ஜுமுஆ தொழுகை முடிந்து நோயாளிகளைக் குறிப்பிட்டு அவர்கள் குணமடைய பிராத்தனை செய்ய வேண்டி அறிவிப்பு செய்வதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டா?

ஒரு முஸ்லிம் முஸ்லிமான தனது சகோதரரிடம் எனக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள் என்று கேட்பதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளது. நபி (ஸல்) அவர்கள் காலத்தில் எத்தனையோ நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

கறுப்பு நிறப் பெண்மணி ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, “நான் வலிப்பு நோயால் பாதிக்கப்படுகிறேன். அப்போது என் (உடலிலிருந்து ஆடை விலகி) உடல் திறந்து கொள்கின்றது. ஆகவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்றார்.

அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “நீ நினைத்தால் பொறுமையாக இருக்கலாம். உனக்கு சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்குக் குணமளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் பிரார்த்திக்கிறேன்” என்று சொன்னார்கள்.

அதற்கு அந்தப் பெண்மணி, “நான் பொறுமையாகவே இருந்து விடுகிறேன். ஆனால், (வலிப்பு வரும் போது ஆடை விலகி) என் உடல் திறந்து கொள்ளாமல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று சொன்னார். அவ்வாறே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : புகாரி 5652

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என் தந்தையிடம் தங்கினார்கள். அப்போது அவர்களுக்கு அருகே உணவும் வத்பா எனும் ஒரு வகைப் பலகாரமும் வைத்தோம். அதிலிருந்து அவர்கள் உண்டார்கள். பிறகு பேரீச்சம் பழங்கள் கொண்டு வரப்பட்டன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பேரீச்சம் பழத்தைச் சாப்பிட்டுவிட்டு, அவற்றின் கொட்டைகளை தம்மிரு விரல்களுக்கிடையே வைத்துக் கொண்டார்கள்.

பிறகு ஒரு பானம் கொண்டு வரப்பட்ட போது, அதை அருந்தினார்கள். பிறகு மீதியிருந்ததைத் தமக்கு வலப் பக்கத்திலிருந்தவருக்குக் கொடுத்தார்கள். (அவர்கள் புறப்படத் தயாரான போது) என் தந்தை, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாகனத்தின் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டு, “எங்களுக்காகப் பிரார்த்தியுங்கள்” என்று கூறினார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இறைவா! நீ இவர்களுக்கு வழங்கிய உணவில் பரக்கத் எனும் அருள் புரிவாயாக! இவர்களை மன்னித்து, இவர்களுக்குக் கருணை புரிவாயாக!” எனப் பிரார்த்தித்தார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் புஸ்ர் (ரலி)
நூல் : முஸ்லிம் (4149)

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “தாபியீன்களில் (உங்களைத் தொடர்ந்து வரு வோரில்) சிறந்தவர் உவைஸ் எனப்படும் ஒரு மனிதர் ஆவார். அவருக்குத் தாயார் ஒருவர் இருப்பார்; அந்த மனிதருக்கு வெண்குஷ்டம் இருக்கும். (அவரைக் கண்டால்) உங்களுக்காகப் பாவமன்னிப்பு வேண்டிப் பிரார்த்திக்கச் சொல்லுங்கள்’ என்று கூறினார்கள்” என உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : உசைர் பின் ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் (4970)

அன்றாடம் நமது தொழுகையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்காக ஸலவாத் எனும் துஆ செய்கிறோம். இவ்வாறு தனக்காக துஆ செய்யுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நம்மை வலியுறுத்தி உள்ளனர்.

பாங்கு முடிந்தவுடன் எனக்காக துஆச் செய்யுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். அதை ஏற்று நாம் அல்லாஹும்ம் ரப்ப ஹாதிஹித் … என்ற துஆவை பாங்குக்குப் பின்னர் ஓதுகிறோம். இதையும் ஆதாரமாக எடுத்துக் கொள்ளலாம்.

ஜூம்ஆவில் நோய்வாய்ப்பட்டவர்களுக்காக துஆச் செய்யுங்கள் என்று அறிவிப்புச் செய்வது சிறந்த நடைமுறையாக இருக்காது. ஏனெனில் ஒவ்வொரு ஊரிலும் ஏராளமான நோயாளிகள் இருப்பார்கள். அனைவரும் ஜும்ஆவில் இது போன்ற அறிவிப்புச் செய்ய முன்வந்தால் அது தேவையற்ற நடைமுறைச் சிக்கல்களை ஏற்படுத்தும். நாளடைவில் அது ஒரு பித்அத்தாக மாறிவிடும் அபாயமும் உள்ளது. நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இது போன்ற நடைமுறை இருந்ததில்லை.

எனவே அதைத் தவிரந்து கொள்வதே சிறந்ததாகும். அதிகமான மக்கள் வருந்தும் ஒரு நிகழ்வுக்காக எப்போதாவது ஜூம்ஆவில் அறிவிப்புச் செய்தால் அது பிழையாகாது.

ஆனால் அதை வாடிக்கையாகக் கொள்வது சிறந்ததல்ல.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed