*நன்மைக்குத் துணைபுரிவதற்கும் நற்கூலி*

எந்தவொரு நற்செயலாக இருப்பினும் அதைச் செய்வதற்காக வேண்டி பிறருக்குத் துணைபுரிந்தால், அதன்மூலம் செய்பவருக்கு கிடைப்பது போன்ற நற்கூலி அவருக்கு உதவியவருக்கும் கிடைக்கும்.

ஆலோசனை அளிப்பது, அறிவுரை வழங்குவது, வழிமுறை சொல்வது, பொருளுதவி செய்வது, பொருளாதாரம் கொடுப்பது என்று அதற்கு எவ்வகையில் உதவினாலும் இதுபோன்று நன்மை கிடைக்கும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், *யார் இஸ்லாத்தில் ஓர் அழகிய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதற்குரிய நன்மையும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் நன்மையும் உண்டு; அதற்காக அவர்களது நன்மையில் எதுவும் குறைந்துவிடாது.*

அவ்வாறே, *யார் இஸ்லாத்தில் ஒரு தீய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதன் பாவமும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் பாவமும்(தன்படி செயல்பட்ட)வர்களின் பாவத்திலிருந்து எதுவும் குறையாமல் உண்டு*’’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி)

நூல்: முஸ்லிம் (1848)

நபி (ஸல்) அவர்கள் தம்மிடம் *யாசகம் கேட்பவர்அல்லதுதேவையுடையவர்யாரேனும் வந்தால் (தம் தோழர்களை நோக்கி), “(இவருக்காக என்னிடம்) பரிந்துரை செய்யுங்கள். அதனால் உங்களுக்கும் நற்பலன் அளிக்கப்படும். அல்லாஹ் தன் தூதரின் நாவால் தான் நாடியதை நிறைவேற்றுகின்றான்’* என்று கூறுவார்கள்.

அறிவிப்பவர்: அபூமூசா (ரலி)

நூல்: புஹாரி (6028), (7476)

*ஒரு பெண், தனது வீட்டிலுள்ள உணவைப் பாழ்படுத்தாமல், (பசித்தவர்களுக்குக் கொடுத்து) செலவுசெய்தால், (அப்படி) செலவு செய்ததற்காக (அவளுக்குரிய) நற்பலன் அவளுக்கு கிடைக்கும்! (அந்த உணவைச்) சம்பாதித்தற்கான நற்பலன் அவளது கணவனுக்கு உண்டு! கருவூலப் பொறுப்பாளருக்கும் அதுபோன்ற (நற்பலன்) கிடைக்கும்! ஒருவர் மற்றவரின் நற்பலனில் எதனையும் குறைத்துவிட மாட்டார்* என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புஹாரி (2065)

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, *என் வாகனப் பிராணி மடிந்துவிட்டது. எனவே, நான் ஏறிச்செல்வதற்கு எனக்கு வாகனப் பிராணி தாருங்கள்’* என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், *என்னிடம் (வாகனப் பிராணி) இல்லை* என்று கூறினார்கள்.

அப்போது மற்றொரு மனிதர், “*அல்லாஹ்வின் தூதரே! இவரை வாகனத்தில் ஏற்றியனுப்பும் ஒருவரை நான் இவருக்கு அறிவித்துக் கொடுக்கிறேன்*’’ என்று கூறினார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “*நன்மைக்கு வழிகாட்டியவருக்கும் அதைச் செய்தவருக்குக் கிடைப்பதைப் போன்ற நற்பலன் கிடைக்கும்*‘’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்:அபூமஸ்ஊத் அல்அன்சாரீ (ரலி)

நூல்: முஸ்லிம் (3846)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் *பனூ லஹ்யான்குலத்தாரை நோக்கிப் படைப் பிரிவொன்றை அனுப்பியபோது, “உங்களில் ஒவ்வோர் இரண்டு பேரிலும் ஒருவர் புறப்படட்டும்*‘’ என்று கூறினார்கள்.

பிறகு, (படைப் பிரிவில் செல்லாமல் ஊரில்) தங்கியவரிடம் *உங்களில் யார் படை வீரர் புறப்பட்டுச் சென்ற பின் அவருடைய குடும்பத்தார் விஷயத்திலும் அவரது செல்வம் விஷயத்திலும் நலம் பேணி நடந்துகொள்கிறாரோ அவருக்கும் புறப்பட்டுச் சென்ற படைவீரருக்குக் கிடைக்கும் நற்பலனில் பாதியளவைப் போன்றது கிடைக்கும்*‘’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்: முஸ்லிம் (3851)

*யார் அல்லாஹ்வின் பாதையில் போர் புரியும் ஒருவருக்குப் பயண வசதி செய்து கொடுக்கிறாரோ அவரும் அறப்போரில் பங்கு பெற்றுவிட்டார். யார் அறப்போர் வீரர் புறப்பட்டுச் சென்ற பின் அவருடைய வீட்டாரின் நலன் காக்கிறாரோ அவரும் அறப்போரில் பங்கு பெற்றுவிட்டார்* என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸைத் பின் காலித் (ரலி)

நூல்: முஸ்லிம் (3848)

இவ்வாறு, நற்காரியங்களைச் செய்வதற்குத் துணைபுரிவது என்பது சாதாரண ஒன்றல்ல. நாமெல்லாம் நன்மைகளைக் கொள்ளையடிக்க மார்க்கம் காட்டும் மகத்தான மாபெரும் வழிமுறை.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed