரனுக்கு அவனது மானத்திலோ, வேறு (பணம், சொத்து போன்ற) விஷயத்திலோ இழைத்த அநீதி (ஏதும் பரிகாரம் காணப்படாமல்) இருக்குமாயின், அவர் அவனிடமிருந்து அதற்கு இன்றே மன்னிப்புப் பெற்றுக் கொள்ளட்டும். தீனாரோ, திர்ஹமோ (பொற்காசுகளோ வெள்ளிக் காசுகளோ) பயன் தரும் வாய்ப்பில்லாத நிலை (ஏற்படும் மறுமை நாள்) வருவதற்கு முன்னால் (மன்னிப்புப் பெற்றுக் கொள்ளட்டும்.)

(ஏனெனில், மறுமை நாளில்) அவரிடம் நற்செயல் ஏதும் இருக்குமாயின் அவனது அநீதியின் அளவுக்கு அவரிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு (அநீதிக்குள்ளானவரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு) விடும். அநீதியிழைத்தவரிடம் நற்செயல்கள் எதுவும் இல்லையென்றால் அவரது தோழரின் (அநீதிக்குள்ளானவரின்) தீய செயல்கள் (அவர் கணக்கிலிருந்து) எடுக்கப்பட்டு அநீதியிழைத்தவரின் மீது சுமத்தப்பட்டு விடும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி ( 2449)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (அறப்போரில் கொல்லப்பட்ட) உயிர்த் தியாகியின் அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்பட்டுவிடுகின்றன; கடனைத் தவிர.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி ) நூல் : முஸ்லிம் (3832)

எனவே ஹஜ் செய்வதின் மூலம் பெரும் பாவங்கள் மன்னிக்கப்டும் என்பதில் மனிதன் மனிதனுக்குச் செய்த அநீதிகள் அடங்காது என்பதுதான் சரியானதாகும். அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed