ஸகாத் வருமானத்துக்கா? எஞ்சியதற்கா?

வருமானத்தில் 2.5 ஜகாத் கொடுக்க வேண்டுமா? அல்லது செலவு போக மீதமுள்ளதில் 2.5 கொடுக்க வேண்டுமா?

திருக்குர்ஆன் 9:103, 51:19, 70:24 ஆகிய வசனங்களில் சொத்துக்களுக்கு ஜகாத் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தேவைக்கு மேல் மீதமுள்ளதற்குத் தான் ஜகாத் என்று குர்ஆனிலும், ஹதீஸிலும் கூறப்படவில்லை.

செலவு போக மீதமுள்ளதற்குத் தான் ஜகாத் என்ற கருத்தைச் சில அறிஞர்கள் கூறினாலும் அது ஏற்கத்தக்கதல்ல.

தேவைக்கு மேல் மீதமானவை என்பது குழப்பமான கருத்துடையதாகும். தேவைக்கு மேல் என்றால் ஒரு நாள் தேவையா? ஒரு மாதத் தேவையா? ஒரு வருடத் தேவையா? என்பது பற்றி அவரவர் விளக்கம் கூறிக் கொண்டு ஜகாத் கொடுக்காமல் இருக்கும் தந்திரத்தை இதன் மூலம் கையாள்வார்கள்.

ஒருவன் ஒரு கோடி ரூபாய்க்கு ஒரு வீட்டை வாங்கிக் கொண்டு இது என் தேவைக்கு உரியது என்று கூறலாம். இன்னும் தனது தோட்டம், துரவு, கார், பங்களா ஆகிய அனைத்துமே தனது தேவைக்கு உரியது என்று வாதிட இந்தக் கருத்து வழி வகுக்கும்.

கிலோ கணக்கில் தங்க ஆபரணத்தை அணிந்து கொண்டு கணவனை மகிழ்விக்கும் தேவைக்காக இதை வைத்துள்ளேன் என்று பெண்கள் கூறலாம். மொத்தத்தில் ஜகாத் என்பதே நடைமுறையில் இல்லாமல் போய் விடும்.

ஒருவருக்குச் சொந்தமான குதிரை, சொந்தமான அடிமை ஆகியவற்றுக்காக ஜகாத் இல்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

நூல் : புகாரி 1463, 1464

மார்ககத்தில் விதிவிலக்கு இருந்தால் இது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தி இருப்பார்கள்.

ஒருவருக்கு வரும் வருவாய், அவரது சொத்துக்கள், இருப்புக்கள் ஆகிய அனைத்துக்கும் ஜகாத் உண்டு.

இதில் ஏழைகள் அடங்கிவிடக் கூடாது என்பதற்காக ஒரு எல்லைக் கோட்டை இஸ்லாம் வகுத்துள்ளது. சுமார் 11 பவுன் தங்கம் அல்லது அதன் மதிப்புடைய ரொக்கம் ஒருவரிடம் எப்போதும் மிச்சமிருந்தால் அவர் செல்வந்தர் ஆவார். ஒருவரிடம் 40 ஆடுகள் அல்லது ஐந்து ஒட்டகங்கள் இருந்தால் அவர் செல்வந்தராவார் என்று இஸ்லாம் வரையரை செய்துள்ளது. இந்த வரையறை மூலம் ஏழைகள் ஜகாத் கொடுக்கும் நிலை ஏற்படாது.

ஒருவர் மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார். அவரிடம் வேறு எந்த இருப்பும் இல்லை. அவர் ஜகாத் கொடுக்க மாட்டார். சிறிது சிறிதாக மிச்சம் பிடித்து 11 பவுன் நகை அளவுக்கு அவரிடம் பணமோ பண்டபாத்திரங்களோ, இதர சொத்துக்களோ சேர்ந்து விட்டது என்றால் அந்த 11 பவுனுக்கும் அதன் பின் அவருக்கு வரும் ஒவ்வொரு ரூபாய்க்கும் ஜகாத் கொடுக்க வேண்டும்.

எப்போது 11 பவுனுக்கும் கீழ் கையிருப்பின் மதிப்பு குறைந்து விடுகிறதோ அப்போது ஜகாத் கடமை இல்லை.

ஒருவர் மாதம் மூவாயிரம் சம்பளம் வங்குகிறார். ஆனால் அவரிடம் ஏற்கனவே 20 பவுன் நகை உள்ளது என்றால் இவர் அந்த 20 பவுனுக்கும் ஜகாத் கொடுக்க வேண்டும். அந்த மூன்றாயிரம் ரூபாய்க்கும் ஜகாத் கொடுக்க வேண்டும்.

எபோதெல்லாம் அவருக்கு செல்வம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் ஜகாத் கடமையாகி விடும்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed