வட்டி என்ற வியாபாரத்தில் தான் உண்மை உள்ளது. மற்ற வியாபாரம் அனைத்திலும் பொய் உள்ளது. எனவே உண்மையான தொழிலான வட்டி எப்படி ஹராமாகும் என்று மாற்று மத நண்பர் ஒருவர் கேட்கிறார். இதற்குப் பதில் என்ன?

வட்டி என்பதை வியாபாரம் என்று கூறுவதே தவறு.

ஏனென்றால் வியாபாரம் என்பது லாபம், நஷ்டம் இரண்டும் கொண்டது. ஆனால் வட்டியில் நஷ்டம் என்பதே கிடையாது.

நமது தேவைக்குப் போக நம்மிடம் பணம் உள்ளது. தேவையுடைய ஒருவர் இதைக் கடனாகக் கேட்கிறார்.

இவருக்குக் கொடுத்து உதவுவது மனிதாபிமான அடிப்படையில் உள்ளதாகும். ஆனால் இந்த மனிதாபிமான உதவிக்கு எதிரானது தான் வட்டி.

ஆயிரம் ரூபாயை வட்டிக்குக் கடனாக வாங்கியவர்கள், ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக வட்டி செலுத்திய பின்னரும் அசல் தொகையான ஆயிரம் ரூபாய் கடனாகவே இருந்து கொண்டிருக்கும். இது எந்த வகையில் வியாபாரமாகும்?

இறைவன் நமக்கு வழங்கிய பொருளாதாரத்திலிருந்து, ஏழைகளுக்குத் தர்மம் வழங்குதல், கடனுதவி போன்ற நன்மையான காரியங்களைச் செய்வதை விட்டும் வட்டி என்ற பெரும் பாவம் நம்மைத் தடுத்து விடுகின்றது. இதனால் தான் வட்டி விஷயத்தில் இஸ்லாம் கடுமையான நிலையை மேற்கொள்கிறது.

வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். “வியாபாரம் வட்டியைப் போன்றதேஎன்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து தமக்கு அறிவுரை வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அல்லாஹ் வட்டியை அழிக்கிறான். தர்மங்களை வளர்க்கிறான். நன்றி கெட்ட எந்தப் பாவியையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.

அல்குர்ஆன் 2:275, 276

வட்டியில் பொய்யே கிடையாது என்பதும் ஏற்றுக் கொள்ள முடியாத வாதம். பொய், பித்தலாட்டம், ஏமாற்று வேலைகள் அனைத்தும் வட்டித் தொழிலில் தான் அதிகம் உள்ளது. வட்டிக்கு வாங்கியவர்களை ஏமாற்றி சொத்தை எழுதி வாங்குவது, வட்டிக்கு வட்டி, மீட்டர் வட்டி என்று போட்டு அடகு வைத்த பொருட்களைச் சுருட்டிக் கொள்வது போன்ற அநியாயங்கள் வட்டித் தொழிலில் வாடிக்கையாக நடைபெறுகின்றன.

நவீன வட்டித் தொழிலான கிரடிட் கார்டு வாங்கும் படித்த மக்கள் கூட எவ்வளவு வட்டி செலுத்த வேண்டும் என்பது தெரியாமலேயே கடனில் மூழ்கி, வங்கிகளின் அடியாட்களுடைய மிரட்டலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்கின்றனர்.

எனவே வட்டித் தொழில் உண்மையான தொழில் என்பது போலியான வாதமாகும்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed