தாமதமாக இமாமுடன் சேர்பவர் எப்படி தொழுவது?

ஜமாஅத் தொழுகையில் சில ரக்அத்கள் முடிந்த நிலையில் தாமதமாக வந்து சேர்பவர் இமாமைப் பின்பற்றும் போது சில விஷயங்களில் எவ்வாறு நடந்து கொள்வது என்பதிலும், இமாம் ஸலாம் கொடுத்து முடித்தவுடன் விடுபட்டவைகளை எவ்வாறு நிறைவேற்றுவது என்பதிலும் கருத்து வேறுபாடுகள் உள்ளன.

இமாம் இரண்டாம் ரக்அத்தில் நிற்கும் போது ஒருவர் வந்து சேர்கிறார். இமாமுக்கு இரண்டாவது ரக்அத் என்பதால் தாமதமாக வந்தவருக்கும் அது இரண்டாவது ரக்அத் தான். அவருக்கு விடுபட்டது முதல் ரக்அத் தான் என்று சில அறிஞர்கள் வாதிடுகின்றனர். இமாம் ஸலாம் கொடுத்த பின் எழுந்து தொழுவது முதல் ரக்அத் ஆகும் எனவும் கூறுகின்றனர்.

இமாம் இரண்டாவது ரக்அத்தில் இருக்கும் போது ஒருவர் வந்து ஜமாஅத் தொழுகையில் சேர்ந்தால் அது இமாமுக்கு இரண்டாம் ரக்அத் என்றாலும் தாமதமாக வருபவருக்கு அது முதல் ரக்அத் தான்.

எனவே இமாம் ஸலாம் கொடுத்த பின் எழுந்து தொழுவது நான்காம் ரக்அத் ஆகும் என்று வேறு சில அறிஞர்கள் கருதுகின்றனர்.

இதில் எந்தக் கருத்து சரியானது? என்பதைப் பார்க்கலாம்

இமாமைப் பின்பற்றும் போது இமாம் இருப்பில் அமர்ந்தால் தாமதமாக வந்தவரும் அமர வேண்டும்.

இதை இரு சாராரும் ஏற்றுக் கொள்கிறார்கள்.

தாமதமாக வருபவருக்கு அது முதல் ரக்அத் என்றால் முதல் ரக்அத்தில் இருப்பு இல்லையே? தாமதமாக வந்தவர் இருப்பில் அமர்வதால் அவருக்கு அது இரண்டாவது ரக்அத் ஆகிறது என்ற கருத்து இதில் இருந்து ஏற்படுகிறது. முதல் ரக்அத் தான் விடுபட்டுள்ளது என்று ஆகிறது.

இதே மனிதர் இமாம் ஸலாம் கொடுத்த பின் எழுந்து விடுபட்ட ஒரு ரக்அத்தைத் தொழுகிறார். அப்படி எழுந்து தொழும் போது அவர் கடைசி இருப்பில் இருப்பது போல் அமர்ந்து முழுமையாக அத்த்ஹிய்யாத் ஓதி ஸலாம் கொடுக்க வேண்டும்.

இதையும் இரு சாராரும் ஏற்றுக் கொள்கிறார்கள்.

இவர் எழுந்து தொழுவது முதல் ரக்அத் என்றால் முதல் ரக்அத்துக்கு இருப்பும், அத்தஹிய்யாத்தும் இல்லையே? இவர் அத்தஹிய்யாத் ஓதி ஸலாம் கொடுப்பதால் இது தான் அவருக்கு கடைசி ரக்அத் என்று ஆகிறது.

அவர் இமாமுடன் சேர்ந்து தொழுதது இரண்டாம் ரக்அத் அல்ல. இமாமுக்கு இரண்டாவது ரக்அத் என்றாலும் இவருக்கு அது முதல் ரக்அத் தான் என்ற கருத்து இதனால் ஏற்படுகிறது.

இரண்டுக்கும் இப்படி சமமான ஆதாரங்கள் உள்ளன.

ஆயினும் முரண்பட்ட இரண்டும் சரியானதாக இருக்க முடியாது. இரண்டில் ஒன்று தான் சரியானதாக இருக்க முடியும். இதைக் கவனத்தில் கொண்டு சிந்திக்கும் போது இரண்டாவது கருத்து தான் சரியானது என்ற முடிவுக்கு வர முடியும்.

பொதுவாக எந்த வணக்கமானாலும் அதை இடையில் இருந்து தொடங்க முடியாது. இரண்டாவது ரக்அத்தைத் தொழுது விட்டு முதல் ரக்அத் தொழ முடியாது. அல்லாஹ் எந்த வரிசைப்படி கடமையாக்கினானோ அந்த வரிசைப்படி தான் தொழ வேண்டும் என்பது பொதுவான புரிதலாகும்.

இதற்கு ஹதீஸ்களிலும் ஆதாரம் உள்ளது

தொழுகையின் திறவுகோல் (உளூ எனும்) தூய்மையாகும். தொழுகையின் துவக்குதல் முதல் தக்பீர் ஆகும். தொழுகையை முடித்தல் ஸலாம் கொடுப்பதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்கள் : அபூதாவூத் 61

ஒருவர் எப்போது முதல் தக்பீர் கூறுகிறாரோ அப்போது தான் அவரது தொழுகை ஆரம்பமாகிறது. அதுதான் அவருக்கு முதல் ரக்அத் ஆகும்.

ஸலாம் கொடுப்பது தான் இறுதியாகும் என்பதால் இமாம் ஸலாம் கொடுத்த பின் எழுந்து தொழுவது தான் அவருக்கு கடைசி ரக்அத் ஆகும்

என்று இந்த ஹதீஸில் இருந்து அறிகிறோம்.

அப்படியானால் இரண்டாம் ரக்அத்தில் இமாம் அமரும் போது தாமதமாக வந்தவரும் ஏன் அமர வேண்டும் என்ற கேள்விக்கு என்ன விடை?

ஒருவர் இமாமைப் பின்பற்றித் தொழும் போது . இமாம் செய்வது போல் செய்தால் தான் பின்பற்றுதல் ஏற்படும். அப்படி இல்லாவிட்டால் அவர் தனியாகத் தொழுதவராக ஆகிவிடுவார். இந்தக் காரணத்துக்காகவே இமாம் செய்வது போல் தாமதமாக ஜமாஅத்தில் சேர்பவரும் செய்கிறார்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் இவ்வாறு தான் நமக்குக் கட்டளையிட்டுள்ளனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குதிரையில் ஏறியபோது கீழே விழுந்து அவர்களது வலப் புற விலாவில் சிராய்ப்பு ஏற்பட்டது. எனவே உட்கார்ந்து தொழுவித்தார்கள். நாங்களும் அவர்களுக்குப் பின்னால் உட்கார்ந்து தொழுதோம். தொழுகை முடிந்த போது இமாம் பின்பற்றப்படுவதற்காகவே நியமிக்கப்பட்டுள்ளார்; அவர் நின்று தொழுதால் நீங்களும் நின்று தொழுங்கள்; அவர் ருகூவு செய்யும் போது நீங்களும் ருகூவு செய்யுங்கள்; அவர் நிமிரும் போது நீங்களும் நிமிருங்கள்; அவர் சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்’ (தன்னைப் புகழ்ந்தோரின் புகழுரையை இறைவன் ஏற்றுக்கொள்கிறான்.) என்று சொன்னால் நீங்கள் ரப்பனா ல(க்)ல் ஹம்து’ (எங்கள் இறைவா! உனக்கே புகழ் அனைத்தும்) என்று சொல்லுங்கள். அவர் நின்று தொழுதால் நீங்களும் நின்று தொழுங்கள். அவர் உட்கார்ந்து தொழுதால் நீங்கள் அனைவரும் உட்கார்ந்து தொழுங்கள் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல் : புகாரி 689

அபூஅப்தில்லாஹ் (புகாரீயாகிய நான்) கூறுகின்றேன்:

அப்துல்லாஹ் பின் அஸ்ஸபீர் அல்மக்கீ அல்ஹுமைதீ அவர்கள் கூறினார்கள்:

இமாம் உட்கார்ந்து தொழுதால் நீங்களும் உட்கார்ந்து தொழுங்கள் என்று முன்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லி இருந்தார்கள். பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுத போது மக்கள் நின்று தொழுதனர். அவர்களை உட்காருமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பணிக்கவில்லை. கடைசியானதையே எடுத்துக் கொள்ளவேண்டும்.

ஸமி அல்லாஹு லிமன் ஹமிதா என்று இமாம் சொல்லும் போது மட்டும் ரப்பனா லகல் ஹம்து கூறவேண்டும். மற்ற விஷயங்களில் இமாமை அப்படியே பின்பற்ற வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்த ஹதீஸில் இருந்து அறிகிறோம்.

மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் ஓர் அறிவிப்பில் “இமாம் ஓத ஆரம்பித்தால் நீங்கள் வாய்மூடி இருங்கள்” என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

நூல் : முஸ்லிம் 680

இமாம் ஓதும் போது அவரைப் பின்பற்றி நாமும் ஓதக் கூடாது. மாறாக அவர் ஓதுவதைச் செவிமடுக்க வேண்டும். இதைத் தவிர மற்ற விஷயங்களில் இமாமை அப்படியே பின்பற்ற வேண்டும் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது.

எனவே இமாமைப் பின்பற்ற வேண்டும் என்ற காரணத்துக்காகவே இமாம் உட்காரும் போது தாமதமாக வந்தவரும் உட்கார்கிறார். அவர் நிற்கும் போது என்ற காரணத்துக்காகவே இமாம் உட்காரும் போது தாமதமாக நிற்கிறாரே தவிர அவருடைய ரக்அத் எண்ணிக்கை தான் நமக்கும் என்பதற்காக இவ்வாறு செய்யவில்லை.

தொழுகையை துவக்கும் போதும்

ருகூவு செய்யும் போதும்,

ருகூவில் இருந்து எழும் போதும்

இரண்டாம் ரக்அத் முடித்து எழும் போதும்

கைகளை உயர்த்த வேண்டும் என ஹதீஸ்கள் உள்ளன.

இமாமைப் பின்பற்றும் போது முதல் மூன்று விஷயங்களில் குழப்பம் இல்லை.

இரண்டாம் ரக்அத் இருப்பில் அமர்ந்து எழும்போது கைகளை உயர்த்த வேண்டும் என்பதில் இமாமும் ஒரு ரக்அத் முடிந்து தொழுகையில் சேர்ந்தவரும் முரண்படுகிறார்கள்.

இமாம் இரண்டாம் ரக்அத்தில் அமர்ந்து எழுவதால் அவர் கைகளை உயர்த்துவதில் குழப்பம் இல்லை. ஆனால் தாமதமாக வந்தவருக்கு அது முதல் ரக்அத் என்பதால் அவர் கைகளை உயர்த்த வேண்டியதில்லை என்று தோன்றினாலும் இமாமைப் பின்பற்றுவதன் காரணமாக அவரும் கைகளை உயர்த்த வேண்டும்.

அவருக்கு முதல் ரக்அத்தில் உட்காரும் கடமை இல்லை என்றாலும் இமாமைப் பின்பற்றியதால் முதல் ரக்அத்தில் அமர்கிறார். அதுபோல் தான் இமாமைப் போல் அவரும் கைகளை உயர்த்த வேண்டும்.

இமாமின் நான்காவது ரக்அத்தில் ஒருவர் சேர்கிறார். இவருக்கு முதல் ரக்அத் என்றாலும், முதல் ரக்அத்தில் உட்காருதல் இல்லை என்றாலும் இமாமைப் பின்பற்றும் கடமை காரணமாக அவர் இருப்பில் அமர்கிறார்.

இமாம் ஸலாம் கொடுத்த பின் எழுந்து அவர் தொழுவது அவருக்கு இரண்டாம் ரக்அத் என்பதால் அதில் அமர வேண்டும். கடைசி ரக்அத்திலும் அமர வேண்டும். இதன்படி இவருக்கு மூன்று இருப்புகள் ஆகிறது. ஆனாலும் இமாமப் பின்பற்றியதால் தான் ஒரு இருப்பு அதிகமாகி விட்டது.

முதல் இரண்டு ரக்அத்தில் அல்ஹம்து சூராவுடன் மற்றொரு சூரா ஓத வேண்டும்.

மூன்றாம் ரக்அத்தில் ஒருவர் சேரும் போது இமாம் துணை சூரா ஓத அவகாசம் அளிக்க மாட்டார். எனவே அல்ஹம்து மட்டுமே ஓத முடியும். இமாம் ஸலாம் கொடுத்த பின் எழுந்து தொழுவது மூன்றாவது, மற்றும் நான்காவது ரக்அத் என்பதால் அதில் அல்ஹம்து மட்டும் ஓதினால் போதும்.

இமாமைப் பின்பற்றும் போது சில விஷயங்கள் விடுபட்டு விட்டதால் அதனால் பாதிப்பு ஏற்படாது.

நாம் இமாமுடன் எந்த நிலையில் சேர்ந்தாலும் நமக்கு அது தான் ஆரம்பம்; இமாமை நாம் பின்பற்றும் கடமை காரணமாக அவரைப் பின்பற்றி அவரைப் போல் செய்கிறோம். எப்போது இமாமைப் பின்பற்றுதல் முடிகிறதோ நாம் நமது ரக்அத் எண்ணிக்கையைக் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

இதைப் புரிந்து கொண்டால் குழப்பம் இல்லாமல் நமது தொழுகையை அமைத்துக் கொள்ள முடியும்.

இது குறித்து கீழ்க்காணும் ஹதீஸையும் சிந்தியுங்கள்

இகாமத் சொல்வதைச் செவியுற்றால் தொழுகைக்கு நடந்து செல்லுங்கள். அப்போது நிதானத்தையும், கண்ணியத்தையும் கடைப்பிடியுங்கள். விரைந்து செல்லாதீர்கள். உங்களுக்குக் கிடைத்ததைத் தொழுங்கள்; உங்களுக்குத் தவறிப் போனதைப் பூர்த்தி செய்யுங்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி 636

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed