பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது பிறமத கலாச்சாரமில்லையா?

பிறந்த நாளின் ஆதி தோன்றல் எங்கிருந்து துவங்கியது, அதன் வரலாறு என்ன என்பது குறித்து விக்கிபீடியா முதற்கொண்டு பல்வேறு authentic இணையதளங்கள் என்ன சொல்கிறது என்பதை சம்மந்தப்பட்ட நபரும் அவரை ஆதரிக்கும் சகோதரர்களும் முதலில் புரட்டிப் பார்க்கட்டும்.

இன்று வேண்டுமானால் பிறந்தநாள் கொண்டாட்டம் என்பது வெறுமனே ஒரு நாடு சார்ந்த அல்லது மொழிவாரியான, நாகரீகம் சார்ந்த கலாச்சார நிகழ்வாக கருதப்படலாம்.

ஆனால் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் துவக்கம் என்பது மதஅடிப்படையிலானது !
5000 ஆண்டுகளுக்கு முந்தயது. எகிப்தை ஆண்ட ஃபிர்அவ்னின் பிறந்த நாளை தங்களுக்கான கடவுள் தோன்றி விட்டார் என நம்பி அந்த மக்கள் கொண்டாட துவங்கியது தான் இதன் ஆரம்பம்.

அதன் தொடர்ச்சியாக, Pagans எனப்படும் பலதெய்வ வழிபாடு செய்வோர் (polytheists) இதை தங்கள் மத நம்பிக்கையின் ஒரு பகுதியாகவே கொண்டாடினர்.

இன்னும் சொல்லப்போனால், துவக்க காலத்தில், இந்த பாகன்கள் பிறந்த நாளை தங்கள் கடவுள் நம்பிக்கையோடு பிணைந்து கொண்டாடியதன் எதிரொலியாக அன்றைய கிறித்தவர்கள் பிறந்த நாள் கொண்டாட்டத்தையே தவிர்த்து வந்தனர் என்கிறது வரலாறு. (அவர்களுக்கு அது பிறமத கலாச்சாரம் என்பதால் !)

தொடர்ந்து, கிரேக்க கலாச்சாரத்திலும் பிறந்த தினம் என்பது கடவுள் கோட்பாட்டோடு தொடர்புடையதாகவே நம்பப்பட்டு அனுஷ்டிக்கப்பட்டது.

பிறந்த நாள் கொண்டாட்டத்தின் துவக்கம் (origin of birthday celebration) என்பது இது தான்.

இவர்கள் என்ன தான் எனது மகிழ்ச்சி எனது உணர்வு, எனது தனிப்பட்ட சந்தோஷம் என பேசினாலும், Origin ஐ மாற்ற முடியாது..!

ஒரு விஷயத்திற்கான origin மத நம்பிக்கை தான் எனும் போது, அதை மத நம்பிக்கை என்று இல்லாமல் எனது மகிழ்ச்சி என்ற முறையில் நான் என்னளவில் கொண்டாடிக் கொள்ள மட்டும் எங்கிருந்து மார்க்கம் என்னை அனுமதிக்கும்??

இதற்கு தான் துவக்கத்திலேயே கேட்டோம் – அப்படின்னா உரூஸ், சந்தனக்கூடு தேரோட்டத்தை கூட என் மன மகிழ்ச்சிக்காக செய்யலாமா? என்று.

உடனே, அது மார்க்கம் என்றல்லவா செய்யப்படுகிறது.. என அதற்கு மட்டும் வியாக்கியானம் தரப்படுவது என்ன வகையில் முழுமையான விளக்கமாகும்?

தர்கா தேரோட்டத்தை மார்க்கமாகவும் செய்யக் கூடாது, அது போல.. அது மக்களால் மார்க்கமாக கருதப்பட்டு விட்டதால், அதை தனிப்பட்ட சந்தோஷம் என்கிற அடிப்படையிலும் தான் செய்யக் கூடாது. அப்படித்தானே?

இதே விளக்கம் தானே இங்கும் தரப்பட வேண்டும்?

பிறந்த நாளின் துவக்கப் புள்ளி கடவுள் கோட்பாடு தான் என்பதற்கு வரலாறு சான்று பகர்கிற போது, ஏன் இந்த தேவையற்ற சர்ச்சையை முஸ்லிம் சமுதாயத்தின் மத்தியில் கிளப்ப வேண்டும்??
இந்த சர்ச்சை எந்த வகையில் இந்த சமுதாயத்திற்கு நன்மை பயக்கும்???


இது பிறமத கலாச்சாரம் என்றால் பேண்ட் சட்டை அணிவது, கிறித்தவ நாள்காட்டியை பயன்படுத்துவது.. இவையும் பிறமத கலாச்சாரம் தானே?

இது அபத்தமான வாதம் !

பேண்ட் சட்டை அணிவது மத நம்பிக்கையா? அப்படித்தான் மேற்கத்தியர்கள் இத்தனை நூற்றாண்டுகளாக அணிந்தார்களா?

இவரே இதைப் பற்றி பேசும் போது இது ஆங்கிலேயர்களின் கலாச்சாரம் என்ற அளவில் தான் குறிப்பிட்டார்.
பிறமத கலாச்சாரம் என சொல்ல எத்தனித்து, ஆங்கிலேயர்களின் கலாச்சாரம் என்று தான் சொல்ல முடிந்ததே அல்லாமல், ஆங்கிலேயர்கள் சார்ந்திருக்கும் மதம் இங்கு எந்த வகையில் சம்மந்தப்படுகிறது????

பிறந்த நாளை எகிப்தியர்கள் தங்களின் கடவுள் நம்பிக்கையோடு பிணைந்ததாக பார்த்தார்கள்.
அது போல பேண்ட் சட்டை அணிவதை ஆங்கிலேயர்கள் தங்கள் கிறித்தவ மத நம்பிக்கையாக பார்த்தார்களா?

பிறந்த நாள் கொண்டாட்டம் தங்கள் கடவுள்ர்களை வழிபடும் முறைகளுல் ஒன்றாக தான் pagan களும் கிரேக்கியர்களும் பார்த்தார்கள்.

பேண்ட் கோட் சூட் அணிவதற்கு பைபிள் வசனம் ஏதும் மேற்கோள் காட்டப்படுகிறதா?

எது எதோடு முடிச்சு போடப்படுகிறது?

பேண்ட் சட்டை என்பது பிற நாட்டு கலாச்சாரம் என்று வேண்டுமானால் ஆகுமே தவிர பிற மத கலாச்சாரம் என்று எப்படி சொல்ல முடியும்?

அடுத்து ஜனவரி, பிப்ரவரி என கிறித்தவ மாதக்கணக்கை நாம் அனுஷ்டிப்பதை ஆதாரமாக காட்டுகிறார்.

நாம் மாதத்திற்கு 29 அல்லது 30 எனக் கொண்டு, இஸ்லாமிய மாத கணக்கின்படி தான் எல்லா அமல்களையும் செய்கிறோம்.
அதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது.
நமது நோன்பு, நமது ஹஜ் என அனைத்தையும் இஸ்லாமிய நாள்காட்டியின்படி தான் செயல்படுத்துகிறோம்.

இந்த ஜனவரி, பிப்ரவரி என்கிற Gregorian காலண்டர் முறை என்பது நம்மீது திணிக்கப்பட்ட ஒன்று.
அதற்கு தடை என்று நாம் சொன்னாலும், அதை விட்டு விலக இயலாத அளவிற்கு நம்மை சுற்றி நிகழும் அனைத்தும் இதனை மையப்படுத்தியே சுழல்கிறது.

நாம் விலக நினைத்தாலும் அது நம்மை விட்டு விலகாது. நாம் விரும்புகிறோமோ இல்லையோ, அப்படி தான் இந்த உலகம் தற்லோது கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

நம்மீது ஒன்று திணிக்கப்பட்டு, அதை விட்டு விலகினால் நம்மால் வாழ்வில் இயங்கவே முடியாது என்கிற ரீதியிலான ஒரு விஷயத்தை,
நாம் விரும்பி தேர்வு செய்யவோ விட்டு விடவோ முடிகின்ற ஒரு விஷயத்தோடு முடிச்சு போடுவது எந்த வகையில் நியாயம்???

பிறமத கலாச்சாரத்தை தவிர்க்க நபியவர்கள் தெளிவாக சொல்லி விட்ட பிறகு இயன்ற அளவு அதிலிருந்து விடுபட முயற்சிக்க வேண்டுமா
அல்லது இது மாதிரியான சால்ஜாப்புகளை சொல்லி,
தவிர்த்துக் கொள்ள முடிகின்ற விஷயங்களைக் கூட நியாயப்படுத்திக் கொண்டிருக்க வேண்டுமா ??

எது இறையச்சத்திற்கு நெருக்கமானது?
எது அல்லாஹ்வின் அன்பை பெறக்கூடியது?


நான் அனைவரையும் அழைத்து கொண்டாட சொல்லவில்லையே.. தன்னளவில் வீட்டில் மகிழ்ச்சியாக இருப்பதை தவறென்று சொல்ல முடியாதே என்று தானே சொல்கிறேன்?

என்ற வாதத்ததை வைக்கிறார்.

இதுவும் பல குழப்பங்களுக்கு வழிவகுக்கின்ற அபத்தமான விளக்கம் !

தனது வீட்டில் தன் குடும்பத்தாரோடு, தன் பிள்ளைகளோடு ஒன்றை செய்யலாம் எனில் அதை பகிரங்கமாக ஊரறியவும் செய்யலாம்.
பகிரங்கமாக செய்யக்கூடாது எனில் அதை தன் வீட்டிலும் தான் செய்யக் கூடாது.

இது தானே அறிவுப்பூர்வமான நிலைபாடாக இருக்கும்?

இதற்கு பதில் என்ற பெயரில், நஃபில் தொழுகையை என்னளவில் செய்யலாம், அதையே அனைவரும் சேர்ந்து செய்தால் அது பித் அத்தாகி விடுமல்லவா அது போல.. என பொருந்தாத உதாரணத்தை வேறு கூறுகிறார்.

பிறந்த நாள் கூடும் என அதை நியாயப்படுத்தும் போது மற்றதெல்லாம் மார்க்க விஷயம், இது உலக விஷயம் என வியாக்கியானம் பேசியவர்,
தன்னளவில் கொண்டாடலாம், கூட்டாக தான் கொண்டாடக் கூடாது என சொல்வதற்கு என்ன முகாந்திரம் என கேட்கும் போது
நஃபில்-பித்அத் என மார்க்கத்தை ஆதாரமாக காட்டுவது வேடிக்கை யான முரண்!

அடுத்ததாக,

பிறந்த நாளை ஒரு விழாவாக ஊரறிய செய்யக் கூடாது என்கிறார்.
அதற்கு காரணம் கேட்டால் என்ன சொல்கிறார்?
அது பிற மத கலாச்சாரமாகி விடும் என்றா?
அப்படி அவர் சொல்லவில்லை.

அது கூடாது என சொல்வதற்கு அவர் முன்வைக்கும் காரணம் –

  1. பண்டிகையாக ஒரு நாளை அனுஷ்டிக்க நம்முன் இரண்டு ஈத் மட்டும் தான் உள்ளது.
    ஆகவே பிறந்த நாள் எனும் கொண்டாட்டம் கூடாது என்பது இவர் சொல்லும் ஒரு காரணம்.
  2. விருந்து என ஊரறிய செய்வதற்கு நம் முன் இருக்கும் அனுமதி வலிமா, அகீகா மற்றும் புதுமனை புகுவிழா ஆகியவை தான்..எனவே பிறந்த நாள் விருந்து கூடாது எனவும் சொல்கிறார்.

நமக்கு விருந்தாக அனுமதிக்கப்பட்டது வலிமா, அகீகா மற்றும் புதுமனை புகுவிழா ஆகியவை தான் என்பதால் பிறந்த நாள் விருந்து கூடாது என சொல்வது ஏற்கத்தக்க வாதமா?

அப்படியென்றால், இந்த மூன்றை தவிர ஒருவன் தன் வாழ்வில் பெறும் எந்தவொரு மகிழ்ச்சிக்காகவும் எந்தவொரு சூழலிலும் தன் நண்பர்களுக்கோ உறவுகளுக்கோ எந்த விருந்தும் வைக்கக் கூடாதா?

எனக்கு வேலை கிடைத்து விட்டது,
எனக்கு வெளிநாடு செல்ல விசா கிடைத்து விட்டது..
தொழிலில் இந்த வருடம் அபிவிருத்தி ஆகி விட்டது ,
அலுவலகத்தில் போனஸ் கிடைத்து விட்டது…
என்ற சந்தோஷ மிகுதியில்நம் சொந்தங்களுக்கும் நண்பர்களுக்கும் விருந்தளித்தால் அது ஹராமா??

பண்டிகை என்றால் 2 தான், விருந்து என்றால் அது 3 தான்.. என்று சொல்லி இவையெல்லாம் தடுக்கப்பட தான் வேண்டுமா?

மேற்சொன்ன காரணங்களில் இவர் உண்மையாளர் என்றால் இது போன்ற இதர விருந்துகள் அனைத்துமே ஹராம் என்று சொல்ல வேண்டும்.

அப்படி சொன்னால் தான் பிறந்த நாளை ஊரறிய செய்யக் கூடாது என கூறுவதற்கு இவர் முன்வைக்கும் காரணங்கள் ஏற்புடையதாகும். சரி தானே?

அல்லாமல், இவராக எப்படி ஊரறிய செய்யக் கூடாது என்பார்?

அடுத்து, ஏழைகள் பார்த்து ஏங்கி விடுவார்கள் அல்லவா.. என்கிற ஒரு காரணத்தை சொல்கிறார்.
இது இன்னும் அபத்தம் !

ஏழைகள் ஏங்கிப் போவார்க்ள் என்றால் அகீகாவும் தான் ஊரறிய செய்யதே என சொல்ல வேண்டும். புதுமனை விருந்தும் கொடுக்காதே என்று சொல்ல வேண்டும்.

“நான் தெரு ஓரத்தில் படுத்துக் கிடக்கிறேன், இவன் பக்கத்துல மாளிகை ஒன்றை கட்டுனதும் இல்லாம ஆயிரம் பேருக்கு பிரியாணி வேற போடுறான்..” என்று அதை பார்த்தும் தான் ஒரு ஏழை ஏங்குவான்.
அப்ப அதையும் தானே பகிரங்கமாக செய்யாதே என்று சொல்ல வேண்டும்?

மார்க்கம் தடுக்காததை நாம் தடுக்க கூடாது என்று, வீட்டில் கொண்டாடுவதற்கு வியாக்கியானம் சொல்கிறாரே,
அதே போன்று பகிரங்கமாக செய்ய மார்க்கம் தடுக்காத போது (இவர் வாதப்படி)
நாமாக எப்படி ஏழை ஏங்கிப் போய் விடுவான் என்கிற மனோ இச்சை காரணங்களைக் கூறி தடுக்க முடியும்?

வீட்டில் பிரியாணி சமைத்தாலும் பக்கத்து வீட்டு ஏழைக்கு மணம் அடிக்கும்.. அப்போதும் அவர்களும் ஏங்கித் தான் போவார்கள்,
எனவே வீட்டிலும் கொண்டாடாதீர்கள் என்று ஏன் சொல்லவில்லை?

நம்மிடம் கேட்டால் பிறந்த நாள் கொண்டாட்டம் என்பதே பிறமத கலாச்சாரம் .. எனவே அது மொத்தத்திற்கும் கூடாது என சொல்லி விடுவோம்..!

அந்த ஆதாரம், பொதுவில் கொண்டாடக் கூடாது என்பதற்கும் பதிலாகி விடும், வீட்டில் கொண்டாடக் கூடாது என்பதற்கும் பதிலாகி விடும்..!

அதே சமயம், பகிரங்கமாக கொண்டாட தான் தடை,
வீட்டில் கொண்டாட தடையில்லை என பிரித்துக் கூற இவர் காட்டும் மார்க்க ஆதாரம் என்ன????

என்ன அடிப்படையில் விழாவாக, பகிரங்கமாக பிறந்த நாளை கொண்டாடக் கூடாது என்கிறார் இவர் ?

இது மனோ இச்சையின்படி எடுக்கப்படும் முடிவல்லாமல் வேறென்ன??

ஆக்கம்: நாஷித் அஹ்மத்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed