*இஸ்லாத்தை ஏற்ற யூதர்*

————————————

*இது அல்லாஹ்விடமிருந்து வந்திருந்து, இஸ்ராயீலின் மக்களில் ஒரு சாட்சியாளர் இது போன்றதற்கு சாட்சி கூறி நம்பிக்கையும் கொண்ட நிலையில் நீங்கள் (இதை) மறுத்து அகந்தை கொண்டால் (என்னவாகும் என்பதற்குப்) பதில் சொல்லுங்கள்!* என (நபியே!) கேட்பீராக! அநீதி இழைக்கும் கூட்டத்துக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.

(அல்குர்ஆன் *46:10)*

அவ்ஃப் இப்னு மாலிக் (ரலி) அறிவிக்கிறார்கள்:

ஒருநாள் நான் நபி (ஸல்) அவர்களுடன் சென்றேன். நாங்கள் இருவரும் யூதர்களுக்குரிய திருவிழா நாளில் மதீனாவில் உள்ள அவர்களின் மடாலயத்திற்குள் நுழைந்தோம். நாங்கள் அவர்களிடம் நுழைந்ததை அவர்கள் வெறுத்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் அவர்களிடம் *யூத சமூகமே! (உங்களில்) “வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத்தவிர வேறுயாருமில்லை. முஹம்மத் அல்லாஹ்வின் தூதர்* என்று சாட்சி கூறும் பன்னிரண்டு நபர்களை எனக்குக் கூறுங்கள். (அப்படி நீங்கள் தெரிவித்தால்) வானம் எனும் முகட்டின் கீழுள்ள *ஒவ்வொரு யூதரின் மீதும், அவர் மீது தான் கொண்ட கோபத்தை அல்லாஹ் அழித்து விடுவான்* என்று கூறினார்கள்.

அவர்கள் வாய்பொத்தி மவுனிகளாக இருந்தார்கள். அவர்களில் ஒருவர் கூட நபியவர்களுக்குப் பதிலளிக்கவில்லை. பிறகு மீண்டும் அவர்களிடம் கேட்டார்கள். அவர்களில் ஒருவரும் நபியவர்களுக்குப் பதிலளிக்கவில்லை.

பிறகு மூன்றாம் முறையும் கேட்டார்கள். அவர்களில் யாரும் நபியவர்களுக்குப் பதிலளிக்கவில்லை.

அப்போது நபியவர்கள் *நீங்கள் (பதிலளிக்க) மறுத்துவிட்டீர்கள். நீங்கள் நம்பினாலும் மறுத்தாலும் அல்லாஹ்வின் மீது சத்தியமாக, நானே ஹாஷிர் (ஒன்று திரட்டுபவர் ஆவேன்), நான்தான் ஆகிப் (இறைத்தூதர்களில் இறுதியானவர் ஆவேன்), நான்தான் (முந்தைய வேதங்களில் கூறப்பட்ட) தேர்ந்தெடுக்கப்பட்ட நபியாவேன்* என்று கூறிவிட்டுப் பிறகு திரும்பினார்கள். நானும் அவர்களுடன் திரும்பினேன்.

நாங்கள் (அங்கிருந்து) வெளியேறுவதற்கு எத்தனித்த போது எங்களுக்குப் பின்னால் இருந்து ஒரு மனிதர் *முஹம்மதே அப்படியே நில்லுங்கள்* என்று அழைத்தார்.

பிறகு அந்த மனிதர் முன்னோக்கி வந்து *யூதர்களே! உங்களில் மிகவும் கற்றறிந்த மனிதர் யார்?* எனக் கேட்டார்.

அதற்கவர்கள் *அல்லாஹ்வின் மீது ஆணையாக! எங்களில் உம்மை விட அல்லாஹ்வின் வேதத்தை மிகவும் கற்றிந்தவரும், ஞானமிக்கவரும் வேறு யாருமில்லை. உமக்கு முன்னால் உம்முடைய தந்தைக்கு மேல் வேறுயாருமில்லை. உமது தந்தைக்கு முன்னால் உமது பாட்டானாருக்கு மேல் வேறு யாருமில்லை* என்று கூறினார்கள்.

(யூதர்கள் இவ்வாறு கூறியதும் அந்த மனிதர்) *நான் இவருக்காக அல்லாஹ்வை சாட்சியாக்கி கூறுகிறேன். தவ்ராத்தில் கூறப்பட்டதாக நீங்கள் காண்கிறீர்களே அந்த அல்லாஹ்வின் நபி இவர் தான்* என்று கூறினார்.

உடனே யூதர்கள் *நீர் பொய்யுரைத்துவிட்டீர்* என்று கூறி அவருடைய பேச்சிற்கு அவரிடம் மறுப்பு தெரிவித்தனர். அவரைப் பற்றி மிகக் கெட்டதைக் கூறினர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (யூதர்களை நோக்கி) *நீங்கள்தான் பொய்யுரைத்தீர்கள். உங்களின் பேச்சு ஏற்கப்படாது. சற்று முன்புதான் அவர் மீது நல்லவற்றைக் கூறி போற்றிப் புகழ்ந்தீர்கள். அவர் நம்பிக்கை கொண்டதும் அவரை பொய்யுரைத்துவிட்டார் என்கிறீர்கள். அவர்மீது (பொய்யாக) கூறவேண்டியவற்றை எல்லாம் கூறிவிட்டீர்கள். எனவே உங்களின் பேச்சு ஏற்க்கப்படாது* என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர், நான், அப்துல்லாஹ் இப்னு ஸலாம் ஆகிய நாங்கள் மூவரும் வெளியேறினோம்.

அப்போதுதான் அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி) தொடர்பாக *இது அல்லாஹ்விடமிருந்து வந்திருந்து, இஸ்ராயீலின் மக்களில் ஒரு சாட்சியாளர் இது போன்றதற்கு சாட்சி கூறி நம்பிக்கையும் கொண்ட நிலையில் நீங்கள் (இதை) மறுத்து அகந்தை கொண்டால் (என்னவாகும் என்பதற்குப்) பதில் சொல்லுங்கள்!* என (நபியே!) கேட்பீராக! அநீதி இழைக்கும் கூட்டத்துக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்” (*49:10)* என்ற வசனத்தை அல்லாஹ் இறக்கி வைத்தான்.

நூல்: அஹ்மத் *(22859)*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed