நிர்வாணமாக குளிப்பது உளூ செய்வது கூடுமா?

கேள்வி கடமையான குளிப்பை நிர்வாணமாக குளிப்பதும் நிர்வாணமாக உளுச் செய்வதும் கூடுமா?

கூடாது.

ஒருவர் மற்றவரின் பார்வை படும்படி குளிக்கும் போது நிர்வாணமாகக் குளிப்பது அறவே தடுக்கப்பட்டதாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு மனிதர் வெட்ட வெளியில் கீழாடை இல்லாமல் குளிப்பதைப் பார்த்தார்கள். உடனடியாக மிம்பரில் ஏறி அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றினார்கள். பிறகு நிச்சயமாக அல்லாஹ் வெட்கப்படக் கூடியவனும் (தனக்கு) திரையேற்படுத்திக் கொள்பவனும் ஆவான். அவன் வெட்கத்தையும் திரையிட்டுக் கொள்வதையும் விரும்புகின்றான். உங்களில் ஒருவர் குளித்தால் அவர் திரையிட்டுக் கொள்ளட்டும்.

அறிவிப்பவர் யஃலா பின் உமைய்யா (ரலி)
நூல் அபூதாவூத் (4012)

மேலும் ஒருவர் தனியாக குளியலறையில் குளிக்கும் போதும் சரி அல்லது தனிமையில் இருக்கும் போதும் சரி தன்னுடைய அந்தரங்கத்தை வெளிப்படுத்தாமல் இருப்பது இறையச்சத்தின் அடையாளமாகும்.

பின்வரும் ஹதீஸிலிருந்து இதனைத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

“அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எங்களுடைய மானங்களை யாரிடம் மறைக்க வேண்டும்? யாரிடம் மறைக்க வேண்டியதில்லை?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “உன்னுடைய மனைவி அல்லது உனது அடிமைப் பெண்கள் ஆகியோரிடத்தில் தவிர மற்றவரிடம் உனது மானத்தை மறைத்துக் கொள்” என்று சொன்னார்கள். “ஒரு மனிதர் இன்னொரு மனிதருடன் இருக்கும் போது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “முடிந்த அளவுக்கு மற்றொருவர் (உன்) மானத்தை பார்க்காதவாறு நடந்து கொள்” என்றார்கள். “ஒருவர் தனியாக இருக்கும் போது?” என்று நான் கேட்டதற்கு “அல்லாஹ் வெட்கப்படுவதற்கு மிகவும் தகுதியானவன்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : முஆவியா பின் ஹைதா (ரலி)
நூல் : திர்மிதி 2769

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed