\\*பலவீனமான ஹதீஸ்களை அறிந்து கொள்வோம்….*\\
*சூரா முல்க் ஓதினால் கப்ரு வேதனை (குறையும்) யிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும்*
நபித்தோழர்களில் ஒருவர் ஒரு கப்ரின் மீது, அது கப்ரு என்று அறியாமல் கூடாரம்
அமைத்தார். அப்போது கப்ரில் ஒரு மனிதர், ”தபாரக்கல்லதீ பி யதிஹில் முல்க்…”
என்று முழுமையாக ஓதி முடித்தார்.
இதைக் கண்ட அந்த மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ”அல்லாஹ்வின் தூதரே! நான் கப்ரு என்று அறியாமல் என் கூடாரத்தை அங்கு அமைத்து விட்டேன். அப்போது கப்ரில் இருந்த ஒரு மனிதர் தபாரக்கல்லதீ பி யதிஹில் முல்க்*… என்று முழுமையாக ஓதி முடித்தார்” என்று கூறினார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், ”அந்த அத்தியாயம் தடுக்கக் கூடியது, கப்ருடைய வேதனையை நீக்கக்கூடியது” என்று கூறினார்கள்.
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: திர்மிதீ 2815
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي الشَّوَارِبِ، قَالَ حَدَّثَنَا *يَحْيَى بْنُ عَمْرِو بْنِ مَالِكٍ* النُّكْرِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي الْجَوْزَاءِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ ضَرَبَ بَعْضُ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم خِبَاءَهُ عَلَى قَبْرٍ وَهُوَ لاَ يَحْسِبُ أَنَّهُ قَبْرٌ فَإِذَا فِيهِ إِنْسَانٌ يَقْرَأُ سُورَةَ تَبَارَكَ الَّذِي بِيَدِهِ الْمُلْكُ حَتَّى خَتَمَهَا فَأَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي ضَرَبْتُ خِبَائِي عَلَى قَبْرٍ وَأَنَا لاَ أَحْسِبُ أَنَّهُ قَبْرٌ فَإِذَا فِيهِ إِنْسَانٌ يَقْرَأُ سُورَةَ تَبَارَكَ الْمُلْكُ حَتَّى خَتَمَهَا . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم “ هِيَ الْمَانِعَةُ هِيَ الْمُنْجِيَةُ تُنْجِيهِ مِنْ عَذَابِ الْقَبْرِ ” . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ . وَفِي الْبَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ .
இதே செய்தி அல்முஃஜமுல் கபீர்லிதப்ரானீ, ஷுஅபுல் ஈமான்லிபைஹகீ, ஹில்யத்துல் அவ்யா ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.
இவை அனைத்திலும் *யஹ்யா பின் அம்ர் பின் மாக்* என்பவர் இடம் பெற்றுள்ளார்.
இவரை இப்னு ஹிப்பான் அவர்கள் விமர்சித்துள்ளார்கள்.
மேலும் புகாரி அவர்கள், ‘ இவர் மீது ஆட்சேபணை இருக்கிறது’ என்று குறிப்பிடுகிறார்கள்.
(நூல்: மீஸானுல் இஃதிதால், பாகம்: 6, பக்கம்: 10)
புகாரி அவர்கள் யாருடைய ஹதீஸை (அறிஞர்களால்) கைவிடப்படுமோ அவருக்குத் தான் ஃபீஹீ நள்ருன் (இவர் மீது ஆட்சேபணை இருக்கிறது) என்று சொல்வார்கள்.
(நூல்: தத்ரீபுர் ராவி பாகம்:1, பக்கம்:349)
மேலும் இவருக்கு அடுத்து இடம் பெறும் இவருடைய தந்தை மீதும் விமர்சனங்கள் உள்ளன.
இப்னு அதீ அவர்கள், இவர் ஹதீஸ் கலையில் நிராகரிக்கப்பட்டவர் என்றும், ஹதீஸைத் திருடுபவர் என்றும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்கள். அபூயஃலா அவர்கள் இவரைப் பலவீனமானவர் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
(நூல்: லுஅஃபாவு வல் மத்ருகீன் இப்னுல் ஜவ்ஸீ, பாகம்: 2, பக்கம்: 231)
எனவே இந்த ஹதீஸ் முற்றிலும் பலவீனமான
செய்தியாகும். இதைக் கொண்டு அமல் செய்யக்கூடாது.