சுன்னத்தான நோன்பு விரும்பியவர் நோற்கலாம். விரும்பியவர் விட்டுவிடலாம். இது நோன்பு நோற்பவரின் விருப்பத்தைப் பொறுத்ததாகும். கடமையான நோன்பு தவிர்க்க இயலாத சூழ்நிலைகளில் விடுபட்டுப் போனால் அந்தக் கடமையான நோன்பை மற்ற நாள்களில் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும். என்பது இறைகட்டளை. பார்க்க: அல்குர்ஆன் 2:184, 185)

அறியாமைக்கால மக்கள் (குறைஷியர்) ஆஷுரா (முஹர்ரம் பத்தாம்) நாளில் நோன்பு நோற்றுவந்தனர். ரமளான் (நோன்பு) கடமையானபோது நபி(ஸல்) அவர்கள், ‘(ஆஷுரா நோன்பை நோற்க) விரும்புகிறவர் அதை நோற்கலாம், (விட்டுவிட) விரும்புகிறவர் அதைவிட்டு விடலாம்’ என்று கூறினார்கள். (அன்னை ஆயிஷா (ரலி) மற்றும் பல நபித்தோழர்கள் வழியாக இவ்வறிப்புகள் புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன)

கடமையான வணக்கம் மற்றும் உபரியான வணக்கம். என இரண்டில் கடமையான வணக்கத்திற்கே முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும். ரமளான் மாதம் நோன்பை இஸ்லாம் கடமை என விதித்துள்ளதால், மனிதன் அநித்ய வாழ்க்கை உள்ளவனாக இருப்பதாலும், ரமளானில் விடுபட்ட கடமையான நோன்பை ரமளான் மாதம் முடிந்ததும் நிறைவேற்றிட வேண்டும். இதன் பின்னர் உபரியான நோன்பையும் நிறைவேற்றலாம்.

நபி (ஸல்) அவர்களும் கடமையான வணக்கத்திற்கு முன்னுரிமை வழங்கியுள்ளார்கள். அவற்றில் வரிசைப்படுத்தியுள்ள  நபிவழிச் செய்தி:

நாங்கள் நபி(ஸல்) அவர்களிடமிருந்து குர்ஆனையும் இந்த ஏட்டில் உள்ளதையும் தவிர வேறெதையும் எழுதி வைக்கவில்லை. நபி(ஸல்) அவர்கள் (இந்த ஏட்டில்), ‘மதீனா நகரம் ஆயிர் மலையிலிருந்து இன்ன இடம் வரை புனிதமானதாகும். எவன் இங்கு (மார்க்கத்தில்) புதிய (கருத்து அல்லது செயல்பாடு) ஒன்றைத் தோற்றுவிக்கிறானோ அவன் மீது அல்லாஹ்வின் சாபமும், வானவர்களின் சாபமும் மற்றும் மக்கள் அனைவரின் சாபமும் ஏற்படும். அவனிடமிருந்து கடமையான வணக்கம், உபரியான வணக்கம் எதுவுமே ஏற்றுக் கொள்ளப்படாது. முஸ்லிம்களில் எவர் அடைக்கலம் கொடுத்தாலும் அது ஒன்றேயாகும். (அது மற்ற முஸ்லிம்கள் தரும் அடைக்கலத்திற்குச் சமமானதாகக் கருதப்பட வேண்டியதேயாகும்.) அவர்களில் சாமானியர் கூட அடைக்கலம் தரலாம். ஒரு முஸ்லிம் கொடுத்த அடைக்கலத்தை எவன் முறிக்கிறானோ அவன் மீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்களுடைய சாபமும் மற்றும் மக்கள் அனைவரின் சாபமும் ஏற்படும். அவனிடமிருந்து அவன் செய்த கடமையான வணக்கம், உபரியான வணக்கம் எதுவுமே ஏற்றுக் கொள்ளப்படாது. விடுதலை செய்யப்பட்ட அடிமை ஒருவன் தன்(னை விடுதலை செய்த எஜமானர்களான தன்) காப்பாளர்களின் அனுமதியின்றிப் பிறரைத் தன் காப்பாளராக ஆக்கினால் அவன் மீதும் அல்லாஹ்வின் சாபமும், வானவர்களுடைய சாபமும், மற்றும் மக்கள் அனைவரின் சாபமும் ஏற்படும். அவன் செய்த கடமையான வணக்கம், உபரியான வணக்கம் எதுவுமே ஏற்றுக் கொள்ளப்படாது. அறிவிப்பவர் அலி (ரலி) (நூல் – புகாரி 3179)

சந்தர்ப்ப சூழ்நிலையால் ரமளான் மாதம் விடுபட்ட நோன்பை வரும் ஷஅபான் மாதம் வரை நோற்கலாம் என்பதற்கு அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் அறிவிப்பிலிருந்து விளக்கம் பெறமுடிகிறது. 

எனக்கு ரமளானில் சில நோன்புகள் விடுபட்டுவிடும். அவற்றை ஷஅபான் மாதத்தில் தவிர என்னால் நிறைவேற்ற முடியாது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பணிவிடையில் ஈடுபட்டதே இதற்குக் காரணம். அறிவிப்பவர் ஆயிஷா (ரலி) (நூல்கள் – புகாரி 1950, முஸ்லிம் 2106) 

ஷவ்வால் மாதம் ஆறு நோன்பு

”ரமளான் மாதம் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்றவர் காலமெல்லாம் நோன்பு நோற்றவரைப் போன்றவராவார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் அபூஅய்யூப் அன்ஸாரி (ரலி) நூல்கள் – முஸ்லிம் 2159, திர்மிதீ 690, அபூதாவூத், இப்னுமாஜா)

ரமளான் நோன்பை நிறைவேற்றிய பின்னர் தொடர்ந்து ஷவ்வால் மாதம் ஆறு நோன்பு நோற்பது சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது. கடமையான நோன்பை நிறைவேற்றிய பின்னரே உபரியான ஷவ்வால் மாதம் ஆறு நோன்பையும் நிறைவேற்றறிட வேண்டும் என விளங்குவதே பொருத்தமாகும்!

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed