பிற்காலத்தில் உண்டாக்கப்பட்ட கொண்டாட்டங்கள் கூடுமா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஹிஜ்ரத் பயணம், மிஃராஜ் பயணம், அவர்களின் பிறப்பு, மக்கா வெற்றி மற்றும் அவர்கள் சந்தித்த போர்கள் ஆகிய வரலாற்றுச் சம்பவங்களை நினைவு கூரும் விதமாகக் கொண்டாடுவது தவறல்ல என்று யூசுஃப் அல்கர்ளாவி என்பவர் கூறியதாகச் சொல்கிறார்கள். இது பற்றி உங்கள் கருத்து என்ன?

குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டைத் தவிர்த்து வேறு யாருடைய கூற்றையும் மார்க்க ஆதாரமாக எடுக்கக் கூடாது.

எல்லோரையும் போன்று அவரும் சாதாரண மனிதர். பொதுவாக எந்த அறிஞராக இருந்தாலும் அவர்களின் தீர்ப்புகளில் தவறுகள் இருக்கும். ஆனால் யூசுப் கர்ளாவி என்பவரை அது போன்ற நிலையில் வைத்துக் கூட பார்க்க முடியாது. இவரது தீர்ப்புக்களில் சரியான தீர்ப்புக்களை விட தவறான தீர்ப்புக்களே அதிகம். இறையச்சமில்லாத ஒருவன் தன்னிஷ்டப்படி அளிக்கும் தீர்ப்பு போலவே இவரது தீர்ப்புகள் அமைந்துள்ளன.

வட்டி போன்ற பெரும்பாவமான காரியங்களை தற்காலத்தில் செய்யலாம் என்று தவறான தீர்ப்பை வழங்கியுள்ளார்.

சமகாலத்தில் வாழும் பிரபலமானவர்களில் அறிவுத்திறனும் ஆராய்ச்சித் திறனும் அற்ற கூறுகெட்டவராக இவர் காட்சியளிக்கிறார்.

இஸ்லாத்தில் கொண்டாடி மகிழ்வதற்கு இரண்டு பெருநாட்களைத் தவிர வேறு எதுவுமில்லை என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்கள்.

மதீனாவாசிகள் அவர்களாக பெருநாட்களை உருவாக்கி கொண்டாடி வந்தனர். இதை விட்டுவிட்டு அல்லாஹ் கற்றுக்கொடுத்த நோன்புப் பெருநாள் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரண்டை மட்டுமே பெருநாளாக ஆக்கிக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.

அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதினாவிற்கு வந்தார்கள். (மதீனத்து) மக்களுக்கு இரண்டு நாட்கள் (பெருநாட்களாக) இருந்தன. அதில் அவர்கள் விளையாடுவார்கள். இந்த இரண்டு நாட்களும் என்ன? என்று நபிகள் நாயகம் (ஸல்) கேட்டார்கள். அறியாமைக் காலத்தில் நாங்கள் அந்த இரண்டு நாட்களிலும் விளையாடுவோம் என்று மக்கள் கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அல்லாஹ், அவ்விரண்டையும் விட சிறந்ததை அவ்விரண்டிற்கும் பதிலாக உங்களுக்குத் தந்திருக்கின்றான். அவை ஹஜ்ஜுப் பெருநாளும், நோன்புப் பெருநாளுமாகும்” என்று கூறினார்கள்.

நூல் : அபூதாவூத் 959

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஹிஜ்ரத் பயணம், மிஃராஜ் பயணம், அவர்களின் பிறப்பு, மக்கா வெற்றி, மற்றும் அவர்கள் சந்தித்த போர்கள் இது போன்ற முக்கியமான நிகழ்வுகள் நடந்த நாட்களைக் கொண்டாடலாம் என்றால் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இதை ஏன் சமுதாயத்துக்குக் கற்றுக் கொடுக்கவில்லை?

இஸ்லாமிய வரலாற்றில் சிறப்புமிக்க சம்பவங்கள் நிறைய இருக்கின்றன. அவற்றைப் படித்து படிப்பினை பெறுவது தான் அறிவாளியின் செயல். இதை விடுத்து கணக்கின்றி கொண்டாட்டங்களை அடுக்கிக்கொண்டு போது நரகத்தில் இழுத்துச் செல்லும் பித்அத்தாகும்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed