சொர்க்கத்தில் இடம் வாங்குவோம்

இந்த உலகத்தில் ஒரு சென்ட் நிலம் வாங்குவதற்கு நாம் படும் பாடு சாதாரணமல்ல. ஒவ்வொரு நாளும், வாடிக்கையாளர்களுடன் பலமணி நேரங்கள் பேசி, அதற்காக உழைத்து, பொருளாதாரத்தை திரட்டி, களவு போகாமல் அதனை பத்திரமாக சேமித்து, டுபாக்கூர் ஆசாமிகளிடம் ஏமாராமல் ஒரு இடத்தை வாங்குவதற்குள் பாதி உயிர் போய் விடும்.

இவ்வளவு சிரமத்திற்கு பின்னர் வாங்கிய அந்த இடம் நிரந்தரமானதா? என்றால் இல்லை. அந்த இடத்தில் கரண்ட், தண்ணீர் என அனைத்தையும் நாமே ஏற்பாடு செய்ய வேண்டும். பிறகு அதைப் பராமரிக்க வேண்டும்.

ஆனால் மறுமையில், சுவனத்தில் நாம ஒரு இடம் வாங்கினால் அதன் மதிப்பும், அதில் கிடைக்கும் சுகங்களுகம் சாதாரணமானவை அல்ல. மிகப் பிரம்மாண்டமானவை. அதற்குத் தான் அதிகமதிகம் ஒரு முஃமின் முயற்சி செய்ய வேண்டும்!

சொர்க்கத்தில் இடம் கிடைப்பது

சொர்க்கத்தில் ஒரு சாட்டை வைக்கும் அளவுக்கு இடம்(கிடைப்பது), உலகத்தையும் அதிலிருப்பவற்றையும் விடச் சிறந்ததாகும்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்  : சஹ்ல் பின் சஅத்(ரலி),

நூல் : புகாரீ 6415

இந்த உலகத்தில் 10சென்ட் வைத்திருப்பவர்கள்கூட இன்றைக்கு 50லட்சம் இன்னும் 5வருடத்தில் 1கோடி என்று மகிழ்ந்து ஆட்டம் போடுவதைப் பார்க்கிறோம். இரவெல்லாம் அதை நினைத்துக்கொண்டு தூங்காமல் சந்தோசத்தில் மிதப்பதைப் பார்க்கிறோம். இதெல்லாம் இருந்து எத்தனை நாட்களுக்கு ஆடுவார்கள்? தமது வீட்டில் ஆசை ஆசையாக வாங்கிய ஏசி இருக்கும். அதை அனுபவிக்க இவர்கள் இருப்பார்களா?

ஆனால் மறுமையில் ஒரு சாட்டை வைக்கக்கூடிய அளவு இடம் கிடைப்பது என்பது இந்த பூமியும் அதில் உள்ளவற்றில் உள்ள அனைத்தையும்விட சிறந்தது என்றால் அந்த சொர்க்க வாழ்க்கைக்கு அழிவே கிடையாது என்பதுதான் இதன் அர்த்தம்.

கேட்டதெல்லாம் கிடைக்கும்

இந்த உலகத்தில் நாம் நினைத்த எதுவும் நடக்கவில்லை, நாம் நினைத்த எதுவும் நமக்கு கிடைக்கவில்லை என்று புலம்பும் மக்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் என்ன தேவையோ, அதெல்லாம் அந்த சொர்க்கவாசிகளுக்குக் கிடைக்கும் என்று அல்லாஹ் சொல்கிறான்.

“அவர்கள் நினைத்தவை அவர்களுக்கு அங்கே உண்டு”.

(அல்குர்ஆன் 25:17)

என்ன கேட்டாலும் நமக்கு அங்கே கிடைக்கும் என்பதை அல்லாஹ் கூறுகிறான். இதற்காக அந்த சொர்க்கத்திற்கு நாம் ஆசைப்பட வேண்டும்.

நோய் இல்லை

சொர்க்க வாழ்க்கையை அனுபவிக்கும்போது எந்தத் தடையும் வரக்கூடாது என்பதற்காகவே அல்லாஹ் நோயில்லாத சொர்க்க வாழ்க்கையை சொர்க்கவாசிகளுக்கு தந்திருக்கிறான்.

“மூக்கு சிந்தமாட்டார்கள். சளி துப்பவும் மாட்டார்கள்.” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்  : அபூஹுரைரா (ரலி),

நூல் : முஸ்லிம் 5451

இந்த உலகத்தில் ஏதேனும் பெரிய நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாக இந்த சிறிய நோய்கள்தான் காரணமாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக ஜலதோஷம்தான் பெரும்பங்கு வகிக்கிறது. ஜலதோஷம் பிடித்துவிட்டால் எந்த வேலையும் மனிதனுக்கு செய்ய முடிவது கிடையாது. மிகவும் சிரமப்படக்கூடிய நிலைமையை அடைகின்றனர். ஆனால் சொர்க்கத்தில் இது போன்ற எந்த பிரச்சனையும் இல்லை என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் நமக்கு சொல்லுகிறார்கள்.

சொர்க்கவாசிகளின் துணைகள்

சொர்க்கவாசிகளுக்கு கிடைக்கின்ற அந்தத் துணைகளை நாம் சிந்தித்துப்பார்த்தால் இந்த உலகத்தில் வாழக்கூடிய ஒவ்வொரு ஆணும் ஒவ்வொரு பெண்ணும் அழகா என்று கேட்கக்கூடிய நிலைமை வரும்.

“அவற்றில் பார்வைகளைத் தாழ்த்திய கன்னியர் இருப்பார்கள். இவர்களுக்கு முன்னர் அவர்களை எந்த மனிதனும், ஜின்னும் தீண்டியதில்லை.” 

(அல்குர்ஆன் 55:56)

“சொர்க்கத்தின் மங்கையரில் ஒருவர் பூமியில் தோன்றினால் வானத்துக்கும் பூமிக்கும் இடையே உள்ள பகுதிகளெல்லாம் ஒளிரும். மேலும், அப்பகுதிகள் அனைத்திலும் நறுமணம் கமழும்.”

அறிவிப்பவர்  : அனஸ்(ரலி),

நூல்: புகாரி 6568

வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், “என் நல்லடியார்களுக்காக எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்த காதும் கேட்டிராத, எந்த மனிதரின் உள்ளத்திலும் தோன்றியிராத இன்பங்களை நான் (சொர்க்கத்தில்) தயார்படுத்தி வைத்துள்ளேன்” என்று கூறினான். எனினும், (சொர்க்கத்தின் இன்பங்கள் குறித்து) அல்லாஹ் உங்களுக்கு அறிவித்ததுள்ளது சொற்பமே! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்  : அனஸ்(ரலி),

நூல்: முஸ்லிம் 5439

எனவே சொர்க்கத்தைப் பெறுவதற்கு அதிகமதிகம் முயற்சி செய்யும் மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள்புரிவானாக!

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed